Showing posts with label 20. 'மௌனம்' என்பது பிரபஞ்சத்தின் மொழியே!. Show all posts
Showing posts with label 20. 'மௌனம்' என்பது பிரபஞ்சத்தின் மொழியே!. Show all posts

Sunday, March 14, 2021

20. 'மௌனம்' என்பது பிரபஞ்சத்தின் மொழியே!

 எனக்குள் தொடங்கிய தேடலால் 'டெலிபதி' பற்றி இன்னும் சற்று ஆழமாக அறிய முயற்சித்த எனக்கு சில சுவாரசியமான விஷயங்கள் புரியத் தொடங்கின. உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம் 2004 சுனாமியின் போது அந்தமான் காடுகளில் இருந்த  பழங்குடி மக்கள் சுனாமி வரும் முன்பே எச்சரிக்கையுடன் தப்பித்து மேடான பகுதிகளுக்குச் சென்றுவிட்டார்கள். அதேபோல் விலங்குகளும் தங்களது உள்ளுணர்வால் முன்கூட்டிய அறிந்திருந்தன போன்ற செய்திகள் நாம் படித்திருப்போம்.

இதிலிருந்து நான் உணர்ந்து கொண்ட விஷயம்: மனிதன் மொழி வளர்வதற்கு முன்னாலும் பேசிக்கொண்டுதான் இருந்திருக்கிறான் உள்ளுணர்வின் (டெலிபதி) மூலம்.நாம் மொழியைப் பயன்படுத்த தொடங்கியதிலிருந்து மெதுவாக இந்த குணம் நமக்குக் குறையத் தொடங்கிவிட்டது. அதேவேளையில் மொழியை பயன்படுத்த தொடங்கிய நாம் பெரும்பாலும் நமது சுய ஆதாயத்திற்காக நாம் உள்ளே இருப்பதை வெளியே தெரிவிக்க வேண்டும் என்ற நிலையையும் தாண்டி ஜால வார்த்தைகளைப்  பயன்படுத்தி 'உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்' நிலையை எட்டிவிட்டோம். ஆனால் இது போன்ற விளையாட்டுக்கள் பிறர் மனதைப் படிக்க தெரிந்தவர்களிடம் நடக்காது. அதனால்தான் இக்குழந்தைகள் சிலரிடமிருந்து ஒதுங்கியே இருக்கிறார்களோ? அதேவேளையில் விலங்குகள் பெரும்பாலும் தங்களின் பிறவி குணத்துடன் நேர்மையாக இருப்பதற்குக் காரணம் மொழி இல்லாததுதான் என்றே தோன்றுகிறது. ஆனால் அவைகளும் 'டெலிபதி' என்னும் பிரபஞ்ச மொழியால் அவர்களுக்குள்ளும் மற்ற உயிரினங்களுடனும் பேசிக்கொண்டு தான் இருக்கின்றன. நமக்கு அது புரியாத காரணத்தால்‌ விலங்குகள் தனது எண்ணங்களை வெளிப்படுத்துவதில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

ஆதி மனிதனைப் போலவே விலங்குகளுக்கும் டெலிபதிக்கும் உள்ள தொடர்பைப் பற்றி நான் ஆராய்ந்தபோது விலங்குகளும்,பறவைகளும்,பூச்சிகளும் கூட டெலிபதியைப் பயன்படுத்துகின்றன என்பதை அறிந்தேன். இன்று வெளிநாடுகளில் விலங்குகளின் மன அழுத்தப் பிரச்சனை, முரண்பாடான பழக்கவழக்கங்கள் போன்றவற்றை தீர்ப்பதற்கு சிறப்பு நிபுணர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்துவதும் டெலிபதி முறைதான். இங்கே ஸ்வாதி தியாகராஜன் என்ற பெண்மணி பதிவேற்றியுள்ள யூடியூப் வீடியோவில் தென்னாபிரிக்காவில் ஒரு முன்னாள் காவலர் நடத்தும் தனியார் விலங்கியல் பூங்காவில் மன அழுத்தத்துடன் கடும் கோபத்தில் இருக்கும் கருஞ்சிறுத்தை டெலிபதி அறிந்த அன்னா என்ற‌ அந்த விலங்கியல் நிபுணரிடம் "இங்கே தனக்கு வைத்துள்ள பெயர் 'டயப்லோ'(பிசாசு) என்ற பெயர் பிடிக்கவில்லையென்றும், கம்பீரமான தோற்றத்தைக் கொண்ட தனக்கு உரிய மதிப்பளிக்காமல் சிறிய கூண்டில் அடைத்து வைத்துள்ளதாகவும், மேலும் தன்னை ஐரோப்பிய சர்க்கஸிலிருந்து மீட்டு வந்த போது அங்கே இருந்த சிறுத்தைக் குட்டிகளுக்கு என்ன ஆனது?" போன்ற கேள்விகளைக் கேட்டுள்ளது. இந்தச் சிறுத்தையைப் பற்றிய விஷயங்கள் எல்லாம் அந்தப் பூங்காவை நடத்தி வந்தவருக்குத் தெரியுமே தவிர வேறு யாருக்கும் தெரியாது. முன்பின் அறியாத இந்த பெண்மணியிடம் தனது உள்ளக் குமுறலை டெலிபதி மூலம் கொட்டியிருக்கிறது. இந்தப் பெண்மணியின் பரிந்துரைகளுக்குப் பிறகு அந்த சிறுத்தை அதிக இடவசதிகளுடைய பெரிய இடத்திற்கு மாற்றப்பட்டதுடன் அதற்கு 'ஸ்பிரிட்' (ஆன்மா) என்ற‌ மாற்றுப் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இன்று அந்த சிறுத்தை மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். விலங்குகளுக்கு டெலிபதி தெரியும் என்பது பற்றிய கட்டுரையை இங்கே கொடுத்திருக்கிறேன்.