Friday, March 26, 2021

25. பாரதிக்கும் கவியரசருக்கும் நிகழ்ந்த உயிர் வேதியியல் மாற்றங்கள்!

டாக்டர்.மாரோ சாப்படெராவின் காணொளியின் மூலம் நான் புரிந்து கொண்டது: மூளையும் நமது மத்திய நரம்பு மண்டலமான முதுகுத் தண்டும் (CNS-central nervous system) வாலை நீரால்CSF-Cerebrospinal fluid) உட்புறமும் வெளிப்புறமும் குளிப்பாட்டப்படுகிறது 

(எனது எளிய விளக்கம்:'சாம்பார் இட்லி' கப் தான் உங்கள் கபாலமென்று நினைத்துக் கொள்ளுங்கள்!சாம்பார் தான் 'வாலை' இட்லி தான் 'மூளை'). 

நியூரான்களுக்கு வேண்டிய தகவல்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்தப்படுவது, மத்திய நரம்பு மண்டலத்திற்கு தேவையான புரதங்கள் மற்றும் ஹார்மோன்களை எடுத்துச் செல்வது, உடலின் கடிகாரத்தை (circadian rhythm) ஒழுங்குபடுத்துவது, பசியை உணர்த்துவது, செல்கள் மற்றும் மூலக்கூறுகளின் நகர்வதற்கு வழிகாட்டுவது, ஸ்டெம் செல்களை கண்காணிப்பது,கழிவுகளை வெளியேற்றுவது, மூளையையும் மத்திய நரம்பு மண்டலத்தையும் அதிர்வுகளிலிருந்து காப்பது, அயான்களின் சமநிலையைப் பாதுகாப்பது என்பதோடு, ஆற்றல், அதிர்வு, தகவல் முதலியவற்றை வாங்கவும் கொடுக்கவும் வல்லது வாலை  (CSF-Cerebrospinal fluid) என்கிறார்.

அவர் காட்டும் மேற்கோள்கள்:

1)."ஆன்மா வாலைநீரில் (CSF-Cerebrospinal fluid) நீந்துகிறது".

"ஒளியையும், கேளா ஒலியையும் (ultrasonic sound) கூடக் கடத்தக் கூடியது வாலை(CSF-Cerebrospinal fluid)"-டாக்டர்.ரென்டாப் ஸ்டோன்.

2)."தெய்வீக அறிவானது வாலைநீரின் மூலம் மனித உடலில் பாய்ச்சப்பட்டு மனிதனின் செயல்பாடு,நெறி, அறிவு போன்றவை அமையக் காரணமாகிறது"-டாக்டர்.சதர்லேண்ட்.

3).இவை தவிர மூன்றாவது உச்சிக்குழியுடன் (3rd ventricle) தொடர்பு கொள்ளும் பயனியல் சுரப்பி (ஆனந்த சுரப்பி) வெளியிடும் 'டிஎம்டி' மற்றும் 'மெலடோனின்' ஹார்மோன்களைக் கொண்டு செல்வதற்கும் வாலைநீர்(CSF) பயன்படுகிறது என்கிறார்.

மெலடோனின்: இந்த ஹார்மோன் நமக்கு இரவையும் பகலையும் புரியவைத்து, இரவில் வெளிச்சம் குறையும் போது அதிகம் சுரந்து நித்திரையைக் கொண்டுவருகிறது. (மீனாட்சிக்கு இது குறைவாக சுரந்திருக்குமோ? அதனாலேயே அவள் அதிகம் தூங்காது சிறு வயது முதல் விழிப்புடன் இருக்கிறாளோ?)

டிஎம்டி: இந்த ஹார்மோன் மனித உடலில் இயற்கையாகச் சுரப்பதைத் தவிர கஞ்சா,அபின்,எல்எஸ்டி போன்ற தாவரங்களிலிருந்து பெறப்படும் போதை வஸ்துக்களிலும் அதிகம் காணப்படுகிறது. இதுவே நமக்கு அமானுஷ்யமான கனவுகளையும், போதைப் பொருட்களை உட்கொண்டால் தன்நிலையையும் மறக்கச் செய்கிறது (இது அதிகமாக சுரப்பதால் தான் மீனாட்சி சில நேரங்களில் தானாக பேசி சிரித்துக் கொள்கிறாளோ?). அந்த 'தன்னை மறந்த நிலை'யில் தான் அவளுக்கு அறிமுகமில்லாத விஷயங்களும் யார் மூலமாகவோ அல்லது மற்ற பரிமாணங்களில் மூலமாகவோ கற்பிக்கப்படுகிறது என்றே நம்புகிறேன். 'சினஸ்தீஸியா' பிரச்சனையும் இதன் வெளிப்பாடே என்று தோன்றுகிறது. இந்த குறிப்பிட்ட ஹார்மோன் பிறக்கும் போதும், இறக்கும்போதும் நம் உடலில் அதிகம் சுரப்பதாகக் குறிப்பிடுகிறார் டாக்டர்.மாரோ சாப்படெரா. 'டிஎம்டி' அதிகம் சுரந்த காரணத்தால் தான் மரணப் படுக்கையில் இருந்த எனது தாத்தாவிற்கு அமானுஷ்யமான விஷயங்கள் கண் முன் தோன்றியிருக்கலாம்.

 இன்றும் எண்ணற்ற குடும்பங்களில் வயது முதிர்ந்தவர்கள் இறக்கும் தருவாயில் தங்களது குழந்தைப் பருவத்தில் எப்பொழுதோ நடந்த சில விஷயங்களைச் சொல்வது (அதைப் பற்றிய சிந்தனையே அதுவரை அவர்கள் வாழ்நாளில் இருந்திருக்காது), விட்டத்தை பார்த்தபடி யாருடனோ பேசுவது மற்றும் தனது முடிவைப் பற்றி முன்கூட்டியே சொல்வது போன்றவையும் நிகழலாம்!

இடகலை-பிங்கலை-மற்றும் சுழுமுனை நாடி: மேலும் சுவாமி விவேகானந்தர் சொன்னதை மேற்கோள் காட்டுகிறார். அதாவது முதுகில் உள்ள நரம்புத் தொகுதிகளாக 'இடகலை' (negative energy), 'பிங்கலை' (positive energy) என்ற நாடிகள் ஒன்றை ஒன்று பின்னியபடி செல்கின்றன மற்றும் 'சுழுமுனை' நாடியானது இவற்றின் நடுவே நேர்கோட்டில் செல்கிறது என்பதோடு, இம்மூன்று நாடிகளும் பின்னிக் கொள்ளும் ஒவ்வொரு இடமும் சக்கரங்களாக யோகிகள் கருதுவதைக் குறிப்பிடுகிறார். இடகலை நாடியானது பயனியல் (ஆனந்த) சுரப்பியையும், பிங்கலை நாடியானது பிட்யூட்டரி சுரப்பியையும்  சென்றடைவதாக தான் நம்புவதை விளக்குகிறார். மேலும் மூன்றாவது உச்சிக் குழியில் 'குண்டலினி' சக்தி வெளிப்பட்ட பின்பு 'கேசரி' முத்திரையைப் பயன்படுத்தி எவ்வாறு சித்தர்கள் அமுதுண்டு சாகா வரம் பெற்றார்கள் என்பதையும் விஞ்ஞானப்பூர்வமாக விளக்குகிறார்.

மேலும் இடகலை- பிங்கலை  பற்றி தெரிந்துகொள்ள: ராகு பிங்கலை  நாடியையும் (சூரிய நாடி) - கேது இடகலை நாடியையும்  குறிக்கின்றன (சந்திர நாடி). இது குறித்த கட்டுரை இங்கே!

நான் சொல்ல விரும்பும் மேலும் சில விளக்கங்கள்: நமது சித்தர்கள் 'பிரம்ம பத்திரம்' (புகையிலை) மற்றும் 'பதஞ்சலி மூலிகை' (கஞ்சா) போன்றவற்றை மருந்தாகப் பயன்படுத்தி உடலின் 'டிஎம்டி' அளவை அதிகப்படுத்திக் கொண்டு 'பரவசநிலை'யை அடைந்திருக்கிறார்கள். இப்பொழுது புரிகிறதா கிராமத்து பூசாரி ஏன் 'கள்' குடித்துவிட்டு சாமி ஆடியபடி குறி சொல்கிறாரென்று? இதுபோல் தென்அமெரிக்கப் பழங்குடி மக்களும் எல்எஸ்டி போன்ற போதை வஸ்துகளை வழிபாட்டின்போது பயன்படுத்தியிருக்கிறார்கள். 

பாரதிக்கும் கவியரசருக்கும்  உள்ளே நிகழ்ந்த உயிர் வேதியியல் மாற்றங்கள் : போதை வஸ்துக்களை பயன்படுத்திய காரணத்தால் தான் பாரதிக்கு காலம் கடந்து பயணித்து உலகத்தைக் காண முடிந்திருக்கிறது. 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்று சொல்வது, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று கணியன் பூங்குன்றனார் சொன்னது போல் 'அனைத்து உயிர்களும் ஒன்றே' என்ற சித்தர்களின் வாக்கு தானே? 

அதேபோல் ஒவ்வொரு மனிதனும் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் சாகாவரம் பெற்ற பாடல்கள் என்று சொல்வதோடு, ஒவ்வொரு வரியும் தனக்காக எழுதப்பட்டதாக நினைப்பது அவர்களுடைய மனதைத் தொடுவதால் தானே? "கண்ணதாசன் போல் தண்ணி அடித்தால் கவிதை வருமா கழுதைக்கு?"என்று மெல்லிசை மன்னரும் பாடியிருக்கிறாரே?! ஆன்மீக  நம்பிக்கை இல்லாத கண்ணதாசன் அவர்கள் பின்நாளில் ஆன்மீகவாதியாக மாறி  "அர்த்தமுள்ள இந்துமதம்" எழுதியது அவருக்குள் நிகழ்ந்த ஒரு உயிர் வேதியியல் மாற்றமே (bio-chemical reaction).

எனவே ஒருசிலருக்கு  மூளையில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஹார்மோன்களால் நிகழும் சில மாற்றங்கள் அதீத கற்பனையையும், படைப்பாற்றலையும், பேரன்பையும்,காதலையும், இறை பக்தியையும் தூண்டலாம். நன்மை செய்யலாம்!

ஆனால் சிலருக்கோ பழிவாங்கும் உணர்ச்சி,பயம்,மனநல பாதிப்பு,மன அழுத்தம், கனவிலும் நேரிலும் தீய சக்திகள் வந்து மிரட்டுவது, தூக்கத்தில் வேற்றுகிரக வாசிகள் கவர்ந்து செல்வதென பிரச்சனைகளையும் தூண்டலாம். இவற்றிற்கு எல்லாம் காரணம் நாம் முன்பே பார்த்தது போல் தனிப்பட்ட மனிதர்களின் உடலில் உள்ள திரவங்களின் கலவை மற்றும் திடப் பொருட்களான மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் அமைப்பு போன்றவை தானே?

                                                                 நீம் கரோலி பாபா

மேலும் 1960களில் நீம் கரோலி பாபா (ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இவரின் சீடரே!) என்ற இமயமலையிலிருந்த துறவியால் கவரப்பட்ட  ஹார்வேர்டு பல்கலைக்கழக மனவியல்துறை பேராசிரியர் ரிச்சர்ட் ஆல்பர்ட் தன்னை 'ராமதாஸ்' என்று பெயர் மாற்றிக்கொண்டார் (பாபாவைக் காண முதல் முறை நண்பருடன் இமய மலைக்கு வந்த ரிச்சர்ட் நம்பிக்கை இல்லாமல்தான் சென்றிருக்கிறார். ரிச்சர்டைக் கண்ட நீம் கரோலி பாபா "இரவில் வருகின்ற வழியில் வண்டியிலிருந்து இறங்கிய நீ விண்மீன்களுக்கு இடையே உனது இறந்த தாயைத் தேடினாயோ?"என்று கேட்க, பல மைல்களுக்கு அப்பால் நடந்த விஷயம் பாபாவுக்கு தெரிந்ததை அறிந்து அதிர்ந்துபோய் அன்று முதல் அவருடைய சீடராகியிருக்கிறார்). அவர் பல்கலைக்கழகத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான முக்கிய காரணம், அவர் சமயக் கல்வி மாணவர்களுக்கு 'குட் பிரைடே எக்ஸ்பிரிமெண்ட்' என்ற பெயரில் 'சைலசெய்பின்' என்ற காளான் வகை போதை வஸ்துவை வழங்கி இறைவனை அடைய வழி சொன்னதே!

அப்படியானால் இறைவனை அடைய உண்மையிலேயே வழி இருக்கிறதா? ஆம்! நிச்சயம் இருக்கிறது. அவற்றிற்கு நாம் பயன்படுத்த வேண்டிய ஆயுதங்கள் தியானமும்,யோகமுமே. இதற்குக் காலம் அதிகம் ஆகலாம் ('சித்தி' அடைய அதாவது உயர்நிலையை எட்ட 12 ஆண்டுகள் வரை ஆகும் என்கிறார்கள் சித்தர்கள்). தாமதமானாலும் பண்படுத்தப்பட்ட ஒரு நிலத்தில் இயற்கை விவசாயம் செய்வது போல் 'யோகம்' என்ற உரத்தைப் போட்டு உடலையும், 'தியானம்' என்ற நீரைப் பாய்ச்சி மனதையும் முழுமையாகத் தயார்படுத்திக் கொண்டால் நிச்சயம் நம்மால் 'ஞானம்' எனும் பழத்தை அறுவடை செய்யமுடயும் என்பதை ஒரு நடுநிலையாளனாக நான் உறுதியுடன் நம்புகிறேன். யோகிகள் 'நாடி சுத்தி', 'வாலை பூஜை'யின் மூலம் யோகம் செய்ய உடலையும் மனதையும் தயார்படுத்தத் தொடங்குகிறார்கள்.


24. வெள்ளி நாண் -குண்டலினி- தனஞ்ஜெயம்

"தனி மனிதர்களின் சிந்தனை அவர்கள் மூளை + மத்திய நரம்பு மண்டலத்தின் (தண்டுவடம்) அமைப்பு மற்றும் அதில் உள்ள திரவங்களின் அளவைப் பொருத்து முற்றிலும் மாறுபடுகிறது" என்று சொன்னால் எனது கருத்தை அறிவியல் உலகம் நிச்சயம் ஏற்கும்.

வாலை (எ) உச்சி நீரைப் (cerebrospinal fluid) பற்றி எனக்குத் தெரிந்த சில மருத்துவப் பேராசிரியர்களிடம் நான் பேசியதில் எனக்குக் கிடைத்த பதில் "இது  மூளையில் உள்ள உச்சிக் குழிகளில் தோன்றி, மூளையின் உட்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் பரவி அது மூளையை ஒரு 'குஷன்'போல் பாதுகாக்கிறது" என்ற பதிலோடு நின்றுவிட்டது.

எனக்குக் கிடைத்த பதில் போதுமானதாக இல்லை என்ற காரணத்தால் மேற்கொண்டு இணையத்தில் தேடிய பொழுது ஹார்வர்டு மருத்துவ ஆராய்ச்சியாளர், நரம்பியல் நிபுணர்,பேராசிரியர் மருத்துவர், மற்றும் ரேக்கி போன்ற மாற்று மருத்துவ முறைகளையும் கற்றுத்தேர்ந்தவரான டாக்டர்.மாரோ சாப்படெராவின் காணொளியைப் கண்டபோது நான் தேடிய பல விஷயங்களுக்கு விடை கிடைத்தது. அவர் மூளையைப் பற்றியும், மூளை நீரைப் பற்றியும், சித்தர்கள் சொன்ன 'குண்டலினி எழுச்சி'பற்றியும் தெளிவாக அறிவியல்பூர்வமாக விளக்குகிறார்.

அதாவது கரு உருவாகும் போது தாயின் பனிக் குடத்திலுள்ள நீரானது  (amniotic fluid -இது உயிர்கள் உருவாகக் காரணமாக அமைந்த கடல் நீரிலிருந்து வெறும் ஒரு மூலக்கூறு தான் மாறுபட்டுள்ளது என்கிறார்!) கரு உருவாகத் தொடங்கும்போது மெல்லிய கம்பிபோல் வளரும் முதுகுத்தண்டால் மூடப்பட்டு மனித உடலில் வாலை நீராக (CSF-Cerebrospinal Fluid) மாறுகிறது என்கிறார். இதுவே 'நான்' என்ற உணர்வை ஒரு தனி மனிதனுக்குத் தருகிறது.

மூன்றாவது உச்சிக்குழியில் பிட்டியூட்டரி மற்றும் பயனியல் (ஆனந்த) சுரப்பி வெளியிடும் ஹார்மோன்களுடன் இந்நீர் (வாலை) சேர்ந்து நான்காவது உச்சிக் குழிக்கு வருகிறது. இங்கிருந்து மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது ஹார்மோன்களுடன் செறிவூட்டப்பட்ட உச்சிநீரின் ஒரு பகுதி மூளைக்கே மேல்நோக்கிய திருப்பி விடப்படுகிறது. மற்றொரு பகுதி முதுகுத்தண்டை சென்றடைகிறது. சராசரியாக ஒவ்வொரு மனிதனுக்கும் தினசரி குறைந்தபட்சம் அரை லிட்டர் அளவு இந்நீர் சுரக்கும் என்கிறார். மிகுதியான நீரானது நமது உடலால் உறிஞ்சப்பட்டு சிறுநீர் வாயிலாக வெளியேற்றப்பட்டுவிடும் என்கிறார். 

குண்டலினி' சக்தி: அவர் இதை விட முக்கியமாகச் சொல்லும் விஷயம் எனக்கு சித்தர்கள் சொன்ன விஷயத்தை முழுவதுமாக ஒத்திருக்கிறது. அதாவது முதுகுத் தண்டின் அடிப்பகுதியிலுள்ள முக்கோண எலும்பிற்கும் (sacrum-'புனித எலும்பு' என்பார்கள்) குதத்திற்கும் (anus) இடைப்பட்ட மிக நுண்ணிய ஒரு பகுதியில் தான் 'உயிர்' இருக்கிறது என்கிறார். இதையே சித்தர்கள் 'தனஞ்ஜெயம்' என்ற உயிர்க்காற்று என்பார்கள். 

அதாவது தாயின் தொப்புள் கொடி அறுபடும் போது அந்த உயிர் காற்றானது குழந்தையின் முதுகுத் தண்டின் அடியில் சென்று உட்கார்ந்து கொண்டு விடுகிறது என்று சித்தர்கள் சொல்கிறார்கள். இந்தக் காற்றை 'வாசி' போன்ற யோகங்களின் மூலம் படிப்படியாக மேலெழுப்பி; அதேவேளையில் பிட்டியூட்டரி மற்றும் பயனியல்(ஆனந்த) சுரப்பியை தியானம் மற்றும் யோகப் பயிற்சிகளின் மூலம் செரிவூட்டி மூன்றாவது உச்சிக்குழியில் (இதையே 'ஆக்ஞசக்கரம்' என்கிறார்கள்.'நெற்றிக்கண்' என்று குறிப்பிடப்படுவதும் இந்த இடமே!) கொண்டுவந்து நிறுத்தினால் 'தனஞ்ஜெயம்' என்ற அந்தக் காற்று 'குண்டலினி' சக்தியாக மாறும் என்கிறார்கள். இதையேதான்  மருத்துவர் டாக்டர்.மாரோ சாப்படெராவும் வழிமொழிகிறார்.

ஆனால் சிலரோ 'குண்டலினி சக்தி' என்பது விந்தை தலையில் ஏற்றி வைப்பது என்று தவறாகச் சொல்கிறார்கள். அப்படியானால் பெண்களால் எப்படி ஞானம் அடைய முடியும்? இதை இப்படி வேண்டுமானால் புரிந்து கொள்ளலாம்! பொதுவாக யோகிகள் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்கும் போது 'தனஞ்ஜெயம்' என்ற உயிர்க் காற்றை முதுகுத் தண்டின் வழியாக மேலேற்றத் தேவையான உந்து சக்தியை விந்து தரலாம்.வாலையில்(CSF-Cerebrospinal fluid) நீந்தி முதுகுத்தண்டைக் கடந்து மூன்றாவது உச்சிக் குழியை வந்தடைகிறது.

உங்கள் நெற்றிப் பொட்டிலிருந்து நேராக ஒரு கம்பியை உள்ளே செலுத்தி விட்டு, உங்கள் காதுகளில் வழியாக மற்றொரு கம்பியைச் செலுத்தினால், இந்த இரண்டு கம்பிகளும் சந்திக்கும் இடம் தான் மூன்றாவது உச்சிக்குழி அமைந்துள்ள 'மூன்றாவது கண்' பகுதி. அதுவே 'கண்ணாடி மாளிகை', 'கடவுள் இருக்கும் இடம்', 'புருவமத்தி', 'ஆக்ஞ சக்கரம்' என்றும் அழைக்கப்படுகிறது.

கவனத்திற்கு: 



Monday, March 15, 2021

23. சக்தி இல்லையேல் சிவம் இல்லை

 கவனிக்க: நம்மூரைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் 'அமரர்' B.ராமமூர்த்தி அவர்கள் குழந்தை காயத்ரியைப் பற்றிக் குறிப்பிடும்போது 'மூளையில் உள்ள கெமிக்கல்கள்' அதாவது 'திரவங்கள்' தான் அவளின் அதீத அறிவிற்குக் காரணம் என்று  குறிப்பிட்டார் என்பதை முன்பே சொல்லியிருந்தேன்.

ஆனால் டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட் திடப் பொருளான மூளையின் அமைப்பு வித்தியாசமாக அமைவதைப் பற்றி மட்டுமே தான் சொல்லுகிறார். திரவத்தைப் பற்றி எங்கும் சொல்லவில்லை. 

எனது ஆய்வை நான் தொடர்ந்து மேற்கொண்டதில் கிடைத்த விடை 'சக்தி இல்லையேல் சிவம் இல்லை' என்பதே! 

அப்படி மூளையில் என்ன தான் நடக்கிறது?

உச்சிக் குழி 1 மற்றும் 2ல் (ventricle 1 & 2) சுரக்கும் வாலை (எ) உச்சி நீர் (பிளாஸ்மா வகையைச் சேர்ந்த திரவம் என்பதால் இதற்கு நிறம் கிடையாது), மூன்றாவது உச்சிக்குழியை வந்தடைந்து பிட்யூட்டரி சுரப்பி மற்றும் பயனியல் (ஆனந்த்) சுரப்பி வெளியிடும் ஹார்மோன்களுடன் சேர்ந்து கலக்கிறது.மூன்றாவது உச்சிக் குழி மற்றும் மேற்குறிப்பிட்ட சுரப்பிகள் சேர்ந்த அமைப்பைத் தான்  மூன்றாவது கண், கண்ணாடி மாளிகை, கடவுள் வாழும் இடம் என்கிறோம்.பண்டைய எகிப்தியர்கள் 'வல்லூரின் கண்' (Horus eye) என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள்.இறுதியாக நான்காவது உச்சிக்குழியை வந்தடைந்தபின்பு, ஒரு பகுதி முதுகுத்தண்டிற்கும் மற்றோருபகுதி மீண்டும் மூளையின் மேல்பகுதிக்கும் திருப்பி விடப்படுகிறது.

 ('உச்சி நீர் '    மேலேயுள்ள  படத்தில் நீலநிறத்தில் காட்டப்பட்டுள்ளது.இதை இப்படியும் புரிந்துகொள்ளலாம்: பூமியின் மேற்பரப்பிலும் உள்ளேயும் நீர் உள்ளது (இங்கே நீர்: வாலை (எ) உச்சி நீர்[cerebrospinal fluid], நிலம்:மூளை )

பிட்யூட்டரி சுரப்பி மற்றும் பயனியல் (ஆனந்த்)சுரப்பி


'வல்லூரின் கண்' (Horus eye)


எனது கருத்து:

ஒரு ஜீவநதியானது தலையின் உச்சி குழியில் நீர் (வாலை) சுரப்பது போல் மலையில் உண்டாகி, அருவியாகி, வரும் வழியில் காட்டாற்றுடனும் வேறு கிளை நதிகளுடனும் (பிட்யூட்டரி மற்றும் பயனியல் சுரப்பிகள் வெளியிடும் ஹார்மோன்களுடன் சேர்வது போல்) சங்கமிப்பதால் அதன் பண்பு மாறுகிறது. அப்படி நம் மூளையின் மூன்றாவது உச்சிக்குழி(3rd ventricle) போல் பூமியில் நீர் சங்கமிக்கும் இடங்களெல்லாம் புனித இடங்களாகக் கருதப்படுகின்றன.

       திரிவேணி சங்கமம்
                                         
அப்படியானால் அனைத்து நதிகளுமே தண்ணீர்தான் என்னும்போது அவற்றின் பண்பு தனித்துவமாக அமைவதற்குக் காரணம் பூமியாகிய மண்தான். வெவ்வேறு வழித்தடங்களில் வரும் நீர் வண்டல் மண்ணுடன் கலப்பதாலும், மலை உச்சியில் இருந்து கூழாங்கற்களால் வடிகட்டப்பட்டு வரும் தெளிந்த நீர் மூலிகை போன்ற செடிகளில் பட்டு வருவதாலும், ஒவ்வொரு நீரின் பண்பும் வேறுபடும். ஆனால் அவை சங்கமித்த பின் அவற்றின் மொத்த பண்பும் மாறிவிடும். எனவே நதிதான் 'சக்தி' என்றால் 'சிவம்' என்பது நமது உடல்தான். 'சக்தி இல்லையேல் சிவம் இல்லை'என்று சொல்லப்பட்டதும் இதுவே என்று உணர்கிறேன். எனவே மூளையில் உள்ள திரவமான நீரே 'சக்தி' (dynamic energy) மற்றும் திடப் பொருளான மூளை தான் சிவம் (static energy).

இப்பொழுது புரிகிறதா நதிகள் தோன்றுமிடம், பாயுமிடம், சங்கமிக்கும் இடங்களெல்லாம் ஏன் புனிதமாகக் கருதப்படுகிறதென்று? இந்துக்களுக்கு காசி,திரிவேணி சங்கமம், தலைக் காவேரி, ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கப்பட்டினம்,பவானி போன்ற இடங்கள். கிறிஸ்தவர்களுக்கு இயேசு ஜோர்டான் நதியில் ஞான ஸ்நானம் எடுத்த இடம் (இஸ்ரேல் புனிதப் பயணம் செல்பவர்கள் அங்கே இன்றும் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள்) மற்றும் நாசரேத்திலுள்ள மேரி கிணறு. இஸ்லாமியருக்கு மெக்காவிலுள்ள ஜம்ஜம் கிணறும் புனித இடங்களாகக் கருதப்படுகின்றன.


ஜோர்டான் நதியில் ஞான ஸ்நானம்


ஜம்ஜம் கிணறு
                                                  

                                       
                                                                  தலைக் காவேரி




22. யார் இந்த வாலைக் குமாரி (எ) பாலா?

 'வாலைக் குமரியடி கண்ணம்மா' என்று பாரதியாரும் பாட்டெழுதியிருக்கிறாரே? பாரதி பாண்டிச்சேரியில் இருந்தபோது 'குள்ளச் சாமியார்' என்ற யோகியின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அவரின் மூலம் வாசியோகமும் கற்றிருக்கிறார் என்பதை எனது ஆய்வின் மூலம் தெரிந்து கொண்டேன். அப்படியானால் தனது காலத்திற்கு அப்பாற்பட்டு சீரிய சிந்தனையுடன் பெண்கள் முன்னேற்றம், சுதந்திர வேட்கை  போன்றவற்றுடன் இயற்கையை விரும்பியது, நதிகளை இணைத்து நாடு, கண்டம் என்ற எல்லையைத் தாண்டி அனைவரும் ஒன்று என்று சிந்தித்தது,மேலும் 'காக்கை குருவி எங்கள் ஜாதி' போன்ற கருத்துக்களை முன்வைத்ததன் மூலம் பாரதியாரும் ஒரு சித்தரே என்பதை என்னால் உணர முடிகிறது. அவர் சில போதை வஸ்துக்களை பயன்படுத்தினார் என்றும் சொல்லப்படுவதுண்டு. அது எதனால் என்பதை பின்னால் பார்க்கலாம்.

வாலை, பாலா, பாலதிரிபுரசுந்தரி, பராசக்தி, அபிராமி, துர்கை, நாகாத்தம்மன்  கன்னியாகுமரி, பாலமீனாட்சி, அம்பிகை, மனோன்மணி என்று நமது இந்து மதத்திலுள்ள 'அம்பாள்' என்று சொல்லப்படும் அனைத்துப் பெண் தெய்வங்களும் வாலையையே குறிப்பிடுகின்றன. வாலைத் தாய் பத்து வயது பெண்ணாக (குழந்தைக்கும் குமரிக்கும்‌ இடைப்பட்ட வயதில்) பாவடை சட்டை அணிந்து காட்சியளிக்கிறாள்.

                                                                 பாலதிரிபுரசுந்தரி

இந்தப் படத்தைப் பல இடங்களிலும் சிலர் வீட்டுப் பூஜை அறையிலும் நீங்கள் பார்த்திருக்கலாம்."சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்" என்ற திரு. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பாடலும் பாலாவுக்காகப் பாடப்பட்டதே!

பாலா நம் அனைவருக்குள்ளும் இருக்கிறாள். எங்கே?

கீழ்கண்ட காகபுஜண்டர் என்ற சித்தர் எழுதிய பாடலில் இதற்கான விடை உள்ளது. பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

"சென்றேனே உச்சிநீர் தாயேயாகும்

சிரசிலுள்ள நீரெல்லாம் வாலையாகும்

தீயென்றால் மூலக்கனல் உச்சிவாசல்

தீண்டிவிட்டு மேலேறிற் தீபசோதி

சொல்லுமே கபாலத்திற் சேர்ந்தவாசி

சோதியொளி கண்டிடுமே கனலாற்காலால்

நில்லுமே மூலதலம் வாசிகொண்டு

நிமிர்ந்திருந்து பார்க்கவுமே பிடரியேறும்".

பாடலின் பொருள் உங்களுக்கே இந்தப் பதிவை முழுமையாகப் படித்து முடித்தால் விளங்கிவிடும். நான் மேற்கொண்டு எனது ஆய்வைத் தொடர்ந்ததில் நமது சித்தர்கள் இன்றைய மருத்துவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் முன்னோடி என்பதைத்  தெரிந்துகொண்டேன். 

இங்கே 'உச்ச நீர்' என்ற வார்த்தையை மட்டும் கவனிக்கவும். அதாவது நமது தலையில் 4 உச்சிக்குழிகள் (ventricles) உள்ளன. உச்சந்தலையில் இருக்கும் ஒன்று மற்றும் இரண்டாம் உச்சிக் குழிகளின் (Left & Right lateral ventricles OR ventricles 1 & 2) ஊற்று கண்களாய் விளங்கும்‌ க்ளோரிட் பிளக்ஸஸ்(choroid plexus) மூலம் தான் 'உச்சிநீர்' சுரக்கிறது (CSF-Cerebrospinal fluid). இந்த நீர்தான் சித்தர்கள் குறிப்பிடும் 'வாலை'.



இந்த இரண்டு உச்சிக் குழிகளும் தான் (Left & Right lateral ventricles OR ventricles 1 & 2 ) மீனாட்சி, டெம்பிள் கிராண்டின் அம்மையார் போன்ற சவான்ட்களுக்கு இயல்பிலேயே பெரிதாக அமைந்ததைப் பார்த்தோம். இந்தப் பிரச்சனைக்குப் பெயர்தான் மீனாட்சியின் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கால்போகபாலி(colpocephaly). இதை இங்கே மீண்டும் சற்று விரிவாகப் பார்க்கலாம்:

இடப்புறம்: சாதாரண மனித மூளை. 
வலப்புறம்: அம்மையார்  டெம்பிள் கிராண்டினின் மூளை   
             
டெம்பிள் கிராண்டினின் மூளையை விஞ்ஞானிகள் ஸ்கேன் செய்து பார்த்தார்கள். அதில் அவரின்  இடது மூளையின் பின்பகுதி, குறிப்பாக இடது உச்சிக்குழி (left ventricle) அளவில் பெரியதாக உள்ளது. இதனால் மொழி வளர்ச்சிக்கு தேவையான இடது மூளையில் சேதம் ஏற்பட்டு  (அல்லது வளர்ச்சி குன்றி) அவரது பேசும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் இங்கே நான் கவனித்த மற்றொன்று, பாதிப்படைந்த பகுதிகளில் மூளையின் நீர்/திரவம் (Cerebrospinal Fluid) சராசரி மூளையில் இருப்பதை விட அதிக அளவில் தேங்கி உள்ளது (நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளது ). மீனாட்சியின் மருத்துவ அறிக்கையும் கிட்டத்தட்ட இதே பிரச்சனைதான் அவளுக்கும் உள்ளதாகக் காட்டுகிறது.


21. எனக்கு வழிகாட்டிய பாட்டு சித்தரும் இசக்கி சித்தரும்

 ஆட்டிசம் பாதிப்பு,ஹைபர் லெக்ஸியா மற்றும் சவாட்சிண்ட்ரோம் போன்ற பாதிப்புகளையுடைய நான் அறிந்த பெரும்பாலான குழந்தைகள் ஆன்மீகம் மற்றும் யோகா சம்பந்தமான விஷயங்களில் பிறர் சொல்லிக் கொடுக்காமலேயே ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள்.

இங்கே நான் குறிப்பிட விரும்பும் மிக முக்கியமானவர் மீனாட்சியின் யோகா ஆசிரியை: மீனாட்சிக்கு யோகா பலனளிக்கும் என்று சில பெற்றோர் கூறிய காரணத்தால், அவளுக்கு யோகா கற்பிக்க அந்த அம்மையாரை சந்திக்க சென்றோம். பார்த்த நொடியிலிருந்து மீனாட்சியும் அந்த யோகா ஆசிரியையும் பல ஆண்டுகள் பழகியவர்கள் போல மிக அன்னியோன்யமாக ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு கொஞ்சத் தொடங்கிவிட்டார்கள். அந்த அம்மையார் என்னிடம் சொன்னார் "உங்கள் மகள் என்னிடம் யோகா கற்க வரவில்லை.அதை நான்  அவளுக்கு கற்பித்து தான் புரிய வைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இங்கே வரும் பெரும்பாலான குழந்தைகள் எனக்கு யோகாவைக் கற்பித்திருக்கிறார்களே  தவிர நான் அவர்களுக்கு எதுவும் கற்பிக்கவில்லை" என்றார். மேலும் "உங்கள் மகள் பிறந்ததன் நோக்கமே நீங்கள் சில விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற காரணத்திற்காகத் தான்" என்றுஅடிக்கடி கூறுவார். அதாவது ஆன்மீக நாட்டம் இல்லாத எனக்கு உண்மையான ஆன்மீகத்தை புரிய வைக்கவே மீனாட்சி பிறந்திருப்பதாக சொல்வார். அவர் சொன்னது நூற்றுக்கு நூறு சரிதான் என்று இன்று நான் உணர்கிறேன்.

இவருடைய கனவிலும் மீனாட்சி வருவதுண்டு. தனக்கு சாக்லேட், ஸ்வீட் என்று ஏதாவது வேண்டுமென்றால் அதை இவரது கனவில் தெரிவிக்கிறாள். அந்த அம்மையார் மறுநாள் என்னைத் தொலைபேசியில் அழைத்து 'நேற்றிரவு உங்கள் மகளிடமிருந்து எனக்கு ஒரு சிறப்பு அழைப்பு வந்திருக்கிறது. தனக்குப் பிடித்த சில பொருட்களை வாங்கிவரும்படி சொல்லியிருக்கிறாள்' என்பார்.நாங்கள் மீனாட்சியிடம் "இன்று யார் உன்னைச் சந்திக்க வரப் போகிறார்கள்?" என்று கேட்டால், அவரது பெயரை மெதுவாகச் சொல்லிவிட்டு சிரித்துக் கொள்வாள். 

அதேபோல் அந்த அம்மையார் ஒரு முறை அவரது கணவருடன் எங்கள் வீட்டிற்கு வந்திருந்த பொழுது அவரைக் கண்ட மகிழ்ச்சியில் தேன் குடித்த நரி போல் மீனாட்சி ஓடி வந்து வந்து அவரது வலது கால் மூட்டைத் தட்டிக் கொண்டே இருந்தாள். அந்த அம்மையாருக்கு அந்த இடத்தில் வலி இருப்பதை உணர்ந்த நாங்கள் மீனாட்சி தான் அவரது காலில் வலி ஏற்படும்படி ஏதோ செய்துவிட்டாள் என்று புரிந்துகொண்டு அவளை அதட்டினோம். எங்களைத் தடுத்த அந்த அம்மையார் "வேறொன்றுமில்லை! எனக்கு பத்து நாள் முன்பு குளிக்கும் போது வழுக்கிக் கீழே விழுந்துவிட்டேன்.முட்டியில் அடிபட்டுவிட்டது. அதைத்தான் இப்பொழுது குணமாகிவிட்டதா என்று உங்கள் மகள் கேட்கிறாள்"என்றார்.அவர்களுக்குள் இருக்கும் உள்ளார்ந்த‌ அன்பைப் புரிந்து கொள்வது எங்களுக்கு இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது. புரியாவிட்டால் என்ன? அவர்களுக்கு இடையூறாக இல்லாமல் ஒதுங்கி நின்று ரசிக்கும் அளவிற்காவது தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதே மகிழ்ச்சி தான்.

பொதுவாக ஆன்மீகம் என்பது ஒருவர் சார்ந்த மதத்திலோ அல்லது குடும்பத்திலோ குறிப்பிட்ட கடவுளையோ அல்லது சில துறவிகளையோ பின்பற்றுகிறோம். அந்தக் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஆன்மீகம் சம்பந்தமான விஷயங்கள்ப் பற்றி பெரியவர்களின் மூலமாகத்தான் தெரிந்து கொள்கிறார்களே தவிர அவர்களாகவே எதையும் தெரிந்து கொள்வதில்லை.  

ஆனால் அப்படி நமக்கே தெரியாத துறவிகளையும் ஞானிகளையும் இக்குழந்தைகள் தானாகவே  அறிந்து வைத்துள்ளார்கள் என்பதே நிதர்சன உண்மை.இதை உணர்ந்த பெற்றோர்கள் எத்தனைபேர் ?

எனது கல்லூரி நண்பன் 'ரகு':

 'யோகம்' 'தியானம்' என்பது போன்ற விஷயங்கள் ஹிந்து மதம் சம்பந்தப்பட்ட விஷயம் என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். உண்மையில் எனது பெரும்பாலான கேள்விகளுக்கு யோகா மற்றும் தியானம் போன்ற விஷயங்களில் தான் பதில் கிடைத்தது. இதை நான் அறிய முக்கியப் பங்காற்றியது எனது கல்லூரித் தோழன் 'ரகு'. 

பாடுவது, இயற்கையைப் புகைப்படம் எடுப்பது போன்ற எண்ணற்ற திறமைகள் இருந்தாலும் ரகுவின் அதீதமான பேச்சு மற்றும் குறும்புத்தனத்தால் கல்லூரியிலேயே எனக்கும் அவனுக்கும் பேச்சு வெகு காலம் நின்று போயிருந்தது. ஒரு வழியாகப் பல ஆண்டுகள் கழித்து அவனே இறங்கி வந்து எனது அம்மாவிடமும் என்னிடமும் எங்களின் கல்லூரித் தோழியின் திருமணத்தின்போது பேச, எங்களது நட்பு புதுப்பிக்கப்பட்டது.மீனாட்சியைப் பற்றி நான் அவனிடம் சொல்ல, உடனே அவன் தனது குருமார்களான பாட்டு சித்தர் மற்றும் இசக்கி சித்தரின் 'வாசியோக' வகுப்புகளுக்கு என்னை வரும்படி கூறியிருந்தான். "உனக்கு அவர்கள் குரு என்றால் என்னை எதற்கு அவர்களைப் பின்பற்ற சொல்கிறாய்?" என்று கேட்டுவிட்டு வேண்டா வெறுப்பாகத்தான் ரேவதியையும், மீனாட்சியையும் அழைத்துக்கொண்டு சித்தர்கள் இருவரையும் சந்திக்கச் சென்றேன். தொடர்ந்து அவர்களுடைய வகுப்புகளில் என்னதான் சொல்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள நான் மட்டும் சென்று அமர்ந்தேன்.அங்கே வருபவர்களை பற்றி பாட்டு சித்தர் சொல்லும்போது "விட்டகுறை தொட்ட குறை"பற்றித் தான் முதலில் குறிப்பிட்டார். அதாவது முற்பிறவியில் ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் தான் இங்கே வாசியோகம் கற்க வருகிறார்கள் என்றே தனது பேச்சைத் தொடங்கினார்.

இதில்  பெரியவர் 'பாட்டு சித்தர்' நாராயணசாமி அவர்கள் சீர்காழியைச் சேர்ந்தவர்.இளையவர் இசக்கி சித்தர் கோவில்பட்டியைச்  சேர்ந்த குங்ஃபூ ஆசிரியர். இருவரும் முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் தான். ஆனால் இருவரும் ஆன்மிக தேடல் கொண்டவர்கள். இதில் பாட்டு சித்தரின் கனவில் தோன்றிய ஐயப்பன் அவருக்கு வாசி யோகத்தை கற்பித்து அதை கோயில்பட்டியிலுள்ள எசக்கிக்கும் கற்பிக்கும்படி கட்டளையிட இவர்கள் இருவருக்குள்ளும் குரு சிஷ்யன் உறவு மலர்ந்திருக்கிறது.

இருவரும் சேர்ந்து அனைத்து மக்களுக்கும் சித்த ரகசியமான இக்கலை சென்று சேரவேண்டுமென்ற உயர்ந்த நோக்கில் இன்று உலகெங்கும் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களைப் பொறுத்தவரையில் 'வரவேண்டும் என்று இருப்பவர்கள் தங்களிடம் தானாகவே வந்து சேர்வார்கள் என்பதே'. இந்தக் கூற்றின்படி பார்த்தால் 'வேட்டைக்காரனாக இருந்த வால்மீகி எப்படி ராமாயணம் எழுதினார், கலிங்கப் போரில் வென்ற அசோகர் ஏன் அமைதி வழிக்குத் திரும்பினார், அரசர் சித்தார்த்தன் ஏன் கெளதம புத்தரானார் மற்றும் ஆன்மீகத்துடன் சற்றும் தொடர்பில்லாமல் இருந்த குறும்புக்கார இளைஞன் ரகு ஏன் ஒரு நாள் ஆன்மீகவாதியானான்' போன்ற விஷயங்கள் புலப்பட்டது.

                                                       'பாட்டு சித்தர்' நாராயணசாமி 


 இசக்கி சித்தர்

முதல் வகுப்பில் 'மெய்ப்பொருள் தீட்சை' (பிரம்மோபதேசம்) வழங்கிய பாட்டு சித்தர், அடுத்தடுத்த வகுப்புகளில் 'வாசியோகம்' கற்பித்தார். 'வாசி' என்பதை திருப்பிப் போட்டால் 'சிவா' என்று வரும். சிவனே சொல்லிக்கொடுத்த யோகம் என்று சொல்வார்கள். இதிலிருந்துதான் 'க்ரியா' முதலிய யோக முறைகள் தோன்றியதாகச் சொல்கிறார்கள்‌. பழகும் யோக முறைகள் வெவ்வேறாக இருப்பினும் அனைத்தின் நோக்கமும் இறைவனை அடைவது தான். நான் தெரிந்து கொண்டவரையில் தொழில்முறை யோகா மாஸ்டர்கள் 'பிராணாயாமம்' போன்ற பயிற்சிகளைக் கற்பிக்கிறார்கள். ஆனால் சித்தர்கள் மூலம் தெரிந்து கொள்வது முற்றிலும் மாறுபட்டது. முன்பு இதைத் தான் குருகுலத்தில் தங்கி சீடர்கள் குருவிற்குப் பல காலம் பணிவிடை செய்து கற்றுக் கொண்டிருக்கிறார்கள். 

எதற்காக பணிவிடை செய்ய வேண்டும்? முதலில் 'தான்' என்ற அகந்தையை விட்டால் தான் தன்னைப் புரிந்து கொள்ளமுடியும், பிறரைப் புரிந்து கொள்ள முடியும், இறுதியில் இப்பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்ள முடியும்'.அதற்கே இப்பயிற்சிகளைக் கொடுத்திருக்கிறார்கள். கற்றுக்கொண்டதன் இறுதி வடிவம் தான் 'ஞானமடைவது'. யோகக் கலையைப் பயிற்சி செய்பவனே 'யோகி'. யோகத்தின் மூலம் பலனை முழுவதுமாக அடைந்தவனே 'ஞானி', 'சித்தன்'. யோகத்திற்கும், தியானத்திற்கும் மந்திரம், எந்திரம், தந்திரம் என்ற மூன்றுமே அதி முக்கியம்.

1).மந்திரம்: உச்சரிக்க வேண்டிய மந்திரம்!

மந்திரத்தை சொல்லும் விதம் மிக மிக முக்கியம்.சரியான உச்சரிப்புடன் அடிவயிற்றிலிருந்து,நெஞ்சிலிருந்து,நாவிலிலிருந்துயென  சொல்வது  உடலில் நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தவல்லது.

2). எந்திரம்: உங்களுடன் உடல் தான் அது.

உடலை தயார்படுத்திக் கொள்ளாமல் நாம் மனதை தயார்படுத்தக் கொள்ள முடியாது. சரியான உணவுக் கட்டுப்பாடுகளுடன் வெறும் வயிறு, செரிமானம் ஆனபிறகென்று சரியான நேரத்தில் சரியான‌ விஷயத்தை குருவின் வழிகாட்டுதலோடு செய்யவேண்டும்.

3).தந்திரம்: செய்யும் முறை!

நீங்கள்‌ பின்பற்றும் ஆசனம் மற்றும் முத்திரைகளுக்கு நிறையப் பலனுண்டு.

யோகப் பயிற்சியின் மூலம் எவ்வளவுக்கெவ்வளவு நாம் வெளிவிடும் கரியமில வாயுவின் அளவைக் (கார்பன் டை ஆக்சைடு) குறைத்துக்கொண்டே வருகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நமது ஆயுள் பெருகும் என்கிறார்கள். இதன் மூலம் மரணத்தை வெல்லலாம் என்பதைக் குறிக்கவே வாசியோகத்தை 'சாகாக் கலை' என்று  குறிப்பிடுகிறார்கள்.

'நாம் முன்பு பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்வதை இங்கே பொருத்திப் பார்த்தால் மரணம் வரும் நேரத்தில் இதுபோன்ற உயிர்களும் உடலைவிட்டு நிச்சயம் நீங்கும்.ஆனால் அந்த உயிர் அழியாது  'ஞானத்தோடு' (enlightened soul) இருக்கும்.மேலும் தேவைப்படும்போது நோக்கம் புரிந்தே பிறப்பெடுக்கும் என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். நோக்கம் தெரியாது பிறந்தவர்கள் தான் யார், தனக்கு எது வரும்,எது வராது போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமலேயே அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு போய்ச் சேர்கிறார்கள்' என்பது அடியேனின் கருத்து.

இதில் பெரியவர் பாட்டு சித்தர் நிறைய ஆன்மிக நூல்களை எழுதி வருகிறார். அவை எல்லாமே  அவருக்கு காகபுஜண்டர் போன்ற சித்தர்கள் கனவில் சொல்லும் விஷயங்கள் தானாம்! 'சாகாக் கலை'யைப் பற்றி பாட்டு சித்தர் குறிப்பிடுகையில், "சாதாரணமாகப் பிறந்து, வளர்ந்து,கல்வி கற்ற ஒருவன் இறந்து போனால், அவன் அடுத்த பிறவியில் மீண்டும் பிறந்து, முதலில் இருந்து தான் அனைத்தையும் கற்றாக வேண்டும்.ஆனால் சித்தர் கல்வியைக் கற்று உடலிலுள்ள 35000 நாடி நரம்புகளை சுத்தப்படுத்திய ஒரு யோகி இறக்க நேர்ந்தால், மறுபிறவியில் அவருடைய வாழ்க்கை அதே 35000 நாடி நரம்புகளிலிருந்து தான் தொடங்குகிறது. இப்பிறவியில் அவருடைய வாழ்க்கை முற்பிறவியில் அவர் விட்ட இடத்திலிருந்தே தொடங்கும் "என்கிறார்.இன்றைய நவீன மருத்துவர்கள் குறிப்பிடும் 'செல்லுலர் மெமரி'  (cellular memory) இதுவே என்று எனக்குத் தோன்றுகிறது. தாய், தந்தை மற்றும் இருவீட்டுக் குடும்பத்தாரின் மூலம் கிடைக்கும் 'ஜெனிடிக் மெமரியைத் (மரபு வழி அறிவு) தாண்டி சில தனித்துவமான முற்றிலும் வேறுபட்ட குறிப்பிடத் தகுந்த குணாதிசயங்களை உள்ளடக்கியதாகவே 'செல்லுலர் மெமரி' அமைந்துள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. அதாவது மூளையைத் தாண்டி இருதயம், சிறுநீரகம், கல்லீரல், கண்கள், இரத்தம், நுரையீரல்யென பிற உறுப்புகளிலும் நினைவுகளை செல்களில் சேர்த்து வைக்க முடியும் என்று சொல்கிறார்கள். உதாரணத்திற்கு திரைப்படத்தில் கதாநாயகி இறந்துவிட்டால் அவளுடைய இருதயம் வேறு பெண்ணுக்கு பொருத்தப்படும் போது அந்தப் பெண்ணுக்கு இயல்பாகவே கதாநாயகன் மேல் காதல் வருவதாக காட்டுவார்களே?அதே‌ தான்!

ஒரு யோகியின் சுயசரிதம்: இதே வேளையில், நான் படிக்கத் தொடங்கிய  பரமஹம்ச யோகானந்தர் என்ற பிரபல யோகி எழுதிய 'ஒரு யோகியின் சுயசரிதம்' என்ற புத்தகத்தில் குறிப்பிடப்படும் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்த 'மகா அவதார் பாபாஜி' (இவரின் இயற்பெயர் நாகராஜன்.சொந்த ஊர் பரங்கிப்பேட்டை,போகரின் சீடர் என்று சொல்லப்படுகிறார்) என்ற யோகி இமயமலையின் இந்திய-திபெத் எல்லைப் பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த புத்தகம் வெளிவந்த நேரம்வரை பலருக்கு 'ஆன்ம சொரூபமாக' (அதாவது முழு மனித உருவமாக ஒருசிலரின் கண்களுக்கு மட்டும் தென் பட்டிருக்கிறார்.மன்ரோவின் கண்களுக்கு மட்டும் ராகவேந்திரர் புலப்பட்டது போல்!) காட்சி அளித்திருக்கிறார். அவர் 'க்ரியா' யோகம் பழகியதாகச் சொல்கிறார்கள். அதையே தனது சீடர்களுக்கும் கற்பித்திருக்கிறார்.

இந்த புத்தகத்தை எழுதிய சுவாமி யோகானந்தர் முதல் பக்கத்திலேயே தனது சிறுவயது பற்றி குறிப்பிடும்போது தனக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் அதிகம் இருந்தது பற்றியும் முன்பின் அறியாத பல மொழிகள் அவருடைய காதுகளில் மட்டும் கேட்கும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லாம் தெரிந்த ஒரு யோகியின் மனது, சிறு குழந்தையின் உடல் இரண்டுக்கும் இடையே நடந்த போராட்டமாக தனது குழந்தைப் பருவம் அமைந்ததாகச் சொல்கிறார்.அதாவது முற்பிறவியில்  ஒரு யோகியாகப் பிறந்த பரமஹம்ச யோகானந்தர் அதன் தொடர்ச்சியாக இப்பிறவியில் குழந்தைப்பருவம் தொட்டு ஆன்மிகத்தின்பால் இழுக்கப் பட்டுள்ளார். இது பிறவியிலேயே பேரறிவுடன் பிறப்பதுபோல் (congenital savant). இதில் குறிப்பிடப்படும் பெரும்பாலான யோகிகள் சாதாரண மனிதர்களாக இருந்து திடீரென உள்மனதின் உந்துதலால் யோகத்திலும் தியானத்திலும் நாட்டம்கொண்டு ஆன்மிகத்தின்பால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள் 'விபத்தால் ஞானியானவர்'களைப் போல் (accidental savants). இன்னும் இந்த புத்தகத்தில்  கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம், 'க்ரியா' யோகமானது ஒருவரிலிருந்து அடுத்தவருக்கு ' டெலிபதி மூலம்'  உள்மனதின் வழியாகவே சூட்சுமமாக (ஆன்ம சொரூபத்தில் ) கற்பிக்கப்பட்டிருக்கிறது. குருவும் சிஷ்யனும் வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்தவர்களாகக்கூட இருந்திருக்கிறார்கள் .

ஆப்பிள் நிறுவன அதிபர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ், இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோலி, நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (இந்த புத்தகம் உந்தியதன் காரணமாகவே 'பாபா' என்ற திரைப்படத்தை  எடுத்திருக்கிறார்) மற்றும் பிரபல பீட்டில்ஸ் இசைக்குழுவின் ஜார்ஜ் ஹேரிசன் போன்றவர்களுக்கும் இது மிகவும் பிடித்தமான புத்தகமாக இருந்து வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையை  ஏற்படுத்தியிருக்கிறது.

அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது: யோகாவைத் தவிர தியானத்தையும் சேர்த்துப் பழகும்படி பாட்டு சித்தர் கற்பிக்கிறார். மேலும் இவ்வுலகம் பஞ்சபூதங்களைக் கொண்டிருப்பது போல் நமது உடலிலும் பஞ்சபூதங்கள் ('ஸ்தூல' பஞ்சாட்சரம்) உள்ளதைச் சொன்னார். இந்தப் பஞ்சபூதங்களில் நீரும் நிலமும் நமது உடலில் எவ்வாறு உள்ளது என்பதை மட்டும் இங்கே முக்கியமாகத் தெரிந்து கொள்வோம். இதையே தான் சித்தர்கள் "அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது" என்கிறார்கள். நாம் நம்மைப் புரிந்து கொள்ள முயற்சித்தால் கிட்டத்தட்ட இவ்வுலகையும் ஏன் பிரபஞ்சத்தையுமே புரிந்துகொள்ளமுடியும் என்பதே இதன் தத்துவம்.இதில் சித்தர்கள் வழிபடும் முதன்மையான தெய்வம் 'வாலைத்தாய்' யார் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். 

Sunday, March 14, 2021

20. 'மௌனம்' என்பது பிரபஞ்சத்தின் மொழியே!

 எனக்குள் தொடங்கிய தேடலால் 'டெலிபதி' பற்றி இன்னும் சற்று ஆழமாக அறிய முயற்சித்த எனக்கு சில சுவாரசியமான விஷயங்கள் புரியத் தொடங்கின. உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம் 2004 சுனாமியின் போது அந்தமான் காடுகளில் இருந்த  பழங்குடி மக்கள் சுனாமி வரும் முன்பே எச்சரிக்கையுடன் தப்பித்து மேடான பகுதிகளுக்குச் சென்றுவிட்டார்கள். அதேபோல் விலங்குகளும் தங்களது உள்ளுணர்வால் முன்கூட்டிய அறிந்திருந்தன போன்ற செய்திகள் நாம் படித்திருப்போம்.

இதிலிருந்து நான் உணர்ந்து கொண்ட விஷயம்: மனிதன் மொழி வளர்வதற்கு முன்னாலும் பேசிக்கொண்டுதான் இருந்திருக்கிறான் உள்ளுணர்வின் (டெலிபதி) மூலம்.நாம் மொழியைப் பயன்படுத்த தொடங்கியதிலிருந்து மெதுவாக இந்த குணம் நமக்குக் குறையத் தொடங்கிவிட்டது. அதேவேளையில் மொழியை பயன்படுத்த தொடங்கிய நாம் பெரும்பாலும் நமது சுய ஆதாயத்திற்காக நாம் உள்ளே இருப்பதை வெளியே தெரிவிக்க வேண்டும் என்ற நிலையையும் தாண்டி ஜால வார்த்தைகளைப்  பயன்படுத்தி 'உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்' நிலையை எட்டிவிட்டோம். ஆனால் இது போன்ற விளையாட்டுக்கள் பிறர் மனதைப் படிக்க தெரிந்தவர்களிடம் நடக்காது. அதனால்தான் இக்குழந்தைகள் சிலரிடமிருந்து ஒதுங்கியே இருக்கிறார்களோ? அதேவேளையில் விலங்குகள் பெரும்பாலும் தங்களின் பிறவி குணத்துடன் நேர்மையாக இருப்பதற்குக் காரணம் மொழி இல்லாததுதான் என்றே தோன்றுகிறது. ஆனால் அவைகளும் 'டெலிபதி' என்னும் பிரபஞ்ச மொழியால் அவர்களுக்குள்ளும் மற்ற உயிரினங்களுடனும் பேசிக்கொண்டு தான் இருக்கின்றன. நமக்கு அது புரியாத காரணத்தால்‌ விலங்குகள் தனது எண்ணங்களை வெளிப்படுத்துவதில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

ஆதி மனிதனைப் போலவே விலங்குகளுக்கும் டெலிபதிக்கும் உள்ள தொடர்பைப் பற்றி நான் ஆராய்ந்தபோது விலங்குகளும்,பறவைகளும்,பூச்சிகளும் கூட டெலிபதியைப் பயன்படுத்துகின்றன என்பதை அறிந்தேன். இன்று வெளிநாடுகளில் விலங்குகளின் மன அழுத்தப் பிரச்சனை, முரண்பாடான பழக்கவழக்கங்கள் போன்றவற்றை தீர்ப்பதற்கு சிறப்பு நிபுணர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்துவதும் டெலிபதி முறைதான். இங்கே ஸ்வாதி தியாகராஜன் என்ற பெண்மணி பதிவேற்றியுள்ள யூடியூப் வீடியோவில் தென்னாபிரிக்காவில் ஒரு முன்னாள் காவலர் நடத்தும் தனியார் விலங்கியல் பூங்காவில் மன அழுத்தத்துடன் கடும் கோபத்தில் இருக்கும் கருஞ்சிறுத்தை டெலிபதி அறிந்த அன்னா என்ற‌ அந்த விலங்கியல் நிபுணரிடம் "இங்கே தனக்கு வைத்துள்ள பெயர் 'டயப்லோ'(பிசாசு) என்ற பெயர் பிடிக்கவில்லையென்றும், கம்பீரமான தோற்றத்தைக் கொண்ட தனக்கு உரிய மதிப்பளிக்காமல் சிறிய கூண்டில் அடைத்து வைத்துள்ளதாகவும், மேலும் தன்னை ஐரோப்பிய சர்க்கஸிலிருந்து மீட்டு வந்த போது அங்கே இருந்த சிறுத்தைக் குட்டிகளுக்கு என்ன ஆனது?" போன்ற கேள்விகளைக் கேட்டுள்ளது. இந்தச் சிறுத்தையைப் பற்றிய விஷயங்கள் எல்லாம் அந்தப் பூங்காவை நடத்தி வந்தவருக்குத் தெரியுமே தவிர வேறு யாருக்கும் தெரியாது. முன்பின் அறியாத இந்த பெண்மணியிடம் தனது உள்ளக் குமுறலை டெலிபதி மூலம் கொட்டியிருக்கிறது. இந்தப் பெண்மணியின் பரிந்துரைகளுக்குப் பிறகு அந்த சிறுத்தை அதிக இடவசதிகளுடைய பெரிய இடத்திற்கு மாற்றப்பட்டதுடன் அதற்கு 'ஸ்பிரிட்' (ஆன்மா) என்ற‌ மாற்றுப் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இன்று அந்த சிறுத்தை மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். விலங்குகளுக்கு டெலிபதி தெரியும் என்பது பற்றிய கட்டுரையை இங்கே கொடுத்திருக்கிறேன்.


19. உலகெங்கிலுமுள்ள RH -Ve ரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வரும் வேற்றுக்கிரகவாசிகளால் கடத்தப்பட்டது போன்ற கனவு!

RH -Ve இரத்தவகை என்பது பெரும்பாலும் வெள்ளையின மக்களிலேயே அதிகம் காணப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா தாண்டி மற்ற  இடங்களில் இந்த ரத்த வகையைச் சேர்ந்த மக்கள் இருந்தாலும் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறார்கள். நம்மூரில் கூட இருக்கிறார்கள். விஞ்ஞானிகள் சொல்லும் விஷயம் என்னவென்றால் இந்த ரத்த பிரிவு 50,000 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியிருக்க வேண்டும். ஆப்பிரிக்காவிலிருந்து தோன்றிய ஆதி மனித இனத்தில் இந்த இரத்தப் பிரிவு கிடையாது. இவர்கள் ரீசஸ் வகை குரங்குகளிலிருந்து தோன்றிய  மனிதர்கள் என்றும் சொல்பவர்கள் உண்டு. எது எப்படியோ ஆனால் இன்று உலகின் ஆதிக்கம் செலுத்தும் சக்திவாய்ந்த வெள்ளைக் இனத் தலைவர்கள் குறிப்பாக இங்கிலாந்து ராஜ வம்சம் மற்றும் பெரும்பாலான அமெரிக்க அதிபர்கள் இந்த இரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். 

2018ல் அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவில்  RH -Ve இரத்த பிரிவை சேர்ந்த மக்கள் ALIENCON என்ற பெயரில் மாநாடு ஒன்றை நடத்தினார்கள். அதன் பிறகும்  தொடர்ந்து நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் விவாதித்த முக்கியமான விஷயம் அவர்களுக்கு அடிக்கடி வேற்றுக் கிரகவாசிகளால் ஆழ்ந்த நித்திரையில் கடத்தப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப் படுவதாக சொல்கிறார்கள். இதில் சில ஆண்களும் பெண்களும் சொல்வது என்னவென்றால்; வேற்றுகிரக வாசிகள் தங்களை அவர்களின் விண்கலங்களுக்கு எடுத்துச் சென்று கலப்பினக்  குழந்தைகளை  உருவாக்கி வருவதாகவும்; தங்கள் வேலை முடிந்ததும், அவர்களை மீண்டும் இருந்த இடத்திலேயே விட்டுச் செல்வதாகவும் சொல்கிறார்கள் ( மிக சமீபத்தில் இந்த விஷயத்தை அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன்  "Anomalous Acute and Subacute Field Effects on Human and Biological Tissues" என்ற ஆய்வறிக்கையின் மூலம்   வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது). சுயநினைவு வந்து  கண்விழித்துப் பார்த்தால் உடலின் சில இடங்களில் குறிப்பாக முதுகுத்தண்டில் நுண்ணிய துளைகள் போட்ட வடுக்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.அப்படியானால் வேற்றுகிரக வாசிகளால் இங்கே அனுப்பப்பட்டு நாம் இன்னும் அவர்களின் தொடர் கண்காணிப்பில் தான் இருக்கின்றோமா? இதில் கலந்து கொண்டவர்களில் மிக முக்கியமான ஒருவர் இங்கிலாந்து பாதுகாப்புத்துறையின் முன்னாள் வேற்றுகிரக வாசிகளைப் பற்றிய ஆராய்ச்சியாளர் நிக் போப். 

ஒரு  தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கெடுத்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் "வேற்றுகிரஹ வாசிகள் இருக்கிறார்களா என்று பில்கிளின்டனிடம் கேட்டால் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது சுத்தப் பொய் என்கிறாரே!" என்று கேட்க; "ஆமாம்! இல்லை என்று சொல்லவேண்டும்  என்பது தான் எங்களுக்கு இடைப்பட்ட உத்தரவு" என்று நகைச்சுவையாக பேசுவதுபோல்  மறைமுகமாக  ஒரு  உண்மையை  ஒபாமா  கூறியுள்ளார் என்றே இந்தப் பேட்டியைக் கண்டவர்கள் கருத்து பதிவிடுகிறார்கள்!      

2003ல் இதைப் பற்றி ஆய்வு செய்த ஹார்வர்டு பல்கலைக் கழகத்தினர் (Rh -Ve  ரத்த வகையினரென்று தனியாக அவர்கள் குறிப்பிடவில்லை) பொதுவாக நித்திரையில் ஏற்படும் ஒருவகையான தற்காலிக பக்கவாதத்தினாலும்  அதனோடு சேர்ந்த மாயையினாலுமே (hallucination) இப்படிப்பட்ட வித்தியாசமான கனவுகள் ஏற்படுவதாகச் சொல்கிறார்கள். நமது கிராமங்களில் கூட இதை 'அமுக்குவான் பேய்' என்று சொல்வார்கள்.

எனது கருத்து: ஒத்த சிந்தனையுடைய இருவருக்குள் (அதாவது இரு வெவ்வேறு நபர்கள் ஒத்த அலைவரிசையில் சிந்தித்தால்) அவர்களுக்குள் கருத்தொற்றுமை ஏற்படலாம், நட்பு ஏற்படலாம், காதல் மலரலாம்,கதை, கவிதை போன்ற படைப்புகள், கண்டுபிடிப்புகள் கூட ஒத்துப் போகலாம் எனும்போது படைப்புகளின் திறவுகோலான மனதின் கனவுகள் மட்டும் ஏன் ஒத்துப்போகாது? அப்படியானால் ஓர் குறிப்பிட்ட அலைவரிசையில் ஒருசிலரின் மனது நித்திரையிலோ அல்லது வெற்றுக் கண்களாலோ சில பிம்பங்களைப் பார்க்கிறது என்றுதானே பொருள் ?அப்படியானால் அந்த பிம்பங்கள் நமது கண்களுக்குப் புலப்படாத உண்மையாக ஏன் இருக்கக்கூடாது?

உதாரணம்: இங்கே ஒரு நரம்பியல் மருத்துவர் தனது நண்பர்களுடன் எல்எஸ்டி (Lysergic acid diethylamide) என்ற‌ அதிக சக்தி கொண்ட போதைப் பொருளை சோதனைக்காக பயன்படுத்தியபோது நேரத்தில் மாற்றத்தை உணர்ந்ததாகவும் (அவருக்கு சில மணி நேரங்கள் தன்னை மறந்த நிலையில் இருந்ததாகத் தோன்றியிருக்கிறது.ஆனால் உண்மையில் அவர் சுய நினைவிற்கு திரும்ப வர எடுத்துக்கொண்ட நேரம் சில நிமிடங்கள் மட்டுமே!), அதேபோல் தனக்குத் தோன்றிய அதே பிம்பங்கள்,நேரப் பிழர்வு(time slip) போன்றவை தன்னுடன் அமர்ந்த தோழிகளுக்கும் தோன்றியதெனச் சொல்கிறார்.

பறக்கும் தட்டுகள் அடிக்கடி வந்து செல்லும் இலங்கையிலுள்ள சோமாவதி புத்தர் கோவில்:

அமெரிக்காவில் வசித்து வரும் யூடியூபர் மற்றும் பண்டைய கோவில்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழர் திரு.பிரவீன் மோகன் அவர்கள். இவர் தன்னுடைய பெரும்பாலான வீடியோக்களில் தொன்மையான கோவில்களுக்கும் வேற்றுகிரக உலகங்களுக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி நிறைய வீடியோக்களை பதிவேற்றியுள்ளார். ஆனால் அவருடைய வீடியோக்களை யூடியூப் சமீபகாலமாக நீக்கி வருவதாக புகார் சொல்லியிருக்கிறார். இவருடைய ஒரு வீடியோவில் இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு அருகேயுள்ள சோமாவதி புத்தர் கோவிலில் இரவு நேரங்களில் பறக்கும் தட்டுக்கள் தென்படுவதாகவும் அவற்றைப் பற்றி குறிப்பிடும்  அங்குள்ள புத்த பிட்சு 'அவை கடவுளின் வாகனம்' என்றே சொல்வதையும் பதிவிட்டுள்ளார் .மேலும் அந்த கோவிலில் கோபுர உச்சியில் அமைந்துள்ள ஒரு 'ஸ்படிகக் கல்' தான் முக்கிய தொலைத்தொடர்புச் சாதனமாக இருந்து வேற்று கிரகவாசிகளை அங்கே இழுப்பதாகக் கூறுகிறார் பிரவீன்மோகன். மேலும் அந்த கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கோவிலுக்கு மேல் 'பறக்கும் தட்டு' வந்துசெல்லும் புகைப்படங்கள் அனைத்தும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் போன்ற நம்பத்தகுந்த மனிதர்களால் எடுக்கப்பட்டதே என்றும் சொல்கிறார்கள்.

இதே பிரவீன் மோகன் அவர்கள் மற்றொரு சந்தர்ப்பத்தில் வேறு ஒரு கருத்தையும் முன்வைத்திருந்தார். அதாவது ஆப்பிரிக்காவில் லயன் சஃபாரி செல்லும்போது, சிங்கம் நாம் ஜீப்பில் சென்றால் நம்மைப் பாறை என்று தான் நினைத்துக் கொள்ளுமாம். அதனால் தான் திறந்த வண்டிகளில் சென்றாலும் கொடிய விலங்குகள் நம்மைத் தாக்குவதில்லை என்கிறார். அதுபோல் வேற்றுகிரகவாசிகள் எளிதாக நம்மை ஏமாற்றி நமது கண்களுக்குப் புலப்படாமல் நம்முடனேயே இருப்பதாகக் குறிப்பிடுகிறார். 

சமீபத்தில் கூட விஞ்ஞானி மற்றும் விண்வெளி வீராங்கனை Dr.ஹெலன் ஷர்மன் வேற்றுகிரஹ வாசிகள் குறித்த கருத்தை ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது கார்பனும், நைட்ரஜனும் சேர்ந்த கலவையான பூவுலக உயிரினங்களைத் தாண்டி மற்ற வேதிப்பொருட்களின் கலவையாக நமக்குத் தெரியாத உயிரினங்கள் நமக்குள்ளேயே இருக்கலாம் என்பதை குறிப்பிட்டுள்ளார். 

இது அமானுஷ்ய சக்திகள், கடவுள் என்று அனைத்துக்குமே பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

கனடா நாட்டு முன்னாள் ராணுவ அமைச்சர் பால் ஹெலியர் வேற்றுகிரகவாசிகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசி வந்துள்ளார்.அவர் சொல்வது 'வேற்றுக்கிரக வாசிகளுக்கு டெலிபதி மூலம் மற்றவர்களின் உணர்வுகளை எளிதாக புரிந்து கொள்ள முடியும்' என்றே சொல்கிறார். இதே கருத்தை பல ஆராய்ச்சியாளர்கள்  சொல்லக் கேட்டுள்ளேன்.  

தம்புசாமி பிள்ளை: மலேசியாவில் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வியாபாரி தம்புசாமி பிள்ளைக்குக் கனவில் தோன்றிய பராசக்தி தன் மகனுக்கு ஒருகோவில் எழுப்பும்படி சொன்னதன் விளைவே இன்று உலகப்புகழ் பெற்ற 'பத்துமலை முருகன்' கோவில் உருவானது. இதுபோல் மன்னர்கள் காலத்திலிருந்து இன்றுவரை பலருக்கும் கனவில் கடவுள் தோன்றி சொன்னது தான்  இன்று நாம் பார்க்கும் பெரும்பாலான கோவில்கள் உருவாக காரணம்.

அப்படியானால் நமது ஆழ்ந்த உறக்கத்தில் நமக்குத் தெரியாத விஷயங்களை நமக்குக் கற்றுக்கொடுப்பது, நம்மில் குறிப்பிட்ட சிலரை கூட்டிச் சென்று ஆய்வு மேற்கொள்வது, நம்மை முன்பின் அறியாத சிலருடன் 'டெலிபதி' மூலம் தொடர்புகொள்ளச் செய்வது,பிறரின் ஆழ்மனதை அறிய வைப்பது யார்? கடவுளா? இல்லை நம்மைவிட அறிவிலும் தொழில்நுட்பத்திலும் மேம்பட்ட இனம் தான் இந்த வேற்று கிரகவாசிகளா? இல்லை இந்த இரண்டுமே ஒன்றுதானா?


Friday, March 12, 2021

18.கனவுகள் சொல்லும் ரகசியங்கள் (dream telepathy):

 'ஆன்மா' (spirit) என்பது மறுபிறப்பு மட்டுமின்றி நமது ஆழ்மன எண்ணங்களுடன் தொடர்புடையது என்பதை நமது மதங்கள் தெளிவாகக் கூறுகின்றன. நான் மேற்கோள் காட்டிய  குர்ஆனில் வசனத்தில் சொல்லப்படுவதும் அதுவே.

இதில் குறிப்பாக திபெத்திய பெளதத் தலைவரான தலாய்லாமா மரணித்தால் அடுத்த தலாய்லாமா எங்கே மறுபிறப்பெடுப்பார் போன்ற விஷயங்கள் புத்த பிட்சுக்களுக்கு கனவுகளின்மூலம் தெரிவிக்கப்படுகிறது. அல்லது இறந்த தலாய்லாமாவின் உடல் எரிக்கப்பட்டால் புகை செல்லும் திசை சொல்லும் என்கிறார்கள்.அப்படி சில பல ஆண்டுகள் தேடலுக்குப் பின் மறுபிறப்பாக அறியப்படும் சிறுவன் தனது முற்பிறவியில் (பழைய தலாய்லாமாவின்) பயன்படுத்திய உடமைகளை சரியாக அடையாளம் காட்டுவான்.இதுதான் பன்னெடுங்காலமாக பின்பற்றப்பட்டுவரும் அவர்களின் நடைமுறை. தற்போதைய தலாய்லாமா "அடுத்த தலாய்லாமா திபெத்திற்கு வெளியேவும் பிறக்கலாம். வழக்கத்திற்கு மாறாக அது பெண்ணாகவும் இருக்கலாம்"என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் உலகின் பல முக்கிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு அவர்கள் விடைதெரியாது தவித்த நேரத்தில் அவர்களுடைய ஆழ் மனதில் குறிப்பாக அவர்களுடைய ஆழ்ந்த நித்திரையில் தீர்வு கிடைத்ததாக சொல்கிறார்கள்.'நித்திரையில் வெளிப்படும் உள்ளுணர்வு' (dream telepathy) இதைப்பற்றி ஹார்வர்டு பல்கலைக்கழக நரம்பியல் துறை மருத்துவ 'பேராசிரியை' டாக்டர்.டயானா ஹின்னசி பவல் தன்னுடைய வலைப்பக்கத்தில் விரிவாக எழுதியுள்ளார். இவர் இந்தியாவிற்கு வந்து நான் முன்பு குறிப்பிட்ட சிறுவன் விஷால் ஆனந்தைக் கண்காணித்து சில நாட்கள் இங்கேயே தங்கி அவனைப் பற்றிய விஷயங்களையும் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ளார். மேலும் அமெரிக்காவில் இருக்கும் ரமஸஸ் என்ற சிறுவன் தனது தாய் மனதில் நினைக்கும் எண்களை டெலிபதி மூலம் தெரிந்துகொண்டு அவற்றை சரியாகச் சொல்வதையும் விரிவாக எழுதியுள்ளார்.

விஞ்ஞானிகளின்  கனவில் தோன்றிய முக்கிய கண்டுபிடிப்புகள்:   எக்ஸ்ரே இயந்திரம், கனிம அட்டவணை (periodic table), பென்ஸீனின் வேதியல் வடிவம்(structure of benzene), தையல் இயந்திரம், அணுவின் வடிவம் மற்றும் ராமானுஜம் விட்டுச்சென்ற மூவாயிரத்துக்கும் அதிகமான கணித சூத்திரங்கள்.

மேற்கண்ட விஞ்ஞானிகளைத் தாண்டி  'ஆட்டிசம்' பாதிப்பு, வளர்ச்சி தாமதம் மற்றும் ADHD  போன்ற பிரச்சனைகள் இருந்தவர்கள் என்று அறியப்பட்ட முக்கிய கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்:

1). தாமஸ் ஆல்வா எடிசன்: பல்பு, திரைப்படம் என்று தொடங்கி நூற்றுக்கும் அதிகமான கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரரான இவர் பள்ளிநாட்களில் மற்ற மாணவர்களுடன் கலக்காமல்  சிந்தையால் வேறு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த காரணத்தால் பள்ளி நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டார். டெலிபதி தொடர்பாக இவரும் நிறைய ஆய்வுகளை மேற்கொண்டார் என்பதை நானும் படித்துத் தெரிந்து கொண்டேன்.


2). நமது கணித மேதை சீனிவாச ராமானுஜம்: இவருடைய சிறுவயதுப் பற்றி அதிகம் தெரியாவிட்டாலும் இவரைப் பற்றி வந்த திரைப்படங்கள் மற்றும் இணையத்தில் இருக்கும் எண்ணற்ற பதிவுகளைப் பார்க்கும்போது இவருக்கும் பேச்சு தாமதம் அல்லது அதிகம் பேசாமல் இருந்த தன்மை, சம வயது குழந்தைகளிலிருந்து வேறுபட்டு தனித்து வளர்ந்தது மற்றும்  synethesia (சினஸ்தீசியா) போன்ற பாதிப்புகள் இருந்திருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது.  2012இல் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள எமரி பல்கலைக்கழக கணிதத் துறை பேராசிரியர் டாக்டர்.கிம் ஓனோவும், அவருடைய ஆராய்ச்சி மாணவர்களும்  ராமானுஜனின் சூத்திரங்களை ஆய்வு செய்ததில் அவருடைய சூத்திரங்கள் சாதாரண கணித சூத்திரங்கள் என்பதைத் தாண்டி பிரபஞ்சத்தைப் பற்றி அறியக் கூடிய விஷயங்களை உள்ளடக்கியதாக இருப்பதாகவே சொல்கிறார்கள். இன்று விண்ணியல் தொடர்பாக இடம்பெறும் பிளாக் ஹோல் (black hole), காலப் பயணத்தை (time travel) அறிய உதவும்  சூப்பர் ஸ்ட்ரிங் தியரி (super string theory) மற்றும் செயற்கை கோள்கள் பற்றிய ஆய்வுகளுக்கு அவருடைய சூத்திரங்கள் பேருதவியாக இருப்பதாக சொல்கிறார்கள். இதில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயம் என்னவென்றால் ராமனுக்கு அடிப்படைக் கணக்கே தெரியாது! 

ராமானுஜம் பெரும்பாலும் கணக்கைத் தவிர மற்ற பாடங்களில் தேர்ச்சி அடையவில்லை. ராமானுஜத்தை பின்னாளில் இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்ல  குறைந்தபட்சம் அவர் ஒரு பட்டப்படிப்பாவது படித்திருக்க  வேண்டும் என்பதற்காக பேராசிரியர் ஹார்டி பிரம்ம பிரயத்தனம் செய்து தேர்ச்சி அடைய வைத்து இங்கிலாந்து அழைத்துச் சென்றார். ராமானுஜம் தான் எழுதிய சூத்திரங்களை பற்றி சொன்ன விஷயம் "எனக்கு எதுவும் தெரியாது. நேற்று எனது கனவில் தோன்றிய நாமகிரி தாயார் எனக்கு சொல்லிக் கொடுத்ததைத் தான் நான் இங்கே எழுதுகிறேன்!".

3). விஞ்ஞானி ஐன்ஸ்டீன்: இளம் வயதில் தாமதமாகப் பேசிய குழந்தை ஐன்ஸ்டீன். நாம் முன்பே பார்த்ததுபோல் பேராசிரியரும் பொருளாதார நிபுணருமான திரு.தாமஸ் சொவல் அவர்கள் மீனாட்சி போல் பேரறிவு, பேச்சு தாமதம், வளர்ச்சிப் பின்தங்கல் போன்ற பிரச்சனைகளையுடைய குழந்தைகளை ஆட்டிசத்திலிருந்து தனியாகப் பிரித்து இளம் வயது ஐன்ஸ்டீனை ஒத்திருந்ததால் "ஐன்ஸ்டீன் சின்ட்ரோம்" என்று குறிப்பிட்டு புத்தகமாக வெளியிட்டதை முன்பே கூறியிருந்தேன். 

ஐன்ஸ்டீனின் 'தியரி ஆப் ரிலேட்டிவிட்டி' போன்ற அவருடைய முக்கிய ஆய்வுகளுக்கான அடிப்படை விஷயங்கள் அவருக்கு கனவில் தோன்றிய விஷயங்கள்தான்!

4).ஐசக் நியூட்டன்: இங்கே ஒரு சுவாரஸ்ய கிளைக்கதை! முன்பு ஒருமுறை மீனாட்சியைப் பற்றி இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருக்கும் எனது சித்தி மகனிடம் 'பல பெரிய விஷயங்களை நாம் சொல்லிக் கொடுக்காமலேயே தெரிந்து வைத்துள்ள மீனாட்சி சிறிய விஷயங்களை புரிந்து கொள்வதற்கு மிகவும் கஷ்டப்படுகிறாள்' என்று நான் கூறியதும், அவன் எனக்கு ஐசக் நியூட்டன் பற்றி சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. அதை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்: 

ஒருமுறை தனது உதவியாளனிடம் ஆய்வக அறைக் கதவைப் பிராண்டி திறக்கப் சொல்லி அடிக்கடி தொந்தரவு செய்யும் ஒரு பூனையும் அதன் குட்டியும் எளிதாக சென்று வர பெரிதும் சிறிதுமாக இரண்டு துளைகளிடும்படி சொல்லியிருக்கிறார் நியூட்டன்.


 உதவியாளன் சொல்லியிருக்கிறான் 'பெரிய துளை மட்டும் போதுமே! பூனை அதன் குட்டி இரண்டுமே அதைப் பயன்படுத்திக்கொள்ளுமே!' என்று. நியூட்டனுக்குத் தான் அவன் சொன்ன விஷயத்தை புரிந்து கொள்ள சற்று தாமதமாகியிருக்கிறது!

5). மொசார்ட் : சிறு வயது முதல் சிறந்த இசை மேதையாக அறியப்பட்ட  மொசார்ட், கதை எழுதுவது போல் பக்கம் பக்கமாக அடித்தல் திருத்தல் இல்லாமல் இசைக் குறிப்புகளை எழுதி இருக்கிறார். ஆனால் அவருடைய பழக்கவழக்கங்கள் சாதாரண மனிதர்களிலிருந்து மிகவும் மாறுபட்டதாக இருந்ததாகச் சொல்கிறார்கள். 

6). லியானார்டோ டாவின்சி: பல்துறை வித்தகராக (ஓவியம், சிற்பம்,  கட்டடக்கலை, உடற்கூறியல் மற்றும் பொறியியல்) அறியப்பட்ட லியானார்டோ டாவின்சிக்கு கவனக் குறைபாடு மற்று அதீத செயல்பாட்டுப் பிரச்சனை (ADHD) இருந்திருக்கலாம் என்று பிரைன்(Brain) பத்திரிகையில் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் நரம்பியல் மற்றும் உளவியல் துறை ஆராய்ச்சியாளர், பேராசிரியர் கட்டாணி குறிப்பிடுகிறார்.‌ இதற்கு இவர் சொன்ன முக்கிய காரணம் டாவின்சி திட்டமிடுதலுக்கு அதிக நேரம் செலவழித்து விட்டு செயல்படுத்தும்போது ஒரு வேலை முழுமை அடையும் முன்பே அடுத்த வேலைக்கு தாவி விடுவாராம். மேலும் டாவின்சிக்கு எழுத்துக்களை இடமாற்றி எழுதும் டிஸ்லெக்சியா போன்ற பிரச்சனைகளும் இருந்திருக்கலாம் என்கிறார். பேராசிரியர் கண்காணித்து வந்த ADHD பாதிப்பு இருந்தக் குழந்தைகள் எல்லோருமே மந்தமானவர்கள் அல்ல, சிறந்த அறிவை கொண்டிருந்தார்கள் என்றும் ஆனால் அவர்கள் வளர்ந்த பின்பு பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுடன் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். டாவின்சி வரைந்த படங்களுக்குள் வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் ரகசியமான வேறு சில விஷயங்களும் மறைந்திருப்பதாக இன்றைய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் டாவின்சியின் கனவிலும் வேற்றுக்கிரகவாசிகள் தோன்றி அவருடைய படைப்புகளுக்கு காரணமாக அமைந்திருப்பார்களோ?!


              டாவின்சி வரைந்த  "ஜான் தி பாப்டிஸ்ட்" படத்தை கண்ணாடியில் வைத்துப் பார்த்தால் அதில் ஒரு வேற்றுகிரஹ வாசியின் பிம்பம் மறைந்துள்ளது தெரியும்.


இங்கே மேலும் ஒரு முக்கியமானவரைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.

 சகுந்தலா தேவி: சமீபத்தில் இறந்த 'கணித மேதை' சகுந்தலா தேவிக்கும்   கணக்கை யாரும் கற்பிக்கவில்லை!எத்தனை  பெரிய பெருக்கலாக இருந்தாலும். அதற்கான விடை அவர் மனக் கண்முன்னே தோன்றி இருக்கிறது. நேரடியாக கரும்பலகையில் எழுதும்போது  "விடையை வலமிருந்து இடமாக எழுதவா அல்லது இடமிருந்து வலமாக எழுதவா?" என்று சிரித்துக்கொண்டே கேட்பார். காணொளி இங்கே! 

எனக்குத் தெரிந்தவரையில் இவருக்கு ஆட்டிசம் போன்ற பிரச்சனைகள் இல்லை என்றே நினைக்கிறேன்.ஆனால் அவருக்கு synethesia (சினஸ்தீசியா) பிரச்சனை இருந்திருக்கலாமென்று  நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன்.


Tuesday, March 09, 2021

17.ஆன்மீகம் (spirituality)

இனி சில விஷயங்களை ஆன்மிக ரீதியாக முதலில் பார்ப்போம்!

புரியாதவர்களுக்கு: பெளதீகத்திலும் கணிதத்திலும் நாம் கான்ஸ்டன்ட் (constant) என்ற ஒன்றைப் பயன்படுத்துவோமே எதற்காக? நமக்கு ஒரு தீர்வு கிடைக்கும்வரை, சமன்பாடு முடியும்வரை 'இதுதான் அது' என்று நாம் புரிந்து கொள்வதற்காக, ஒரு தீர்வை எட்டுவதற்காக இந்தக் கான்ஸ்டன்டை பயன்படுத்துகிறோம். அதுபோலவே நானும் இங்கே ஆன்மீகத்தை 'X' 'Y' போல் பயன்படுத்திக்கொள்ளச் சொல்கிறேன். இறுதியில் 'இதுதான் அது' என்று நீங்களும் என்னைப் போல் எளிதாகத் தெரிந்து கொண்டுவிடுவீர்கள். 

எதை? 'கான்ஸ்டன்ட்' என்ற வார்த்தைக்கு 'நிரந்தரமானது' என்ற வேறொரு பொருளும் உள்ளதை. 

மேலும் நான் சொல்லும் நிறைய உதாரணங்கள் வெளிநாடுகளில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஆய்வுகளை பற்றியதாகவே இருக்கும். இவற்றையெல்லாம் நான் மேற்கோள் காட்டுவதற்குக் காரணம் பெரும்பாலானவர்கள் அறிவியல் சார்ந்த விளக்கங்களை மட்டுமே ஏற்பார்கள் என்ற காரணத்தால் தான். அதேவேளையில் இங்கே நாம் விவாதிக்கும் அனைத்து விஷயங்களும்  பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா போன்ற பண்டைய நாகரிகங்களையும் முதிர்ச்சியடைந்த சமுதாயத்தையும் கொண்ட நாடுகளில் அது ஆன்மீக ரீதியாகவே பார்க்கப்பட்டிருக்கிறது. 

'ஆன்மீகம்'(spirituality) என்பது நான் உணர்ந்து கொண்டவரையில்‌ 'அது மதங்களுக்கெல்லாம்  அப்பாற்பட்டது.ஆனால் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது.தனிப்பட்ட நபர்களால் உணரப்பட வேண்டியதே  தவிர பிறருக்கு உணர்த்த முடியாது'.இது 'சூரியன் கிழக்கே தோன்றி மேற்கே மறைகிறது' என்பதுபோல் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயமாக இருந்திருந்தால் இன்றுவரை யாரும் விவாதித்துக் கொண்டிருக்க மாட்டோமில்லையா? ஒருவகையில் 'ஆன்மீகம்' என்றும் உயிர்ப்போடு இருக்கும் பேசுபொருளாக மாறத் தான் இரு அணிகளாக பிரிந்திருக்கிறோமோ? இது யாருடைய திட்டம்? திட்டமிட்டவர் தான் கடவுளோ? மெய்ஞானம் விஞ்ஞானத்தால் எட்டிப் பிடிக்கக் கூடிய தூரத்திலா இருக்கிறது? ஆனால் நெருங்க நெருங்க தொலைவு அதிகரித்துக் கொண்டே செல்கிறதோ?'

மதங்கள் ஆன்மாவைப் பற்றியும் மறுபிறப்பைப் பற்றியும் சொல்வதென்ன?

இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை | ஸாங்கிய யோகம்: 

போர் புரிய மனம் வராமல் திகைத்துத் தன்னைச் சரணடைந்த அர்ஜுனனை நோக்கிக் கண்ணன் உரைக்கின்றான்: “அர்ஜுனா, நீ வருந்துவது முற்றிலும் தவறு. எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி வருந்துகின்றாயா? அல்லது அவர்களின் உடலைப் பற்றி வருந்துகின்றாயா? இரண்டும் சரியல்ல. ஆன்மா என்றும் அழிவற்றது. அதைக் கத்தியால் வெட்டவும், தீயினால் எரிக்கவும் முடியாது. உடலோ அழியும் இயல்பு வாய்ந்தது. நீ அழிக்காவிடினும் அது தானே அழிய வேண்டியதுதான். ஆன்மாவுக்கு ஓருடல் அழிந்ததும், மற்றோருடல் தானே வந்து சேரும். ஆன்மாவின் இயற்கையை எண்ணி உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீரவேண்டும். அச்செயல்களைச் செய்யுங்கால், நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறோம்". 

இஸ்லாத்தின் திருக்குர்ஆன்:

அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.

(அல்குர்ஆன்: 39:42)

கிறித்தவர்களின் பைபிள்:

இயேசு கிறிஸ்து :

இயேசு “மறுபடியும் பிறத்தல்” என்பதைப் பற்றி, அவற்றைப் பற்றி விளக்கமாக கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார்:

இயேசு நிக்கொதேமுவிடம் மறுபடியும் பிறத்தல் பற்றி பேசுகிறார்:

வசனம் - 1:

“ஒருவன் மறுபடியும் பிறவா விட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காண மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன் என்றார்.”                                                                                               ------யோவான்-3:3

நம்முடைய பாவங்கள் அனைத்தும் கழிக்கப்பட்டால் ,

நம்முடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டால் ,

கடவுள் நம்முடைய பாவங்களை ஏற்றுக் கொண்டு

மன்னித்து நம்மை ஏற்றுக் கொண்டால் ,

கடவுளுடைய குழந்தையாக நம்மை ஏற்றுக் கொண்டால் ,

நாம் புதியதாகப் பிறப்பு எடுத்தவர்களாவோம் ;

அதாவது புதியதாகப் பிறந்தவர்களாவோம் ;

அதையே மறுபடியும் பிறத்தல் என்ற வார்த்தையின்

மூலம் குறிப்பிடுகிறார்  இயேசு .

இவ்வாறு ஒருவன் ஒரு மனிதன் கடவுளுடைய ஆசி பெற்று மறுபடியும் பிறந்தால் மட்டுமே ,

கடவுளுடைய ராஜ்யத்தைக் காண்பான் .

இவ்வாறு ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால்

கடவுளுடைய ராஜ்யத்தைக் காண மாட்டான் .

என்பதை உண்மையாக உனக்குச் சொல்கிறேன் ;

சத்தியமாக உனக்குச் சொல்கிறேன் ;

மெய்யாக உனக்குச் சொல்கிறேன் ;

என்று நிக்கொதேமுவிடம் கூறுகிறார்  இயேசு.

இதேபோல் சமணம், பௌத்தம்,சீக்கிய மதமென பெரும்பாலான அனைத்து மதங்களும் மறுபிறப்பைப் பற்றிப் பேசுகின்றன.




Monday, March 08, 2021

16. இதற்குப் பெயர்தான் அமானுஷ்யமா?

 இந்த இடைப்பட்ட வேளையில், மீனாட்சிக்கு நடந்த நல்ல மாற்றங்கள் அனைத்தும் நாங்கள் ஆற் காட்டிற்குச் சென்று திப்பு மஸ்தான் அவ்லியாவை தரிசித்து வந்தபின் தான் என்று எனக்கு திடீரென ஒருநாள் தோன்றவே, ஆற்காட்டிலிருந்து என்னிடம் புரொக்கிராமராக வேலை செய்பவரை அழைத்து தர்கா நிர்வாகியிடம் பேசி அவரது அலைபேசியெண்ணை வாங்கத் தரச் சொன்னேன். 

அந்த அம்மையாரை (நிர்வாகியின் மனைவி) அழைத்து 'எனக்கு செளகரியமான ஒரு நாளை நான் கூறினால் அதற்கு ஒருநாள் முன்பு எனக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துதர முடியுமா? நாங்கள் துணி சாத்துவதுபோல் உங்கள் மத வழக்கப்படி நன்றி செலுத்த அவ்லியாவின் சமாதிக்குத் துணி போர்த்தலாமா?' என்று கேட்க, ஆம்! அப்படியொரு வழக்கம் உண்டு அதற்கு 'சாதர்' என்று கூறுவோமென்றார். இது நடந்த சில நாட்களில் திடீரென ஒரு சனிக்கிழமை அந்த அம்மையாரை  அழைத்து "நாளை நான் வருகிறேன். நீங்கள் துணியும் பிரசாதமாக ஏதேனும் இனிப்பும் வாங்கிவையுங்கள்" என்றேன்.நான்,அம்மா, ரேவதி‌ மீனாட்சி சகிதம் காரில் புறப்பட்டோம். ஆற்காட்டை அடையும் முன் அந்தப் பெண்மணி என்னை அழைத்தார். "தம்பி, இன்று வருகிறாயே! திட்டமிட்டு வருகிறாயா என்ன?"என்றார்.‌ நான் பதிலளித்தேன் "திடீரென நேற்று தோன்றியது நாளை போகலாமென்று. அதான் வந்து கொண்டிருக்கிறேன்"என்றேன். அந்தப் பெண்மணி சொன்னார் "தம்பி! இன்று ரமலான் நோன்பு முடிந்து 45வது நாள். எங்கள் தாதாவின் 267வது சந்தனக்கூடு மூன்று நாட்கள் கொண்டாடுவோம். இம்முறை முதல் நாள் முதல் துணியே நீ தான் போர்த்துகிறாய்.‌அவர் உன்னை இன்று வரும்படி அழைத்துள்ளார்"என்றார்.எனக்கு ஏதும் புரியாததால் "அப்படியா?" என்று மட்டும் கேட்டேன். தர்காவை எங்கள் கார் நெருங்கும் வேளையில் எங்களை வரவேற்க அந்தப் பெண்மணி வெளியே நின்று கொண்டிருந்தார். மீனாட்சியைக் கண்டதும் அவளை தூக்கி அணைத்தபடி கண்கலங்கினார் " தம்பி! இந்தக் குழந்தை நேத்தே என் கனவுல வந்துச்சு‌.நாளைக்கு உன்ன பாக்கவாரேன் பாட்டினு சொல்லிச்சு"என்றார். எனக்கு மீண்டும் குழப்பமே! "அப்படியா!" என்று கேட்டுக் கொண்டேன். தர்காவில் அவ்லியாவின் சமாதிக்கு துணி போர்த்தி பிராத்தனையை நிறைவேற்றிவிட்டு நாங்கள் சற்று அமைதியாக உட்கார்ந்தோம். எங்களிடமிருந்து சற்றுத் தள்ளி உட்கார்ந்திருந்த மீனாட்சியின் திடீர் 'களுக்..களுக்' சிரிப்பு மட்டும் அங்கே எதிரொலித்தது. அவளை சும்மாயிருக்கச் சொல்வதற்காக நான் எழுந்து பார்த்தேன்.‌எனக்கு மூன்றாவது அதிர்ச்சி காத்திருந்தது! மீனாட்சி இஸ்லாமியர்கள் தொழுவதுபோல் மண்டியிட்டு அமர்ந்து கைகளை முகத்தின் முன்னால் வைத்துக் கொண்டு சமாதிக்கு மேலே எதையோ பார்த்தபடி சிரிக்கிறாள்!(அவளுக்கு தான் கைகளைக் கூப்புவது கடினமாயிற்றே! இப்போது எப்படி முடிகிறது?)
                                             துறவி திப்பு மஸ்தான் அவ்லியாவின் சமாதி


இப்படியெல்லாம் உண்மையாகவே நம்மைச் சுற்றி நடக்கிறதாயென்று என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.ஆம்! உண்மை தான். இவற்றையெல்லாம் அறியாது சாமானியர்கள் இருக்கும் உலகமே மாயை என்றுணர்கிறேன் நான்!

அந்தப் பெண்மணி சொல்கிறார் "அவ எங்க 'தாதா' கூட பேசுறா! தொந்தரவு செய்யாதேப்பா. எங்க தாதாவுக்கு குழந்தைகள்னா உசிரு. அவர் வாழ்ந்த காலத்துல (17-18ஆம்‌ நூற்றாண்டு!) அவர பாக்க வர்றவங்க கடலை மிட்டாயும் ரொட்டியும் அவருக்குக் குடுப்பாங்க.அவர் அத சாப்புடாம தெருவுல விளையாடுற குழந்தைகளைக் கூப்பிட்டு கொடுத்துட்டு காட்டுக்குள்ள போயிடுவாரு"என்றார்.

துறவி திப்பு மஸ்தான் அவ்லியாவைப் பற்றி நான் படித்தது: திப்பு மஸ்தானும் அவருடைய சகோதரர்கள் தாவகல் மஸ்தான் மற்றும் மாணிக் மஸ்தான் ஆகியோர் (இன்றைய கர்நாடக மாநிலத்தின்) பீஜப்பூரிலிருந்து  வந்தவர்கள்.மூவருமே சூஃபிக்கள்.‌மற்ற இருவரும் பெங்களூரில் தங்கிவிட திப்பு மஸ்தான் மட்டும் ஆற்காட்டிலேயே பெரும்பாலும் இருந்திருக்கிறார் (தாவகல் மஸ்தானின் தர்கா பெங்களூர் கே.ஆர் மார்க்கெட்டிலும், மாணிக் மஸ்தானின் தர்கா காட்டன் பேட்டிலும் அமைந்துள்ளது.இவை இரண்டுமே அனைத்து மதத்தினரும் வந்துசெல்லும் பிரபல வழிபாட்டுத் தலங்களாகும்).

திப்பு மஸ்தான்  பெரும்பாலும் மனிதர்களைக் கண்டால் அவர்களுடன் பேசுவதை தவிர்த்து விடுவாராம். மரங்களில் இருக்கும் பறவைகளுடனும் காட்டில் இருக்கும் புலி போன்ற கொடிய விலங்குகளுடன்  பேசி மகிழ்வாராம். அப்போது அவ்வழியே மனிதர்கள் தென்பட்டால் தனது பேச்சை நிறுத்திக் கொள்வாராம். பறவைகளும் விலங்குகளும்கூட உடனே கலைந்து சென்று விடுமாம். வழிப் போக்கர்கள் சென்ற பின்பு மீண்டும் திரும்பி வந்துவிடுமாம்!

இதைப்பற்றி ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட எனது உறவினர் ஒருவரிடம் தொலைபேசியில் கூறினேன். இதைக் கேட்ட அவர் மகான்களின் சமாதி உள்ள இடங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது சகஜம்தான் என்றும், இதே போல் 'மெட்ராஸ் கெஸட்டில்' (Madras Government Gazette,Chapter XI, page 213, with the caption “Manchali Adoni Taluka”) பதிவாகி இன்றும் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும், மந்திராலயத்திலும் பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு கோப்பைப் பற்றி கூறினார்.  அதாவது திப்புசுல்தான்  1799ல் போரில் கொல்லப்பட்ட பிறகு மைசூரின் பல பகுதிகளை அன்றைய ஈஸ்ட் இந்தியா கம்பெனி கையகப்படுத்திக் கொண்டது.1800ல்  அப்பொழுது மைசூரிலிருந்து சேர்த்துக் கொள்ளப்பட்ட பெல்லாரி பகுதியின் கலெக்டராக இருந்த தாமஸ் மன்ரோவை (பின்னாளில் சென்னை மாகாண கவர்னராக 'சர் தாமஸ் மன்ரோ' என்று அறியப்பட்டார்! மன்ரோ சிலை சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று!) அதோனி பகுதிக்குட்பட்ட ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ள 'மந்த்ராலயம்' சென்று அதன் நில உரிமை குறித்த ஆவணங்களை விசாரித்துவிட்டு, அப்படி ஆவணங்கள் சரியில்லாதபட்சத்தில் அன்றைய ஆங்கிலேயரின் 'ராயத்துவாரி' சட்டத்தின்படி மடத்தையும் அதன் சொத்துக்களையும் பறிமுதல் செய்து கொள்ளலாம் என்ற முடிவுடன் மன்ரோ அனுப்பி வைக்கப்படுகிறார். 'மடம்' என்ற காரணத்தால் தனது ஷு மற்றும் தொப்பியை கழற்றி விட்டு மன்ரோ உள்ளே பயபக்தியோடு சென்றிருக்கிறார். மடத்தின் உள்ளே அமர்ந்திருந்த பெரியவர் மன்ரோ கேட்ட கேள்விகளுக்கு பொறுமையுடன் பதில் கூறியதுடன் அவருக்குத் தேவையான ஆவணங்களையும் காட்டியிருக்கிறார்.‌அதாவது  17 ஆம் நூற்றாண்டில் அந்தப் பகுதியை ஆண்டு வந்த அதோனி நவாப் கொடையாக வழங்கிய மாஞ்சாலை  கிராமம்தான்  'மந்த்ராலயம்' அமைந்துள்ள இடம் என்பதைப் புரியவைத்து, மன்ரோவை  ஆசீர்வதித்து அட்சதையும் கொடுத்து  அனுப்பியிருக்கிறார். அந்தப் பெரியவர். அந்த இடத்தில் வில்லங்கம் ஏதும் இல்லை என்பதால் 'மந்த்ராலயம் எந்த இடையூறுமின்றி செயல்படலாம்' என்று அரசாணை வெளியிட்டிருக்கிறார் மன்ரோ. பின்னர் தெரிய வந்த விஷயம் என்னவென்றால், மன்ரோ சந்தித்துப் பேசிய அந்த நபர் வேறு யாருமல்ல! இந்த சம்பவம் நடந்த 125 ஆண்டுகளுக்கு முன்பு அங்கே பிருந்தாவனத்தில் ஜீவ சமாதியான சுவாமி ராகவேந்திரர் தான் அது.‌ அன்று  சுவாமி ராகவேந்திரர் காட்சியளித்தது,பேசியது மன்ரோவின் கண்களுக்கு மட்டுமே தெரிந்ததாகச் சொல்கிறார்கள். இதை நான் படித்த சில நாட்களிலேயே மன்ரோவின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்திலிருந்து இங்கு வந்து 'மந்திராலயம்' சென்று வழிபட்ட செய்தியை இணையத்தில் படித்தேன்.


Thursday, December 17, 2020

15. பின் நோக்கிப் பாயும் அறிவு முன்னோக்கியும் பாயும்

மீனாட்சி போல் ஹைபர்லெக்சியாவுடன் சவான்ட்சின்ட்ரோமும் உள்ள சில குழந்தைகளிடம் நான் பார்த்து வியந்த குணாதிசயங்கள்: 

  • கற்காமலேயே முன்பின் அறிமுகமில்லாத அனைத்து விஷயங்களிலும் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருக்கிறார்கள். 
  • மேலும் இக்குழந்தைகளுக்கு கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என முக்காலமும் தெரிந்திருக்கிறது (extrasensory perception).
  • 'டெலிபதி': நுண்ணுணர்வு/உள்ளுணர்வு மூலம் பிறர் மனதை அறிவது. மேற்கண்ட இந்த முக்கிய குணாதிசயங்கள் தான் 'சவான்ட்சின்ட்ரோம்' உள்ள குழந்தைகளை வெறும் 'ஹைபர்லெக்சியா' (கற்க்காமல் எழுதப் படிக்கத் தெரிவது) மட்டுமேயுள்ள குழந்தைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அதிலும் மேலே குறிப்பிட்டதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது குணாதிசயங்கள் அரிதிலும் அரிதாகவே காணப்படுகிறது. 

உதாரணம்#1: சிறுநீரக பாதிப்புள்ள எனது தந்தைக்கு சில சமயங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதுபோன்ற சமயங்களில் பாதிப்பு ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு/ சில மணிநேரங்களுக்கு முன்பிருந்தே மீனாட்சியின் நடவடிக்கைகள் சற்று வித்தியாசமாக காணப்படும். சில முறை அவள் புரியவைக்க முயற்சித்த விஷயங்களை நாங்கள்தான் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோம். நீங்கள் கேட்கலாம் "அவளுக்குத்தான் எழுதத் தெரியுமே? உங்கள் கைகளை பிடித்து எழுதிக் காட்ட வேண்டியதுதானே?" என்று. இதற்கு என் பதில் "அங்குதான் பிரச்சினையே! உணர்ச்சி வசப்படும் நேரங்களில் அவள் சிந்திக்க மாட்டாள்.நாம் எழுதிக் காட்டினால் மற்றவர்கள் புரிந்துகொண்டு விடுவார்கள்!"என்ற சாதாரண விஷயம் அந்த நேரத்தில் அவளுக்குத் தோன்றாது.(இது ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கும் பொருந்தும்! அவர்கள் சொல்வது நமக்குப் புரியாவிட்டாலோ, நாம் சொல்வது அவர்களுக்கு புரியாவிட்டாலோ அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடுவார்கள்!) நாம் எழுத சொல்லி வற்புறுத்தினால் அழத் தொடங்கிவிடுவாள்.

கிட்டத்தட்ட எல்லாம் தெரிந்தும் அதை வெளிக்காட்டாமுடியாமல் இருப்பது, 'எதுவுமே தெரியாது' என்ற நிலைக்கு ஒப்பானது தான். நான் இதை கீழ்க்கண்டவாறு விளக்க விரும்புகிறேன்: 'எதுவுமே தெரியாது' (முட்டாள்) 'எல்லாமே தெரியும்' (அறிஞன்) என்ற இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட தூரம் மிகக்குறைவே.நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், இது ஒரு கடிகாரத்தின் சூழற்ச்சி போல் முழு சுற்று சுற்ற வேண்டுமென்று.ஆனால் எனக்குத் தோன்றுகிறது கடிகார முள் எதிர்திசையில் ஒரே ஒரு அங்குலம் நகர்ந்தாலே அது மிகப் பெரிய மாறுதலை‌ உண்டாக்குமென்று.


அதுபோல்தான் இதுவும். 'ஆம்', 'இல்லை' என்ற நிலைகளுக்குள் நிகழும் மாற்றம். மிகுந்த அறிவு கொண்டவர்கள் திடீரென மனநல பாதிப்புக்கு உள்ளாவதும், 'ஒன்றுமே தெரியாது' என நாம் சிலரைப் பற்றி நினைக்கும் போது அவர்கள் அனைத்தும் அறிந்தவர்களாக இருப்பது என  முரண்பட்ட இரண்டு விஷயங்களுக்குள்ள தொலைவு மிக மிகக் குறைவே எனத் தோன்றுகிறது. 

உதாரணம்#2:அதேபோல் அவளது பன்மொழித் திறமையை சோதிக்க நினைத்த நான் வீட்டில் அவள் அதிகம் எழுத ஒத்துழைக்காத காரணத்தால் அவளது ரைட்டிங் கிளாஸ் எடுக்கும் தெரப்பிஸ்டிடம் அவளுக்கு என்னென்ன மொழிகள் தெரியுமென்று சோதிக்கும்படி கேட்டிருந்தேன்.தெரப்பிஸ்டின் கையைப் பிடித்துக் கொண்டு எழுதத் தொடங்கிய மீனாட்சி தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம்,ஐரிஷ் (உலகின் மிக வேகமாக அழிந்து வரும் மொழிகளில் ஒன்று), ஆங்கிலம் மற்றும் சைனீஸ் போன்ற மொழிகளில் ஒரு முக்கிய விஷயத்தை தனக்குப் பல மொழிகள் தெரியும் என்பதோடு சேர்த்தே வெளிக்காட்டினாள். அவள் சொன்ன விஷயம் தனக்கு வந்த கனவு என்கிறாள். அதாவது ஐஸ்வர்யா என்ற அந்த தெரபிஸ்டிற்க்கு குழந்தை பிறக்கப் போகிறது என்பதுதான் அந்த விஷயம் இதில் 'சப்னே' (கனவு) என்பதை மலையாளத்திலும் 'பேபி வில் கம் ஃபார் ஐஸு' என்பதை ஆங்கிலத்திலும், மேலும் பிறக்கப் போகும் குழந்தையை சீனமொழியில் "போபோ"என்றும் எழுதியிருந்தாள். அந்தந்த மொழிகளுக்குக் கீழேயே அது எந்த மொழி என்பதை நாம் புரிந்து கொள்வதற்காக ஆங்கிலத்திலும் எழுதியிருந்தாள். இதில் அவள் எழுதிய மலையாள எழுத்துக்கள் ஒரு கோணத்தில் பார்த்தால் தமிழ் எழுத்துக்கள் போல தெரிந்தது, இவளது தெலுங்கு எழுத்துக்களை டெல்லியில் உள்ள எனது அத்தை மகள் தனது அண்டை வீட்டாரிடம் கேட்க, அவர்களோ அது தெலுங்கு தான் ஆனால் இன்று வழக்கத்தில் இல்லாத எழுத்து வடிவமான கோவில் கல்வெட்டுக்களில் காணப்படும் பழைய கிரந்தத்தை ஒத்துள்ளது என்று கூறியிருக்கிறார்கள். "அவள் எழுதிய 'போபோ' சீன மொழியே இல்லை" என்றார் இதை தன்னிச்சையாக சோதித்த ஃபிரான்ஸில் இருக்கும் எனது உறவுக்கார பெண்மணி, தனது தோழியான ஒரு சீனப் பெண்ணிடம் விசாரித்துவிட்டு பதிலளித்திருந்தார். இதை நான் விரிவாக ஆராய்ந்த போது 'போபோ' என்ற அந்த வார்த்தைக்கு 'பாண்டாக் குட்டி' என்று கொச்சையாக குழந்தைகளை கொஞ்சு வதற்காக சீன தேசத்தில் வழக்கத்தில் பயன்படுத்தும் சொல் என்று அறிந்தேன். ஆனால் அவள் எழுதிய எழுத்துக்கள் சீன தேசத்தில் பயன்படுத்தும் எழுத்துக்களே அல்ல! அங்கு பயன்படுத்தப்படுவது நமது தமிழின் சீர்திருத்த எழுத்துக்களைப் போல் எளிமையாக்கப்பட்ட சீன மொழியாகும் (சிம்பிளிஃபைட் சைனீஸ்). இவள் பயன்படுத்திய எழுத்துக்கள் சீன தேசத்திற்கு வெளியே தைவான்,ஹாங்காங், மகாவா ஆகிய இடங்களில் இன்றும் பயன்படுத்தப்பட்டு வரும் பண்டைய சீன எழுத்துக்களாகும் (ட்ரெடிஷனல் சைனீஸ்).என் உறவினரின் தோழி நேரடியாக சீனாவிலிருந்து வந்தவர் என்பதால் எளிய சீன எழுத்துக்களை மட்டுமே அறிந்திருக்கிறார். இதை நான் கூகுளில் கண்டுபிடித்து இரண்டு எழுத்துக்களுக்கும் உள்ள வித்தியாசங்களை அவருக்கு விளக்கினேன்.அவர் ஒப்புக் கொண்டாரா? தெரியாது! அவருக்கு இருந்ததும் ஒருவகை அக்கறை தான். நமது சந்திராயன் உண்மையிலேயே நிலவை நெருங்கியதா, அதன் தென்பகுதியில் தான் விழுந்ததா என்று நாசாவும், ஐரோப்பிய விண்வெளிக் கழகமும் சோதித்த அதே அக்கறை.நாம்ஆர்வக் கோளாறில் நமது உற்றார்‌ உறவினரிடம் நம் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.அதை சரியாகப் புரிந்து கொள்வதும், எதிர்மறையாக செயல்படுவதும் அவர் அவர் மனநிலையைப் பொருத்தது! உங்களுக்கு அதிசயமாக தெரிந்த விஷயம் பிறருக்கு கேலிக்கூத்தாக தெரிவது இயல்புதானே?ஆனால் அதே பெண்மணியின் கனவில் இன்றும் அடிக்கடி மீனாட்சி வருவதாக அவரே கூறுகிறார். மீனாட்சியின் பள்ளி வகுப்பறை இப்படித்தான் இருக்கிறது, அங்கே ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்(சாதாரண ஒரு ஆசிரியர்+ ஒரு நிழல் ஆசிரியர்+ ஒரு உதவியாளர்) இருக்கிறார்கள் என்பது வரை அவர் கனவில் வந்ததாகச் சொல்லும் விஷயங்கள் உண்மையுடன் பொருந்திப் போகின்றன.





தான்  சொல்வது உண்மை (True) என்பதை  தமிழ்  ஆங்கிலம் சேர்த்து இறுதியாக 'Trண்மை' என்று எழுதியிருக்கிறாள். இதை எழுதியபோது மீனாட்சிக்கு  ஐந்து வயது!


ஐந்து வயது குழந்தையால்  எதிர்காலத்தை நிகழ்காலத்தில் கடந்தகால எழுத்துமுறையில் விளக்கமுடிகிறதென்றால் இது உண்மையில் வியப்பான விஷயம்தானே?!


(இது நடந்த ஆறு மாதங்களுக்குள் ஐஸ்வர்யா கர்ப்பமான காரணத்தால் வேலையிலிருந்து தற்காலிகமாக நின்றுகொண்டாள்.வேறு வழியில்லாமல் மீனாட்சியின் ரைட்டிங் கிளாஸும் நிறுத்தப் படவேண்டிய நிலை வந்தது!).

முக்கிய குறிப்பு: இதே ஐஸ்வர்யா, மீனாட்சியிடம் உனக்கு எத்தனைமொழிகள் தெரியும் என்று கேட்க "So many. Can't count"("நிறையத் தெரியும். எண்ணிலடங்காது)  என்று எழுதியிருக்கிறாள். "நீ அறிந்தவற்றுள் உனக்கு மிகவும் பிடித்த மொழி எது?" என்ற கேள்விக்கு ஏதோ மெத்தப் படித்த அறிஞரைப் போல் "தமிழ்" தான்! "இலக்கணம் இலக்கியம்" சிறப்பாக கொண்டுள்ளதால் காரணத்தால் என்று பொருள்படும்படி பதிலளித்துள்ளாள். மேலும் "எழில் மிகுந்த மொழி" என்று குறிப்பிட்டுள்ளாள். 


இது எழுதியபோது மீனாட்சிக்கு நாலரை வயது!

உதாரணம்#3: எனது மனைவியின் மூத்த சகோதரர் ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்திருந்தபொழுது மீனாட்சியைப் பற்றி அவரிடம் குறிப்பிட்டேன். இதைக் கேட்ட அவர் "மாப்ளே!  எங்கிட்ட எழுதுவாளானு  தெரியல.நீங்களே அவ கையப் புடிச்சுக்கோங்க. நான் என்னைக்கு சுவிட்ஸர்லாந்து போவேன்னு அவ கிட்ட கேளுங்க!"என்றார். இது நடந்தது டிசம்பர் 2016ல். இவள் எழுதிய தேதி 'மே 5,  2017' என்று. இதைப் பார்த்த அவர் தனது மொபைலில் கேலண்டரை சென்று பார்த்தார். அவருக்கு முகமெல்லாம் வியர்த்து படபடப்பாக காணப்பட்டார் "மாப்ளே! நீங்க குழந்தைப் பற்றி கவலையே படாதீங்க!அவ பெரிய ஜீனியஸ்! என் மனைவியையும் அழைத்து "நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டிய நேரம் இது.எதற்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?"என்றார். அவர் மேலும் சொன்னார் "நான் மே முதல்வாரத்தில் வெளிநாடு செல்வேனென்று தெரியுமே ஒழிய, தேதி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. ஆனால் எங்கள் நிறுவனத்தைப் பொறுத்த வரையில் வாரத்தின் இறுதி வேலை நாட்களில் தான் அதாவது வெள்ளிக் கிழமைகளில் தான் 'ஆன்சைட்' அனுப்புவார்கள். மீனாட்சி குறிப்பிட்டுள்ள தேதி வெள்ளிக்கிழமையாகத் தான் வருகிறது. அப்படியானால் எனக்கே தெரியாத நிலையில் நான் ஊருக்கு செல்லும் நாளை அவள் எப்படித் தெரிந்து வைத்திருக்கிறாள் பாருங்கள்!"என்றார்.

உதாரணம்#4: ஒருமுறை அமெரிக்காவிலிருந்து வந்திருந்த எனது மாமாவிடம் மீனாட்சியின் கையைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி உங்களுடைய அலைபேசி எண்ணைக் கேளுங்கள் எழுதுவாள் என்றேன். அவரிடம் அழகாக ஒத்துழைத்த மீனாட்சி அவருடைய பத்து இலக்க அமெரிக்க அலைபேசி எண்ணை அவருக்கே எழுதிக் காட்டினாள் (அவள் எழுதியதைப் பார்த்தால் அவரது கையை தொட்டதால் அவரது உணர்வுகளை புரிந்து கொண்டது போல் இல்லை! தனக்கு முன்பே தெரிந்த விஷயத்தை ஆர்வமாக எழுதுவது போல் நடந்து கொண்டாள்). இது தவிர அவரது மகள் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும்பொழுது அமெரிக்காவின் பிரபல போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் செய்துகொண்டிருந்தாள். நான் "சந்தியா எந்த நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறாள்?" என்று மீனாட்சியிடம் வினவினேன். இவள் உடனே 'Lockheed Martin' (லாக்ஹீட் மார்ட்டின்) என்று ஆங்கிலத்தில் தொடங்கி கடைசி எழுத்து 'ன்'னை மட்டும் தமிழில் எழுதிக் காட்டினாள். இன்று அவளுக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் வேலை கிடைத்தாலும் அவள் வேலைக்கு சேர்ந்தது என்னவோ லாக்ஹீட் மார்டினில் தான். 

உதாரணம்#5: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒரு விஷயம்!

அப்பொழுது எனது மனைவி கருத்தடை மாத்திரை உட்கொண்டதையும் மீறி கருவுற்றிருந்தாள். இதில் ஆபத்து அதிகம் என்ற காரணத்தால் மருத்துவரின் பரிந்துரைப்படி 38 நாள் கருவை மாத்திரை மூலம் கலைக்க முடிவு செய்திருந்தோம். குறிப்பிட்ட நாளில் கருக்கலைப்பு மாத்திரையை எனது மனைவி உட்கொண்ட அந்த சமயத்தில் கையில் ஒரு கைக்குட்டையை எடுத்துக் கொண்ட மீனாட்சி பூஜை அறையில் போய் உட்கார்ந்து கொண்டாள். ஒரு மணிநேரத்தில் கரு கலையத்
தொடங்கியது. சரியாக கரு கலைந்துவிட்டது என்று தெரிந்த அந்த நேரம் பூஜை அறையை விட்டு வெளியே வந்த மீனாட்சி தனது அம்மா ரேவதியின் மணிக்கட்டை கடிக்கத் தொடங்கினாள்.இதனால் மீனாட்சியின் பற்கள்பட்டு ரேவதியின் கைகள் முழுவதும் புண்ணாக்த் தொடங்கியது. இது கிட்டத்தட்ட 2 வாரங்கள் நீடித்தது. 'மீனாட்சிக்கு புதிதாக மனநல பாதிப்பும் ஏதேனும் சேர்ந்துவிட்டதோ?' என்று நாங்கள் அஞ்சத் தொடங்கினோம். அந்த சமயத்தில் ரேவதி ஓய்வில் இருக்க, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு நான் மட்டுமே மீனாட்சியை தெரப்பி வகுப்புகளுக்கு அழைத்துச் சென்று வந்தேன். ஒருமாத காலம் கழித்து ரேவதி சற்று உடல் நலம் தேறியவுடன் அவளே அழைத்துச் செல்ல தொடங்கினாள். அவளை வெகு நாட்கள் கழித்து பார்த்த அந்த தெரப்பி சென்டர் நிர்வாகி "ரேவதி! உங்களுக்கு கருக்கலைப்பு ஏதேனும் நிகழ்ந்ததாயென்று கேட்க?". ரேவதிக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது. அவர் மேலும் கூறியதாவது "உங்கள் மகள் உங்கள் மீதும் உங்கள் கணவரின் மீதும் மிகுந்த கோபத்தில் இருப்பதாக என்னிடம் எழுதிக் காட்டினாள். மேலும் "நன்றாகத்தானே இருந்தான் எனது தம்பி? (எனது கருத்து: 38 நாள் கரு ஆணா பெண்ணா என்று மருத்துவர்களாலேயே  கணிக்க முடியாதே!) பிறகு ஏன் அவனை அழித்தார்கள் என்று கேட்டுச் சொல்லுங்கள்" என்று ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறாள். மருத்துவரின் ஆலோசனையின் பெயரில்தான் கருக்கலைப்பு நடந்ததாக மீனாட்சியிடம் நாங்கள் வாய்மொழியாக எடுத்துச் சொன்னோம். பெரிய விஷயத்தை தானாகவே புரிந்து கொண்ட மீனாட்சிக்கு நாங்கள் சொன்னது புரிந்ததா என்று தெரியாது‌. ஆனால் இந்த சம்பவம் நடந்ததிலிருந்து எந்த பொம்மைக் கடைக்குச் சென்றாலும், அங்கே ஒரு தவழும் சிறுவனின் பொம்மையோ அல்லது பால்புட்டியுடனிருக்கும் ஒரு சிறுவனின் பொம்மையைக் கண்டாலோ மீனாட்சி  முதலில் அதைத் தான் எடுப்பாள்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்  இன்றுவரை மீனாட்சி அவளது விரல்களைப் பிடித்துக் கொண்டால் மட்டுமே எழுதுகிறாள். எல்லோரிடமும் எழுதுவதில்லை. பள்ளியிலும்  தெரப்பி கிளாஸ்களிலும் அழகாக ஒத்துழைக்கிறாள்.பள்ளியில் தற்போது நிழல் ஆசிரியையின் (shadow teacher) உதவியுடன் ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் (இது ஒரு இன்க்ளூஷன் பள்ளி. சிறப்பு பள்ளி அல்ல!) பயிலும் மீனாட்சி, அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதுடன் வியக்கத் தகுந்த வகையில் அனைவரையும் விடவும் மிக விரைவாகவே தேர்வுகளை எழுதுகிறாள் என்கிறார்கள். பெரிய வகுப்புகளின்  பாடங்கள் கூட அவளுக்குத் தெரிந்திருக்கிறது என்பதை பள்ளி நிர்வாகிகளும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

பெரும்பாலும் வீட்டில் எங்களிடம் எழுதுவது அவளது அப்போதைய மனநிலையைப் பொருத்தது.தெரிந்தவர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் போன்றவர்களிடம் அவளது இந்தத் திறமையைப் பற்றி சொல்லி எழுதுகிறாளா என்று பார்த்தால் பெரும்பாலும் கிறுக்கிவிடுகிறாள். யாரிடம் எப்போது எழுத வேண்டும் யாரிடம் எழுத வேண்டாம் போன்ற விஷயங்களை அவளே தீர்மானிக்கிறாள். அவளது பிடிவாதத்தை உடைப்பது எங்களால் முடியாத காரியமாகவே உள்ளது.அவள் எழுதுவதை கேமராவில் பதிவு செய்வதுகூட எங்களால் முடியாது! (எப்படி மறைத்துக்கொண்டு வீடியோ எடுத்தாலும் 'டெலிபதி' மூலம் தெரிந்து கொண்டு விடுகிறாள்!)அவளைப் புரிந்து கொண்டவர்களுக்கு அவளோ ஒரு மேதை. புரியாதவர்களுக்கு ஒன்றும் தெரியாத குழந்தையைப் பற்றி நடக்காத விஷயங்களை நடந்ததாகச் சொல்லி பொய்க்கதை பரப்பிவரும் பெற்றோர்கள் நாங்கள். ஒரு சில கண்முன் நிகழும் அதிசயங்களை பிறருக்கு புரிய வைக்கமுடியாமல் போவது மிகப்பெரிய தவிப்பு தான். கிட்டத்தட்ட எங்களின் நிலைமையும் பேசமுடியாமல் மீனாட்சி கஷ்டப்படுவதற்கு ஒப்பானதே. அவளுக்கு  தொலைக்காட்சி மூலமோ,செய்தித் தாள் மூலமோ பெருமை வாங்கித் தர வேண்டியது எங்களுடைய வேலையல்ல. அது எங்களின் நோக்கமும் அல்ல. உற்றார், உறவினர், அவள் பயிலும் பள்ளி போன்றயிடங்களில் அவள் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டால் அவளை கையாள்வது அனைவருக்கும் எளிதாக இருக்கும் என்பது மட்டுமே எங்களின் ஆதங்கம்.

நாம் அனைவரும் காய்ச்சல்,தலைவலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றின் அறிகுறிகளை உணர்ந்துள்ளதால் நமக்கு அவற்றின் தாக்கம் தெரியும். இப்படியும் ஒரு பிரச்சனை உள்ளது என்பதை சொன்னாலும் பிறருக்குப் புரிய வைப்பது மிகவும் கடினமாகவே உள்ளது. இது ஒருவகையில் பார்த்தால் இதுபோன்ற குழந்தைகளுடன் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே நான் சொல்வது முழுமையாகப் புரியும். 

நான் மேற்கொண்டு இணையத்தைத்  தேடியதில் கருநீலக் குழந்தைகள் (Indigo Children) பற்றித் தெரிந்து கொண்டேன்:
நான்ஸி ஆன் டாஃபே என்ற‌ அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு பெண்மணி. இவருக்கு சினஸ்தீஸியா பிரச்சனை உண்டென்று சொல்லப்படுவதுண்டு. வண்ணங்களால் ஏற்படும் சினஸ்தீஸியாவை (colored grapheme synesthesia) அடிப்படையாகக் கொண்டு வண்ணங்களின் (colorology) அடிப்படையில் மனிதர்களை ஒளி வட்டங்களாகப் பிரித்து (energy level or aura) அவர்களது குணாதிசயங்களைக் குறிப்பிட்டுள்ளார். இவரது கூற்றின்படி கருநீலக் குழந்தைகள் (Indigo children) என்பவர்கள் 70களின் பிற்பகுதி மற்றும் என்பதுகளில் அதிகம் பிறந்த குழந்தைகள்.பெரும்பாலும் நினைத்ததைச் சாதிக்கும் குணமும், கட்டுப்பாடுகளை அதிகம் விரும்பாததும் இவர்களின் குணாதிசயங்களாக இருக்கும் என்கிறார். ஆனால் மருத்துவ உலகமோ ADHD போன்ற கவனச்சிதறல் உள்ள குழந்தைகளை 'கட்டுப்பாடுகளை விரும்பாதவர்கள்' என குறிப்பிடுவது ஒரு வகையில் அவர்களின் குறைகளை மறைப்பதற்கு எடுத்தாண்ட முயற்சி என்று குறிப்பிடுகிறார்கள். இதே  கருநீலக் குழந்தைகளை அடிப்படையாக வைத்து ஹாலிவுட் திரைப்படங்களும் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஸ்படிகக் குழந்தைகள் (crystal children): நான்ஸியைத் தொடர்ந்து கருநீல குழந்தைகளைப் பின்பற்றி புதிதாகப் பிறக்கத் தொடங்கியிருக்கும் புதிய தலைமுறைக் குழந்தைகளைப் பற்றி டோரன்‌ வெர்ச்யூ என்ற பெண்மணி ஸ்படிகக்  குழந்தைகள் (crystal children) என்ற தத்துவத்தை முன்வைக்கிறார். இவரது புத்தகம் "A guide to the newest generation of psychic and sensitive children" அமேசானில் விற்பனைக்கு கிடைக்கிறது. இவர் குறிப்பிடும் குணாதிசயங்கள் மீனாட்சிக்கு கனகச்சிதமாகப் பொருந்துகிறது. அதாவது இக்குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியானவர்கள், மென்மையானவர்கள், பேரன்பைக் கொண்டவர்கள், தாமதமாகவே பேசுவார்கள், ஆனால் நுண்ணுணர்வும் (telepathy) அமானுஷ்ய சக்தியும் இவர்களுக்கு உண்டு. கூட்டமான இடங்களில் தவிர்ப்பார்கள். இயற்கையை அதிகம் விரும்புவார்கள். சில குழந்தைகள் பிரபஞ்சத்தைப் பற்றியும் முற்பிறவியைப் பற்றியும் கூட பேசுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவை எதுவுமே மருத்துவர்களாலும் விஞ்ஞானத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.