Sunday, March 14, 2021

20. 'மௌனம்' என்பது பிரபஞ்சத்தின் மொழியே!

 எனக்குள் தொடங்கிய தேடலால் 'டெலிபதி' பற்றி இன்னும் சற்று ஆழமாக அறிய முயற்சித்த எனக்கு சில சுவாரசியமான விஷயங்கள் புரியத் தொடங்கின. உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம் 2004 சுனாமியின் போது அந்தமான் காடுகளில் இருந்த  பழங்குடி மக்கள் சுனாமி வரும் முன்பே எச்சரிக்கையுடன் தப்பித்து மேடான பகுதிகளுக்குச் சென்றுவிட்டார்கள். அதேபோல் விலங்குகளும் தங்களது உள்ளுணர்வால் முன்கூட்டிய அறிந்திருந்தன போன்ற செய்திகள் நாம் படித்திருப்போம்.

இதிலிருந்து நான் உணர்ந்து கொண்ட விஷயம்: மனிதன் மொழி வளர்வதற்கு முன்னாலும் பேசிக்கொண்டுதான் இருந்திருக்கிறான் உள்ளுணர்வின் (டெலிபதி) மூலம்.நாம் மொழியைப் பயன்படுத்த தொடங்கியதிலிருந்து மெதுவாக இந்த குணம் நமக்குக் குறையத் தொடங்கிவிட்டது. அதேவேளையில் மொழியை பயன்படுத்த தொடங்கிய நாம் பெரும்பாலும் நமது சுய ஆதாயத்திற்காக நாம் உள்ளே இருப்பதை வெளியே தெரிவிக்க வேண்டும் என்ற நிலையையும் தாண்டி ஜால வார்த்தைகளைப்  பயன்படுத்தி 'உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்' நிலையை எட்டிவிட்டோம். ஆனால் இது போன்ற விளையாட்டுக்கள் பிறர் மனதைப் படிக்க தெரிந்தவர்களிடம் நடக்காது. அதனால்தான் இக்குழந்தைகள் சிலரிடமிருந்து ஒதுங்கியே இருக்கிறார்களோ? அதேவேளையில் விலங்குகள் பெரும்பாலும் தங்களின் பிறவி குணத்துடன் நேர்மையாக இருப்பதற்குக் காரணம் மொழி இல்லாததுதான் என்றே தோன்றுகிறது. ஆனால் அவைகளும் 'டெலிபதி' என்னும் பிரபஞ்ச மொழியால் அவர்களுக்குள்ளும் மற்ற உயிரினங்களுடனும் பேசிக்கொண்டு தான் இருக்கின்றன. நமக்கு அது புரியாத காரணத்தால்‌ விலங்குகள் தனது எண்ணங்களை வெளிப்படுத்துவதில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

ஆதி மனிதனைப் போலவே விலங்குகளுக்கும் டெலிபதிக்கும் உள்ள தொடர்பைப் பற்றி நான் ஆராய்ந்தபோது விலங்குகளும்,பறவைகளும்,பூச்சிகளும் கூட டெலிபதியைப் பயன்படுத்துகின்றன என்பதை அறிந்தேன். இன்று வெளிநாடுகளில் விலங்குகளின் மன அழுத்தப் பிரச்சனை, முரண்பாடான பழக்கவழக்கங்கள் போன்றவற்றை தீர்ப்பதற்கு சிறப்பு நிபுணர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்துவதும் டெலிபதி முறைதான். இங்கே ஸ்வாதி தியாகராஜன் என்ற பெண்மணி பதிவேற்றியுள்ள யூடியூப் வீடியோவில் தென்னாபிரிக்காவில் ஒரு முன்னாள் காவலர் நடத்தும் தனியார் விலங்கியல் பூங்காவில் மன அழுத்தத்துடன் கடும் கோபத்தில் இருக்கும் கருஞ்சிறுத்தை டெலிபதி அறிந்த அன்னா என்ற‌ அந்த விலங்கியல் நிபுணரிடம் "இங்கே தனக்கு வைத்துள்ள பெயர் 'டயப்லோ'(பிசாசு) என்ற பெயர் பிடிக்கவில்லையென்றும், கம்பீரமான தோற்றத்தைக் கொண்ட தனக்கு உரிய மதிப்பளிக்காமல் சிறிய கூண்டில் அடைத்து வைத்துள்ளதாகவும், மேலும் தன்னை ஐரோப்பிய சர்க்கஸிலிருந்து மீட்டு வந்த போது அங்கே இருந்த சிறுத்தைக் குட்டிகளுக்கு என்ன ஆனது?" போன்ற கேள்விகளைக் கேட்டுள்ளது. இந்தச் சிறுத்தையைப் பற்றிய விஷயங்கள் எல்லாம் அந்தப் பூங்காவை நடத்தி வந்தவருக்குத் தெரியுமே தவிர வேறு யாருக்கும் தெரியாது. முன்பின் அறியாத இந்த பெண்மணியிடம் தனது உள்ளக் குமுறலை டெலிபதி மூலம் கொட்டியிருக்கிறது. இந்தப் பெண்மணியின் பரிந்துரைகளுக்குப் பிறகு அந்த சிறுத்தை அதிக இடவசதிகளுடைய பெரிய இடத்திற்கு மாற்றப்பட்டதுடன் அதற்கு 'ஸ்பிரிட்' (ஆன்மா) என்ற‌ மாற்றுப் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இன்று அந்த சிறுத்தை மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். விலங்குகளுக்கு டெலிபதி தெரியும் என்பது பற்றிய கட்டுரையை இங்கே கொடுத்திருக்கிறேன்.


19. உலகெங்கிலுமுள்ள RH -Ve ரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வரும் வேற்றுக்கிரகவாசிகளால் கடத்தப்பட்டது போன்ற கனவு!

RH -Ve இரத்தவகை என்பது பெரும்பாலும் வெள்ளையின மக்களிலேயே அதிகம் காணப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா தாண்டி மற்ற  இடங்களில் இந்த ரத்த வகையைச் சேர்ந்த மக்கள் இருந்தாலும் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறார்கள். நம்மூரில் கூட இருக்கிறார்கள். விஞ்ஞானிகள் சொல்லும் விஷயம் என்னவென்றால் இந்த ரத்த பிரிவு 50,000 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியிருக்க வேண்டும். ஆப்பிரிக்காவிலிருந்து தோன்றிய ஆதி மனித இனத்தில் இந்த இரத்தப் பிரிவு கிடையாது. இவர்கள் ரீசஸ் வகை குரங்குகளிலிருந்து தோன்றிய  மனிதர்கள் என்றும் சொல்பவர்கள் உண்டு. எது எப்படியோ ஆனால் இன்று உலகின் ஆதிக்கம் செலுத்தும் சக்திவாய்ந்த வெள்ளைக் இனத் தலைவர்கள் குறிப்பாக இங்கிலாந்து ராஜ வம்சம் மற்றும் பெரும்பாலான அமெரிக்க அதிபர்கள் இந்த இரத்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். 

2018ல் அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவில்  RH -Ve இரத்த பிரிவை சேர்ந்த மக்கள் ALIENCON என்ற பெயரில் மாநாடு ஒன்றை நடத்தினார்கள். அதன் பிறகும்  தொடர்ந்து நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் விவாதித்த முக்கியமான விஷயம் அவர்களுக்கு அடிக்கடி வேற்றுக் கிரகவாசிகளால் ஆழ்ந்த நித்திரையில் கடத்தப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப் படுவதாக சொல்கிறார்கள். இதில் சில ஆண்களும் பெண்களும் சொல்வது என்னவென்றால்; வேற்றுகிரக வாசிகள் தங்களை அவர்களின் விண்கலங்களுக்கு எடுத்துச் சென்று கலப்பினக்  குழந்தைகளை  உருவாக்கி வருவதாகவும்; தங்கள் வேலை முடிந்ததும், அவர்களை மீண்டும் இருந்த இடத்திலேயே விட்டுச் செல்வதாகவும் சொல்கிறார்கள் ( மிக சமீபத்தில் இந்த விஷயத்தை அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன்  "Anomalous Acute and Subacute Field Effects on Human and Biological Tissues" என்ற ஆய்வறிக்கையின் மூலம்   வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது). சுயநினைவு வந்து  கண்விழித்துப் பார்த்தால் உடலின் சில இடங்களில் குறிப்பாக முதுகுத்தண்டில் நுண்ணிய துளைகள் போட்ட வடுக்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.அப்படியானால் வேற்றுகிரக வாசிகளால் இங்கே அனுப்பப்பட்டு நாம் இன்னும் அவர்களின் தொடர் கண்காணிப்பில் தான் இருக்கின்றோமா? இதில் கலந்து கொண்டவர்களில் மிக முக்கியமான ஒருவர் இங்கிலாந்து பாதுகாப்புத்துறையின் முன்னாள் வேற்றுகிரக வாசிகளைப் பற்றிய ஆராய்ச்சியாளர் நிக் போப். 

ஒரு  தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கெடுத்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் "வேற்றுகிரஹ வாசிகள் இருக்கிறார்களா என்று பில்கிளின்டனிடம் கேட்டால் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது சுத்தப் பொய் என்கிறாரே!" என்று கேட்க; "ஆமாம்! இல்லை என்று சொல்லவேண்டும்  என்பது தான் எங்களுக்கு இடைப்பட்ட உத்தரவு" என்று நகைச்சுவையாக பேசுவதுபோல்  மறைமுகமாக  ஒரு  உண்மையை  ஒபாமா  கூறியுள்ளார் என்றே இந்தப் பேட்டியைக் கண்டவர்கள் கருத்து பதிவிடுகிறார்கள்!      

2003ல் இதைப் பற்றி ஆய்வு செய்த ஹார்வர்டு பல்கலைக் கழகத்தினர் (Rh -Ve  ரத்த வகையினரென்று தனியாக அவர்கள் குறிப்பிடவில்லை) பொதுவாக நித்திரையில் ஏற்படும் ஒருவகையான தற்காலிக பக்கவாதத்தினாலும்  அதனோடு சேர்ந்த மாயையினாலுமே (hallucination) இப்படிப்பட்ட வித்தியாசமான கனவுகள் ஏற்படுவதாகச் சொல்கிறார்கள். நமது கிராமங்களில் கூட இதை 'அமுக்குவான் பேய்' என்று சொல்வார்கள்.

எனது கருத்து: ஒத்த சிந்தனையுடைய இருவருக்குள் (அதாவது இரு வெவ்வேறு நபர்கள் ஒத்த அலைவரிசையில் சிந்தித்தால்) அவர்களுக்குள் கருத்தொற்றுமை ஏற்படலாம், நட்பு ஏற்படலாம், காதல் மலரலாம்,கதை, கவிதை போன்ற படைப்புகள், கண்டுபிடிப்புகள் கூட ஒத்துப் போகலாம் எனும்போது படைப்புகளின் திறவுகோலான மனதின் கனவுகள் மட்டும் ஏன் ஒத்துப்போகாது? அப்படியானால் ஓர் குறிப்பிட்ட அலைவரிசையில் ஒருசிலரின் மனது நித்திரையிலோ அல்லது வெற்றுக் கண்களாலோ சில பிம்பங்களைப் பார்க்கிறது என்றுதானே பொருள் ?அப்படியானால் அந்த பிம்பங்கள் நமது கண்களுக்குப் புலப்படாத உண்மையாக ஏன் இருக்கக்கூடாது?

உதாரணம்: இங்கே ஒரு நரம்பியல் மருத்துவர் தனது நண்பர்களுடன் எல்எஸ்டி (Lysergic acid diethylamide) என்ற‌ அதிக சக்தி கொண்ட போதைப் பொருளை சோதனைக்காக பயன்படுத்தியபோது நேரத்தில் மாற்றத்தை உணர்ந்ததாகவும் (அவருக்கு சில மணி நேரங்கள் தன்னை மறந்த நிலையில் இருந்ததாகத் தோன்றியிருக்கிறது.ஆனால் உண்மையில் அவர் சுய நினைவிற்கு திரும்ப வர எடுத்துக்கொண்ட நேரம் சில நிமிடங்கள் மட்டுமே!), அதேபோல் தனக்குத் தோன்றிய அதே பிம்பங்கள்,நேரப் பிழர்வு(time slip) போன்றவை தன்னுடன் அமர்ந்த தோழிகளுக்கும் தோன்றியதெனச் சொல்கிறார்.

பறக்கும் தட்டுகள் அடிக்கடி வந்து செல்லும் இலங்கையிலுள்ள சோமாவதி புத்தர் கோவில்:

அமெரிக்காவில் வசித்து வரும் யூடியூபர் மற்றும் பண்டைய கோவில்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழர் திரு.பிரவீன் மோகன் அவர்கள். இவர் தன்னுடைய பெரும்பாலான வீடியோக்களில் தொன்மையான கோவில்களுக்கும் வேற்றுகிரக உலகங்களுக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி நிறைய வீடியோக்களை பதிவேற்றியுள்ளார். ஆனால் அவருடைய வீடியோக்களை யூடியூப் சமீபகாலமாக நீக்கி வருவதாக புகார் சொல்லியிருக்கிறார். இவருடைய ஒரு வீடியோவில் இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு அருகேயுள்ள சோமாவதி புத்தர் கோவிலில் இரவு நேரங்களில் பறக்கும் தட்டுக்கள் தென்படுவதாகவும் அவற்றைப் பற்றி குறிப்பிடும்  அங்குள்ள புத்த பிட்சு 'அவை கடவுளின் வாகனம்' என்றே சொல்வதையும் பதிவிட்டுள்ளார் .மேலும் அந்த கோவிலில் கோபுர உச்சியில் அமைந்துள்ள ஒரு 'ஸ்படிகக் கல்' தான் முக்கிய தொலைத்தொடர்புச் சாதனமாக இருந்து வேற்று கிரகவாசிகளை அங்கே இழுப்பதாகக் கூறுகிறார் பிரவீன்மோகன். மேலும் அந்த கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கோவிலுக்கு மேல் 'பறக்கும் தட்டு' வந்துசெல்லும் புகைப்படங்கள் அனைத்தும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் போன்ற நம்பத்தகுந்த மனிதர்களால் எடுக்கப்பட்டதே என்றும் சொல்கிறார்கள்.

இதே பிரவீன் மோகன் அவர்கள் மற்றொரு சந்தர்ப்பத்தில் வேறு ஒரு கருத்தையும் முன்வைத்திருந்தார். அதாவது ஆப்பிரிக்காவில் லயன் சஃபாரி செல்லும்போது, சிங்கம் நாம் ஜீப்பில் சென்றால் நம்மைப் பாறை என்று தான் நினைத்துக் கொள்ளுமாம். அதனால் தான் திறந்த வண்டிகளில் சென்றாலும் கொடிய விலங்குகள் நம்மைத் தாக்குவதில்லை என்கிறார். அதுபோல் வேற்றுகிரகவாசிகள் எளிதாக நம்மை ஏமாற்றி நமது கண்களுக்குப் புலப்படாமல் நம்முடனேயே இருப்பதாகக் குறிப்பிடுகிறார். 

சமீபத்தில் கூட விஞ்ஞானி மற்றும் விண்வெளி வீராங்கனை Dr.ஹெலன் ஷர்மன் வேற்றுகிரஹ வாசிகள் குறித்த கருத்தை ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது கார்பனும், நைட்ரஜனும் சேர்ந்த கலவையான பூவுலக உயிரினங்களைத் தாண்டி மற்ற வேதிப்பொருட்களின் கலவையாக நமக்குத் தெரியாத உயிரினங்கள் நமக்குள்ளேயே இருக்கலாம் என்பதை குறிப்பிட்டுள்ளார். 

இது அமானுஷ்ய சக்திகள், கடவுள் என்று அனைத்துக்குமே பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

கனடா நாட்டு முன்னாள் ராணுவ அமைச்சர் பால் ஹெலியர் வேற்றுகிரகவாசிகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசி வந்துள்ளார்.அவர் சொல்வது 'வேற்றுக்கிரக வாசிகளுக்கு டெலிபதி மூலம் மற்றவர்களின் உணர்வுகளை எளிதாக புரிந்து கொள்ள முடியும்' என்றே சொல்கிறார். இதே கருத்தை பல ஆராய்ச்சியாளர்கள்  சொல்லக் கேட்டுள்ளேன்.  

தம்புசாமி பிள்ளை: மலேசியாவில் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வியாபாரி தம்புசாமி பிள்ளைக்குக் கனவில் தோன்றிய பராசக்தி தன் மகனுக்கு ஒருகோவில் எழுப்பும்படி சொன்னதன் விளைவே இன்று உலகப்புகழ் பெற்ற 'பத்துமலை முருகன்' கோவில் உருவானது. இதுபோல் மன்னர்கள் காலத்திலிருந்து இன்றுவரை பலருக்கும் கனவில் கடவுள் தோன்றி சொன்னது தான்  இன்று நாம் பார்க்கும் பெரும்பாலான கோவில்கள் உருவாக காரணம்.

அப்படியானால் நமது ஆழ்ந்த உறக்கத்தில் நமக்குத் தெரியாத விஷயங்களை நமக்குக் கற்றுக்கொடுப்பது, நம்மில் குறிப்பிட்ட சிலரை கூட்டிச் சென்று ஆய்வு மேற்கொள்வது, நம்மை முன்பின் அறியாத சிலருடன் 'டெலிபதி' மூலம் தொடர்புகொள்ளச் செய்வது,பிறரின் ஆழ்மனதை அறிய வைப்பது யார்? கடவுளா? இல்லை நம்மைவிட அறிவிலும் தொழில்நுட்பத்திலும் மேம்பட்ட இனம் தான் இந்த வேற்று கிரகவாசிகளா? இல்லை இந்த இரண்டுமே ஒன்றுதானா?


Friday, March 12, 2021

18.கனவுகள் சொல்லும் ரகசியங்கள் (dream telepathy):

 'ஆன்மா' (spirit) என்பது மறுபிறப்பு மட்டுமின்றி நமது ஆழ்மன எண்ணங்களுடன் தொடர்புடையது என்பதை நமது மதங்கள் தெளிவாகக் கூறுகின்றன. நான் மேற்கோள் காட்டிய  குர்ஆனில் வசனத்தில் சொல்லப்படுவதும் அதுவே.

இதில் குறிப்பாக திபெத்திய பெளதத் தலைவரான தலாய்லாமா மரணித்தால் அடுத்த தலாய்லாமா எங்கே மறுபிறப்பெடுப்பார் போன்ற விஷயங்கள் புத்த பிட்சுக்களுக்கு கனவுகளின்மூலம் தெரிவிக்கப்படுகிறது. அல்லது இறந்த தலாய்லாமாவின் உடல் எரிக்கப்பட்டால் புகை செல்லும் திசை சொல்லும் என்கிறார்கள்.அப்படி சில பல ஆண்டுகள் தேடலுக்குப் பின் மறுபிறப்பாக அறியப்படும் சிறுவன் தனது முற்பிறவியில் (பழைய தலாய்லாமாவின்) பயன்படுத்திய உடமைகளை சரியாக அடையாளம் காட்டுவான்.இதுதான் பன்னெடுங்காலமாக பின்பற்றப்பட்டுவரும் அவர்களின் நடைமுறை. தற்போதைய தலாய்லாமா "அடுத்த தலாய்லாமா திபெத்திற்கு வெளியேவும் பிறக்கலாம். வழக்கத்திற்கு மாறாக அது பெண்ணாகவும் இருக்கலாம்"என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் உலகின் பல முக்கிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு அவர்கள் விடைதெரியாது தவித்த நேரத்தில் அவர்களுடைய ஆழ் மனதில் குறிப்பாக அவர்களுடைய ஆழ்ந்த நித்திரையில் தீர்வு கிடைத்ததாக சொல்கிறார்கள்.'நித்திரையில் வெளிப்படும் உள்ளுணர்வு' (dream telepathy) இதைப்பற்றி ஹார்வர்டு பல்கலைக்கழக நரம்பியல் துறை மருத்துவ 'பேராசிரியை' டாக்டர்.டயானா ஹின்னசி பவல் தன்னுடைய வலைப்பக்கத்தில் விரிவாக எழுதியுள்ளார். இவர் இந்தியாவிற்கு வந்து நான் முன்பு குறிப்பிட்ட சிறுவன் விஷால் ஆனந்தைக் கண்காணித்து சில நாட்கள் இங்கேயே தங்கி அவனைப் பற்றிய விஷயங்களையும் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ளார். மேலும் அமெரிக்காவில் இருக்கும் ரமஸஸ் என்ற சிறுவன் தனது தாய் மனதில் நினைக்கும் எண்களை டெலிபதி மூலம் தெரிந்துகொண்டு அவற்றை சரியாகச் சொல்வதையும் விரிவாக எழுதியுள்ளார்.

விஞ்ஞானிகளின்  கனவில் தோன்றிய முக்கிய கண்டுபிடிப்புகள்:   எக்ஸ்ரே இயந்திரம், கனிம அட்டவணை (periodic table), பென்ஸீனின் வேதியல் வடிவம்(structure of benzene), தையல் இயந்திரம், அணுவின் வடிவம் மற்றும் ராமானுஜம் விட்டுச்சென்ற மூவாயிரத்துக்கும் அதிகமான கணித சூத்திரங்கள்.

மேற்கண்ட விஞ்ஞானிகளைத் தாண்டி  'ஆட்டிசம்' பாதிப்பு, வளர்ச்சி தாமதம் மற்றும் ADHD  போன்ற பிரச்சனைகள் இருந்தவர்கள் என்று அறியப்பட்ட முக்கிய கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்:

1). தாமஸ் ஆல்வா எடிசன்: பல்பு, திரைப்படம் என்று தொடங்கி நூற்றுக்கும் அதிகமான கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரரான இவர் பள்ளிநாட்களில் மற்ற மாணவர்களுடன் கலக்காமல்  சிந்தையால் வேறு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த காரணத்தால் பள்ளி நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டார். டெலிபதி தொடர்பாக இவரும் நிறைய ஆய்வுகளை மேற்கொண்டார் என்பதை நானும் படித்துத் தெரிந்து கொண்டேன்.


2). நமது கணித மேதை சீனிவாச ராமானுஜம்: இவருடைய சிறுவயதுப் பற்றி அதிகம் தெரியாவிட்டாலும் இவரைப் பற்றி வந்த திரைப்படங்கள் மற்றும் இணையத்தில் இருக்கும் எண்ணற்ற பதிவுகளைப் பார்க்கும்போது இவருக்கும் பேச்சு தாமதம் அல்லது அதிகம் பேசாமல் இருந்த தன்மை, சம வயது குழந்தைகளிலிருந்து வேறுபட்டு தனித்து வளர்ந்தது மற்றும்  synethesia (சினஸ்தீசியா) போன்ற பாதிப்புகள் இருந்திருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது.  2012இல் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள எமரி பல்கலைக்கழக கணிதத் துறை பேராசிரியர் டாக்டர்.கிம் ஓனோவும், அவருடைய ஆராய்ச்சி மாணவர்களும்  ராமானுஜனின் சூத்திரங்களை ஆய்வு செய்ததில் அவருடைய சூத்திரங்கள் சாதாரண கணித சூத்திரங்கள் என்பதைத் தாண்டி பிரபஞ்சத்தைப் பற்றி அறியக் கூடிய விஷயங்களை உள்ளடக்கியதாக இருப்பதாகவே சொல்கிறார்கள். இன்று விண்ணியல் தொடர்பாக இடம்பெறும் பிளாக் ஹோல் (black hole), காலப் பயணத்தை (time travel) அறிய உதவும்  சூப்பர் ஸ்ட்ரிங் தியரி (super string theory) மற்றும் செயற்கை கோள்கள் பற்றிய ஆய்வுகளுக்கு அவருடைய சூத்திரங்கள் பேருதவியாக இருப்பதாக சொல்கிறார்கள். இதில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயம் என்னவென்றால் ராமனுக்கு அடிப்படைக் கணக்கே தெரியாது! 

ராமானுஜம் பெரும்பாலும் கணக்கைத் தவிர மற்ற பாடங்களில் தேர்ச்சி அடையவில்லை. ராமானுஜத்தை பின்னாளில் இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்ல  குறைந்தபட்சம் அவர் ஒரு பட்டப்படிப்பாவது படித்திருக்க  வேண்டும் என்பதற்காக பேராசிரியர் ஹார்டி பிரம்ம பிரயத்தனம் செய்து தேர்ச்சி அடைய வைத்து இங்கிலாந்து அழைத்துச் சென்றார். ராமானுஜம் தான் எழுதிய சூத்திரங்களை பற்றி சொன்ன விஷயம் "எனக்கு எதுவும் தெரியாது. நேற்று எனது கனவில் தோன்றிய நாமகிரி தாயார் எனக்கு சொல்லிக் கொடுத்ததைத் தான் நான் இங்கே எழுதுகிறேன்!".

3). விஞ்ஞானி ஐன்ஸ்டீன்: இளம் வயதில் தாமதமாகப் பேசிய குழந்தை ஐன்ஸ்டீன். நாம் முன்பே பார்த்ததுபோல் பேராசிரியரும் பொருளாதார நிபுணருமான திரு.தாமஸ் சொவல் அவர்கள் மீனாட்சி போல் பேரறிவு, பேச்சு தாமதம், வளர்ச்சிப் பின்தங்கல் போன்ற பிரச்சனைகளையுடைய குழந்தைகளை ஆட்டிசத்திலிருந்து தனியாகப் பிரித்து இளம் வயது ஐன்ஸ்டீனை ஒத்திருந்ததால் "ஐன்ஸ்டீன் சின்ட்ரோம்" என்று குறிப்பிட்டு புத்தகமாக வெளியிட்டதை முன்பே கூறியிருந்தேன். 

ஐன்ஸ்டீனின் 'தியரி ஆப் ரிலேட்டிவிட்டி' போன்ற அவருடைய முக்கிய ஆய்வுகளுக்கான அடிப்படை விஷயங்கள் அவருக்கு கனவில் தோன்றிய விஷயங்கள்தான்!

4).ஐசக் நியூட்டன்: இங்கே ஒரு சுவாரஸ்ய கிளைக்கதை! முன்பு ஒருமுறை மீனாட்சியைப் பற்றி இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருக்கும் எனது சித்தி மகனிடம் 'பல பெரிய விஷயங்களை நாம் சொல்லிக் கொடுக்காமலேயே தெரிந்து வைத்துள்ள மீனாட்சி சிறிய விஷயங்களை புரிந்து கொள்வதற்கு மிகவும் கஷ்டப்படுகிறாள்' என்று நான் கூறியதும், அவன் எனக்கு ஐசக் நியூட்டன் பற்றி சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. அதை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்: 

ஒருமுறை தனது உதவியாளனிடம் ஆய்வக அறைக் கதவைப் பிராண்டி திறக்கப் சொல்லி அடிக்கடி தொந்தரவு செய்யும் ஒரு பூனையும் அதன் குட்டியும் எளிதாக சென்று வர பெரிதும் சிறிதுமாக இரண்டு துளைகளிடும்படி சொல்லியிருக்கிறார் நியூட்டன்.


 உதவியாளன் சொல்லியிருக்கிறான் 'பெரிய துளை மட்டும் போதுமே! பூனை அதன் குட்டி இரண்டுமே அதைப் பயன்படுத்திக்கொள்ளுமே!' என்று. நியூட்டனுக்குத் தான் அவன் சொன்ன விஷயத்தை புரிந்து கொள்ள சற்று தாமதமாகியிருக்கிறது!

5). மொசார்ட் : சிறு வயது முதல் சிறந்த இசை மேதையாக அறியப்பட்ட  மொசார்ட், கதை எழுதுவது போல் பக்கம் பக்கமாக அடித்தல் திருத்தல் இல்லாமல் இசைக் குறிப்புகளை எழுதி இருக்கிறார். ஆனால் அவருடைய பழக்கவழக்கங்கள் சாதாரண மனிதர்களிலிருந்து மிகவும் மாறுபட்டதாக இருந்ததாகச் சொல்கிறார்கள். 

6). லியானார்டோ டாவின்சி: பல்துறை வித்தகராக (ஓவியம், சிற்பம்,  கட்டடக்கலை, உடற்கூறியல் மற்றும் பொறியியல்) அறியப்பட்ட லியானார்டோ டாவின்சிக்கு கவனக் குறைபாடு மற்று அதீத செயல்பாட்டுப் பிரச்சனை (ADHD) இருந்திருக்கலாம் என்று பிரைன்(Brain) பத்திரிகையில் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் நரம்பியல் மற்றும் உளவியல் துறை ஆராய்ச்சியாளர், பேராசிரியர் கட்டாணி குறிப்பிடுகிறார்.‌ இதற்கு இவர் சொன்ன முக்கிய காரணம் டாவின்சி திட்டமிடுதலுக்கு அதிக நேரம் செலவழித்து விட்டு செயல்படுத்தும்போது ஒரு வேலை முழுமை அடையும் முன்பே அடுத்த வேலைக்கு தாவி விடுவாராம். மேலும் டாவின்சிக்கு எழுத்துக்களை இடமாற்றி எழுதும் டிஸ்லெக்சியா போன்ற பிரச்சனைகளும் இருந்திருக்கலாம் என்கிறார். பேராசிரியர் கண்காணித்து வந்த ADHD பாதிப்பு இருந்தக் குழந்தைகள் எல்லோருமே மந்தமானவர்கள் அல்ல, சிறந்த அறிவை கொண்டிருந்தார்கள் என்றும் ஆனால் அவர்கள் வளர்ந்த பின்பு பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுடன் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். டாவின்சி வரைந்த படங்களுக்குள் வேற்றுக்கிரகவாசிகள் மற்றும் ரகசியமான வேறு சில விஷயங்களும் மறைந்திருப்பதாக இன்றைய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் டாவின்சியின் கனவிலும் வேற்றுக்கிரகவாசிகள் தோன்றி அவருடைய படைப்புகளுக்கு காரணமாக அமைந்திருப்பார்களோ?!


              டாவின்சி வரைந்த  "ஜான் தி பாப்டிஸ்ட்" படத்தை கண்ணாடியில் வைத்துப் பார்த்தால் அதில் ஒரு வேற்றுகிரஹ வாசியின் பிம்பம் மறைந்துள்ளது தெரியும்.


இங்கே மேலும் ஒரு முக்கியமானவரைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.

 சகுந்தலா தேவி: சமீபத்தில் இறந்த 'கணித மேதை' சகுந்தலா தேவிக்கும்   கணக்கை யாரும் கற்பிக்கவில்லை!எத்தனை  பெரிய பெருக்கலாக இருந்தாலும். அதற்கான விடை அவர் மனக் கண்முன்னே தோன்றி இருக்கிறது. நேரடியாக கரும்பலகையில் எழுதும்போது  "விடையை வலமிருந்து இடமாக எழுதவா அல்லது இடமிருந்து வலமாக எழுதவா?" என்று சிரித்துக்கொண்டே கேட்பார். காணொளி இங்கே! 

எனக்குத் தெரிந்தவரையில் இவருக்கு ஆட்டிசம் போன்ற பிரச்சனைகள் இல்லை என்றே நினைக்கிறேன்.ஆனால் அவருக்கு synethesia (சினஸ்தீசியா) பிரச்சனை இருந்திருக்கலாமென்று  நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன்.


Tuesday, March 09, 2021

17.ஆன்மீகம் (spirituality)

இனி சில விஷயங்களை ஆன்மிக ரீதியாக முதலில் பார்ப்போம்!

புரியாதவர்களுக்கு: பெளதீகத்திலும் கணிதத்திலும் நாம் கான்ஸ்டன்ட் (constant) என்ற ஒன்றைப் பயன்படுத்துவோமே எதற்காக? நமக்கு ஒரு தீர்வு கிடைக்கும்வரை, சமன்பாடு முடியும்வரை 'இதுதான் அது' என்று நாம் புரிந்து கொள்வதற்காக, ஒரு தீர்வை எட்டுவதற்காக இந்தக் கான்ஸ்டன்டை பயன்படுத்துகிறோம். அதுபோலவே நானும் இங்கே ஆன்மீகத்தை 'X' 'Y' போல் பயன்படுத்திக்கொள்ளச் சொல்கிறேன். இறுதியில் 'இதுதான் அது' என்று நீங்களும் என்னைப் போல் எளிதாகத் தெரிந்து கொண்டுவிடுவீர்கள். 

எதை? 'கான்ஸ்டன்ட்' என்ற வார்த்தைக்கு 'நிரந்தரமானது' என்ற வேறொரு பொருளும் உள்ளதை. 

மேலும் நான் சொல்லும் நிறைய உதாரணங்கள் வெளிநாடுகளில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஆய்வுகளை பற்றியதாகவே இருக்கும். இவற்றையெல்லாம் நான் மேற்கோள் காட்டுவதற்குக் காரணம் பெரும்பாலானவர்கள் அறிவியல் சார்ந்த விளக்கங்களை மட்டுமே ஏற்பார்கள் என்ற காரணத்தால் தான். அதேவேளையில் இங்கே நாம் விவாதிக்கும் அனைத்து விஷயங்களும்  பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா போன்ற பண்டைய நாகரிகங்களையும் முதிர்ச்சியடைந்த சமுதாயத்தையும் கொண்ட நாடுகளில் அது ஆன்மீக ரீதியாகவே பார்க்கப்பட்டிருக்கிறது. 

'ஆன்மீகம்'(spirituality) என்பது நான் உணர்ந்து கொண்டவரையில்‌ 'அது மதங்களுக்கெல்லாம்  அப்பாற்பட்டது.ஆனால் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது.தனிப்பட்ட நபர்களால் உணரப்பட வேண்டியதே  தவிர பிறருக்கு உணர்த்த முடியாது'.இது 'சூரியன் கிழக்கே தோன்றி மேற்கே மறைகிறது' என்பதுபோல் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயமாக இருந்திருந்தால் இன்றுவரை யாரும் விவாதித்துக் கொண்டிருக்க மாட்டோமில்லையா? ஒருவகையில் 'ஆன்மீகம்' என்றும் உயிர்ப்போடு இருக்கும் பேசுபொருளாக மாறத் தான் இரு அணிகளாக பிரிந்திருக்கிறோமோ? இது யாருடைய திட்டம்? திட்டமிட்டவர் தான் கடவுளோ? மெய்ஞானம் விஞ்ஞானத்தால் எட்டிப் பிடிக்கக் கூடிய தூரத்திலா இருக்கிறது? ஆனால் நெருங்க நெருங்க தொலைவு அதிகரித்துக் கொண்டே செல்கிறதோ?'

மதங்கள் ஆன்மாவைப் பற்றியும் மறுபிறப்பைப் பற்றியும் சொல்வதென்ன?

இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை | ஸாங்கிய யோகம்: 

போர் புரிய மனம் வராமல் திகைத்துத் தன்னைச் சரணடைந்த அர்ஜுனனை நோக்கிக் கண்ணன் உரைக்கின்றான்: “அர்ஜுனா, நீ வருந்துவது முற்றிலும் தவறு. எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி வருந்துகின்றாயா? அல்லது அவர்களின் உடலைப் பற்றி வருந்துகின்றாயா? இரண்டும் சரியல்ல. ஆன்மா என்றும் அழிவற்றது. அதைக் கத்தியால் வெட்டவும், தீயினால் எரிக்கவும் முடியாது. உடலோ அழியும் இயல்பு வாய்ந்தது. நீ அழிக்காவிடினும் அது தானே அழிய வேண்டியதுதான். ஆன்மாவுக்கு ஓருடல் அழிந்ததும், மற்றோருடல் தானே வந்து சேரும். ஆன்மாவின் இயற்கையை எண்ணி உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீரவேண்டும். அச்செயல்களைச் செய்யுங்கால், நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறோம்". 

இஸ்லாத்தின் திருக்குர்ஆன்:

அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.

(அல்குர்ஆன்: 39:42)

கிறித்தவர்களின் பைபிள்:

இயேசு கிறிஸ்து :

இயேசு “மறுபடியும் பிறத்தல்” என்பதைப் பற்றி, அவற்றைப் பற்றி விளக்கமாக கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார்:

இயேசு நிக்கொதேமுவிடம் மறுபடியும் பிறத்தல் பற்றி பேசுகிறார்:

வசனம் - 1:

“ஒருவன் மறுபடியும் பிறவா விட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காண மாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன் என்றார்.”                                                                                               ------யோவான்-3:3

நம்முடைய பாவங்கள் அனைத்தும் கழிக்கப்பட்டால் ,

நம்முடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டால் ,

கடவுள் நம்முடைய பாவங்களை ஏற்றுக் கொண்டு

மன்னித்து நம்மை ஏற்றுக் கொண்டால் ,

கடவுளுடைய குழந்தையாக நம்மை ஏற்றுக் கொண்டால் ,

நாம் புதியதாகப் பிறப்பு எடுத்தவர்களாவோம் ;

அதாவது புதியதாகப் பிறந்தவர்களாவோம் ;

அதையே மறுபடியும் பிறத்தல் என்ற வார்த்தையின்

மூலம் குறிப்பிடுகிறார்  இயேசு .

இவ்வாறு ஒருவன் ஒரு மனிதன் கடவுளுடைய ஆசி பெற்று மறுபடியும் பிறந்தால் மட்டுமே ,

கடவுளுடைய ராஜ்யத்தைக் காண்பான் .

இவ்வாறு ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால்

கடவுளுடைய ராஜ்யத்தைக் காண மாட்டான் .

என்பதை உண்மையாக உனக்குச் சொல்கிறேன் ;

சத்தியமாக உனக்குச் சொல்கிறேன் ;

மெய்யாக உனக்குச் சொல்கிறேன் ;

என்று நிக்கொதேமுவிடம் கூறுகிறார்  இயேசு.

இதேபோல் சமணம், பௌத்தம்,சீக்கிய மதமென பெரும்பாலான அனைத்து மதங்களும் மறுபிறப்பைப் பற்றிப் பேசுகின்றன.




Monday, March 08, 2021

16. இதற்குப் பெயர்தான் அமானுஷ்யமா?

 இந்த இடைப்பட்ட வேளையில், மீனாட்சிக்கு நடந்த நல்ல மாற்றங்கள் அனைத்தும் நாங்கள் ஆற் காட்டிற்குச் சென்று திப்பு மஸ்தான் அவ்லியாவை தரிசித்து வந்தபின் தான் என்று எனக்கு திடீரென ஒருநாள் தோன்றவே, ஆற்காட்டிலிருந்து என்னிடம் புரொக்கிராமராக வேலை செய்பவரை அழைத்து தர்கா நிர்வாகியிடம் பேசி அவரது அலைபேசியெண்ணை வாங்கத் தரச் சொன்னேன். 

அந்த அம்மையாரை (நிர்வாகியின் மனைவி) அழைத்து 'எனக்கு செளகரியமான ஒரு நாளை நான் கூறினால் அதற்கு ஒருநாள் முன்பு எனக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துதர முடியுமா? நாங்கள் துணி சாத்துவதுபோல் உங்கள் மத வழக்கப்படி நன்றி செலுத்த அவ்லியாவின் சமாதிக்குத் துணி போர்த்தலாமா?' என்று கேட்க, ஆம்! அப்படியொரு வழக்கம் உண்டு அதற்கு 'சாதர்' என்று கூறுவோமென்றார். இது நடந்த சில நாட்களில் திடீரென ஒரு சனிக்கிழமை அந்த அம்மையாரை  அழைத்து "நாளை நான் வருகிறேன். நீங்கள் துணியும் பிரசாதமாக ஏதேனும் இனிப்பும் வாங்கிவையுங்கள்" என்றேன்.நான்,அம்மா, ரேவதி‌ மீனாட்சி சகிதம் காரில் புறப்பட்டோம். ஆற்காட்டை அடையும் முன் அந்தப் பெண்மணி என்னை அழைத்தார். "தம்பி, இன்று வருகிறாயே! திட்டமிட்டு வருகிறாயா என்ன?"என்றார்.‌ நான் பதிலளித்தேன் "திடீரென நேற்று தோன்றியது நாளை போகலாமென்று. அதான் வந்து கொண்டிருக்கிறேன்"என்றேன். அந்தப் பெண்மணி சொன்னார் "தம்பி! இன்று ரமலான் நோன்பு முடிந்து 45வது நாள். எங்கள் தாதாவின் 267வது சந்தனக்கூடு மூன்று நாட்கள் கொண்டாடுவோம். இம்முறை முதல் நாள் முதல் துணியே நீ தான் போர்த்துகிறாய்.‌அவர் உன்னை இன்று வரும்படி அழைத்துள்ளார்"என்றார்.எனக்கு ஏதும் புரியாததால் "அப்படியா?" என்று மட்டும் கேட்டேன். தர்காவை எங்கள் கார் நெருங்கும் வேளையில் எங்களை வரவேற்க அந்தப் பெண்மணி வெளியே நின்று கொண்டிருந்தார். மீனாட்சியைக் கண்டதும் அவளை தூக்கி அணைத்தபடி கண்கலங்கினார் " தம்பி! இந்தக் குழந்தை நேத்தே என் கனவுல வந்துச்சு‌.நாளைக்கு உன்ன பாக்கவாரேன் பாட்டினு சொல்லிச்சு"என்றார். எனக்கு மீண்டும் குழப்பமே! "அப்படியா!" என்று கேட்டுக் கொண்டேன். தர்காவில் அவ்லியாவின் சமாதிக்கு துணி போர்த்தி பிராத்தனையை நிறைவேற்றிவிட்டு நாங்கள் சற்று அமைதியாக உட்கார்ந்தோம். எங்களிடமிருந்து சற்றுத் தள்ளி உட்கார்ந்திருந்த மீனாட்சியின் திடீர் 'களுக்..களுக்' சிரிப்பு மட்டும் அங்கே எதிரொலித்தது. அவளை சும்மாயிருக்கச் சொல்வதற்காக நான் எழுந்து பார்த்தேன்.‌எனக்கு மூன்றாவது அதிர்ச்சி காத்திருந்தது! மீனாட்சி இஸ்லாமியர்கள் தொழுவதுபோல் மண்டியிட்டு அமர்ந்து கைகளை முகத்தின் முன்னால் வைத்துக் கொண்டு சமாதிக்கு மேலே எதையோ பார்த்தபடி சிரிக்கிறாள்!(அவளுக்கு தான் கைகளைக் கூப்புவது கடினமாயிற்றே! இப்போது எப்படி முடிகிறது?)
                                             துறவி திப்பு மஸ்தான் அவ்லியாவின் சமாதி


இப்படியெல்லாம் உண்மையாகவே நம்மைச் சுற்றி நடக்கிறதாயென்று என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.ஆம்! உண்மை தான். இவற்றையெல்லாம் அறியாது சாமானியர்கள் இருக்கும் உலகமே மாயை என்றுணர்கிறேன் நான்!

அந்தப் பெண்மணி சொல்கிறார் "அவ எங்க 'தாதா' கூட பேசுறா! தொந்தரவு செய்யாதேப்பா. எங்க தாதாவுக்கு குழந்தைகள்னா உசிரு. அவர் வாழ்ந்த காலத்துல (17-18ஆம்‌ நூற்றாண்டு!) அவர பாக்க வர்றவங்க கடலை மிட்டாயும் ரொட்டியும் அவருக்குக் குடுப்பாங்க.அவர் அத சாப்புடாம தெருவுல விளையாடுற குழந்தைகளைக் கூப்பிட்டு கொடுத்துட்டு காட்டுக்குள்ள போயிடுவாரு"என்றார்.

துறவி திப்பு மஸ்தான் அவ்லியாவைப் பற்றி நான் படித்தது: திப்பு மஸ்தானும் அவருடைய சகோதரர்கள் தாவகல் மஸ்தான் மற்றும் மாணிக் மஸ்தான் ஆகியோர் (இன்றைய கர்நாடக மாநிலத்தின்) பீஜப்பூரிலிருந்து  வந்தவர்கள்.மூவருமே சூஃபிக்கள்.‌மற்ற இருவரும் பெங்களூரில் தங்கிவிட திப்பு மஸ்தான் மட்டும் ஆற்காட்டிலேயே பெரும்பாலும் இருந்திருக்கிறார் (தாவகல் மஸ்தானின் தர்கா பெங்களூர் கே.ஆர் மார்க்கெட்டிலும், மாணிக் மஸ்தானின் தர்கா காட்டன் பேட்டிலும் அமைந்துள்ளது.இவை இரண்டுமே அனைத்து மதத்தினரும் வந்துசெல்லும் பிரபல வழிபாட்டுத் தலங்களாகும்).

திப்பு மஸ்தான்  பெரும்பாலும் மனிதர்களைக் கண்டால் அவர்களுடன் பேசுவதை தவிர்த்து விடுவாராம். மரங்களில் இருக்கும் பறவைகளுடனும் காட்டில் இருக்கும் புலி போன்ற கொடிய விலங்குகளுடன்  பேசி மகிழ்வாராம். அப்போது அவ்வழியே மனிதர்கள் தென்பட்டால் தனது பேச்சை நிறுத்திக் கொள்வாராம். பறவைகளும் விலங்குகளும்கூட உடனே கலைந்து சென்று விடுமாம். வழிப் போக்கர்கள் சென்ற பின்பு மீண்டும் திரும்பி வந்துவிடுமாம்!

இதைப்பற்றி ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட எனது உறவினர் ஒருவரிடம் தொலைபேசியில் கூறினேன். இதைக் கேட்ட அவர் மகான்களின் சமாதி உள்ள இடங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது சகஜம்தான் என்றும், இதே போல் 'மெட்ராஸ் கெஸட்டில்' (Madras Government Gazette,Chapter XI, page 213, with the caption “Manchali Adoni Taluka”) பதிவாகி இன்றும் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும், மந்திராலயத்திலும் பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு கோப்பைப் பற்றி கூறினார்.  அதாவது திப்புசுல்தான்  1799ல் போரில் கொல்லப்பட்ட பிறகு மைசூரின் பல பகுதிகளை அன்றைய ஈஸ்ட் இந்தியா கம்பெனி கையகப்படுத்திக் கொண்டது.1800ல்  அப்பொழுது மைசூரிலிருந்து சேர்த்துக் கொள்ளப்பட்ட பெல்லாரி பகுதியின் கலெக்டராக இருந்த தாமஸ் மன்ரோவை (பின்னாளில் சென்னை மாகாண கவர்னராக 'சர் தாமஸ் மன்ரோ' என்று அறியப்பட்டார்! மன்ரோ சிலை சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று!) அதோனி பகுதிக்குட்பட்ட ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ள 'மந்த்ராலயம்' சென்று அதன் நில உரிமை குறித்த ஆவணங்களை விசாரித்துவிட்டு, அப்படி ஆவணங்கள் சரியில்லாதபட்சத்தில் அன்றைய ஆங்கிலேயரின் 'ராயத்துவாரி' சட்டத்தின்படி மடத்தையும் அதன் சொத்துக்களையும் பறிமுதல் செய்து கொள்ளலாம் என்ற முடிவுடன் மன்ரோ அனுப்பி வைக்கப்படுகிறார். 'மடம்' என்ற காரணத்தால் தனது ஷு மற்றும் தொப்பியை கழற்றி விட்டு மன்ரோ உள்ளே பயபக்தியோடு சென்றிருக்கிறார். மடத்தின் உள்ளே அமர்ந்திருந்த பெரியவர் மன்ரோ கேட்ட கேள்விகளுக்கு பொறுமையுடன் பதில் கூறியதுடன் அவருக்குத் தேவையான ஆவணங்களையும் காட்டியிருக்கிறார்.‌அதாவது  17 ஆம் நூற்றாண்டில் அந்தப் பகுதியை ஆண்டு வந்த அதோனி நவாப் கொடையாக வழங்கிய மாஞ்சாலை  கிராமம்தான்  'மந்த்ராலயம்' அமைந்துள்ள இடம் என்பதைப் புரியவைத்து, மன்ரோவை  ஆசீர்வதித்து அட்சதையும் கொடுத்து  அனுப்பியிருக்கிறார். அந்தப் பெரியவர். அந்த இடத்தில் வில்லங்கம் ஏதும் இல்லை என்பதால் 'மந்த்ராலயம் எந்த இடையூறுமின்றி செயல்படலாம்' என்று அரசாணை வெளியிட்டிருக்கிறார் மன்ரோ. பின்னர் தெரிய வந்த விஷயம் என்னவென்றால், மன்ரோ சந்தித்துப் பேசிய அந்த நபர் வேறு யாருமல்ல! இந்த சம்பவம் நடந்த 125 ஆண்டுகளுக்கு முன்பு அங்கே பிருந்தாவனத்தில் ஜீவ சமாதியான சுவாமி ராகவேந்திரர் தான் அது.‌ அன்று  சுவாமி ராகவேந்திரர் காட்சியளித்தது,பேசியது மன்ரோவின் கண்களுக்கு மட்டுமே தெரிந்ததாகச் சொல்கிறார்கள். இதை நான் படித்த சில நாட்களிலேயே மன்ரோவின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்திலிருந்து இங்கு வந்து 'மந்திராலயம்' சென்று வழிபட்ட செய்தியை இணையத்தில் படித்தேன்.


Thursday, December 17, 2020

15. பின் நோக்கிப் பாயும் அறிவு முன்னோக்கியும் பாயும்

மீனாட்சி போல் ஹைபர்லெக்சியாவுடன் சவான்ட்சின்ட்ரோமும் உள்ள சில குழந்தைகளிடம் நான் பார்த்து வியந்த குணாதிசயங்கள்: 

  • கற்காமலேயே முன்பின் அறிமுகமில்லாத அனைத்து விஷயங்களிலும் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருக்கிறார்கள். 
  • மேலும் இக்குழந்தைகளுக்கு கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என முக்காலமும் தெரிந்திருக்கிறது (extrasensory perception).
  • 'டெலிபதி': நுண்ணுணர்வு/உள்ளுணர்வு மூலம் பிறர் மனதை அறிவது. மேற்கண்ட இந்த முக்கிய குணாதிசயங்கள் தான் 'சவான்ட்சின்ட்ரோம்' உள்ள குழந்தைகளை வெறும் 'ஹைபர்லெக்சியா' (கற்க்காமல் எழுதப் படிக்கத் தெரிவது) மட்டுமேயுள்ள குழந்தைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அதிலும் மேலே குறிப்பிட்டதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது குணாதிசயங்கள் அரிதிலும் அரிதாகவே காணப்படுகிறது. 

உதாரணம்#1: சிறுநீரக பாதிப்புள்ள எனது தந்தைக்கு சில சமயங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதுபோன்ற சமயங்களில் பாதிப்பு ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு/ சில மணிநேரங்களுக்கு முன்பிருந்தே மீனாட்சியின் நடவடிக்கைகள் சற்று வித்தியாசமாக காணப்படும். சில முறை அவள் புரியவைக்க முயற்சித்த விஷயங்களை நாங்கள்தான் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோம். நீங்கள் கேட்கலாம் "அவளுக்குத்தான் எழுதத் தெரியுமே? உங்கள் கைகளை பிடித்து எழுதிக் காட்ட வேண்டியதுதானே?" என்று. இதற்கு என் பதில் "அங்குதான் பிரச்சினையே! உணர்ச்சி வசப்படும் நேரங்களில் அவள் சிந்திக்க மாட்டாள்.நாம் எழுதிக் காட்டினால் மற்றவர்கள் புரிந்துகொண்டு விடுவார்கள்!"என்ற சாதாரண விஷயம் அந்த நேரத்தில் அவளுக்குத் தோன்றாது.(இது ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கும் பொருந்தும்! அவர்கள் சொல்வது நமக்குப் புரியாவிட்டாலோ, நாம் சொல்வது அவர்களுக்கு புரியாவிட்டாலோ அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடுவார்கள்!) நாம் எழுத சொல்லி வற்புறுத்தினால் அழத் தொடங்கிவிடுவாள்.

கிட்டத்தட்ட எல்லாம் தெரிந்தும் அதை வெளிக்காட்டாமுடியாமல் இருப்பது, 'எதுவுமே தெரியாது' என்ற நிலைக்கு ஒப்பானது தான். நான் இதை கீழ்க்கண்டவாறு விளக்க விரும்புகிறேன்: 'எதுவுமே தெரியாது' (முட்டாள்) 'எல்லாமே தெரியும்' (அறிஞன்) என்ற இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட தூரம் மிகக்குறைவே.நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், இது ஒரு கடிகாரத்தின் சூழற்ச்சி போல் முழு சுற்று சுற்ற வேண்டுமென்று.ஆனால் எனக்குத் தோன்றுகிறது கடிகார முள் எதிர்திசையில் ஒரே ஒரு அங்குலம் நகர்ந்தாலே அது மிகப் பெரிய மாறுதலை‌ உண்டாக்குமென்று.


அதுபோல்தான் இதுவும். 'ஆம்', 'இல்லை' என்ற நிலைகளுக்குள் நிகழும் மாற்றம். மிகுந்த அறிவு கொண்டவர்கள் திடீரென மனநல பாதிப்புக்கு உள்ளாவதும், 'ஒன்றுமே தெரியாது' என நாம் சிலரைப் பற்றி நினைக்கும் போது அவர்கள் அனைத்தும் அறிந்தவர்களாக இருப்பது என  முரண்பட்ட இரண்டு விஷயங்களுக்குள்ள தொலைவு மிக மிகக் குறைவே எனத் தோன்றுகிறது. 

உதாரணம்#2:அதேபோல் அவளது பன்மொழித் திறமையை சோதிக்க நினைத்த நான் வீட்டில் அவள் அதிகம் எழுத ஒத்துழைக்காத காரணத்தால் அவளது ரைட்டிங் கிளாஸ் எடுக்கும் தெரப்பிஸ்டிடம் அவளுக்கு என்னென்ன மொழிகள் தெரியுமென்று சோதிக்கும்படி கேட்டிருந்தேன்.தெரப்பிஸ்டின் கையைப் பிடித்துக் கொண்டு எழுதத் தொடங்கிய மீனாட்சி தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம்,ஐரிஷ் (உலகின் மிக வேகமாக அழிந்து வரும் மொழிகளில் ஒன்று), ஆங்கிலம் மற்றும் சைனீஸ் போன்ற மொழிகளில் ஒரு முக்கிய விஷயத்தை தனக்குப் பல மொழிகள் தெரியும் என்பதோடு சேர்த்தே வெளிக்காட்டினாள். அவள் சொன்ன விஷயம் தனக்கு வந்த கனவு என்கிறாள். அதாவது ஐஸ்வர்யா என்ற அந்த தெரபிஸ்டிற்க்கு குழந்தை பிறக்கப் போகிறது என்பதுதான் அந்த விஷயம் இதில் 'சப்னே' (கனவு) என்பதை மலையாளத்திலும் 'பேபி வில் கம் ஃபார் ஐஸு' என்பதை ஆங்கிலத்திலும், மேலும் பிறக்கப் போகும் குழந்தையை சீனமொழியில் "போபோ"என்றும் எழுதியிருந்தாள். அந்தந்த மொழிகளுக்குக் கீழேயே அது எந்த மொழி என்பதை நாம் புரிந்து கொள்வதற்காக ஆங்கிலத்திலும் எழுதியிருந்தாள். இதில் அவள் எழுதிய மலையாள எழுத்துக்கள் ஒரு கோணத்தில் பார்த்தால் தமிழ் எழுத்துக்கள் போல தெரிந்தது, இவளது தெலுங்கு எழுத்துக்களை டெல்லியில் உள்ள எனது அத்தை மகள் தனது அண்டை வீட்டாரிடம் கேட்க, அவர்களோ அது தெலுங்கு தான் ஆனால் இன்று வழக்கத்தில் இல்லாத எழுத்து வடிவமான கோவில் கல்வெட்டுக்களில் காணப்படும் பழைய கிரந்தத்தை ஒத்துள்ளது என்று கூறியிருக்கிறார்கள். "அவள் எழுதிய 'போபோ' சீன மொழியே இல்லை" என்றார் இதை தன்னிச்சையாக சோதித்த ஃபிரான்ஸில் இருக்கும் எனது உறவுக்கார பெண்மணி, தனது தோழியான ஒரு சீனப் பெண்ணிடம் விசாரித்துவிட்டு பதிலளித்திருந்தார். இதை நான் விரிவாக ஆராய்ந்த போது 'போபோ' என்ற அந்த வார்த்தைக்கு 'பாண்டாக் குட்டி' என்று கொச்சையாக குழந்தைகளை கொஞ்சு வதற்காக சீன தேசத்தில் வழக்கத்தில் பயன்படுத்தும் சொல் என்று அறிந்தேன். ஆனால் அவள் எழுதிய எழுத்துக்கள் சீன தேசத்தில் பயன்படுத்தும் எழுத்துக்களே அல்ல! அங்கு பயன்படுத்தப்படுவது நமது தமிழின் சீர்திருத்த எழுத்துக்களைப் போல் எளிமையாக்கப்பட்ட சீன மொழியாகும் (சிம்பிளிஃபைட் சைனீஸ்). இவள் பயன்படுத்திய எழுத்துக்கள் சீன தேசத்திற்கு வெளியே தைவான்,ஹாங்காங், மகாவா ஆகிய இடங்களில் இன்றும் பயன்படுத்தப்பட்டு வரும் பண்டைய சீன எழுத்துக்களாகும் (ட்ரெடிஷனல் சைனீஸ்).என் உறவினரின் தோழி நேரடியாக சீனாவிலிருந்து வந்தவர் என்பதால் எளிய சீன எழுத்துக்களை மட்டுமே அறிந்திருக்கிறார். இதை நான் கூகுளில் கண்டுபிடித்து இரண்டு எழுத்துக்களுக்கும் உள்ள வித்தியாசங்களை அவருக்கு விளக்கினேன்.அவர் ஒப்புக் கொண்டாரா? தெரியாது! அவருக்கு இருந்ததும் ஒருவகை அக்கறை தான். நமது சந்திராயன் உண்மையிலேயே நிலவை நெருங்கியதா, அதன் தென்பகுதியில் தான் விழுந்ததா என்று நாசாவும், ஐரோப்பிய விண்வெளிக் கழகமும் சோதித்த அதே அக்கறை.நாம்ஆர்வக் கோளாறில் நமது உற்றார்‌ உறவினரிடம் நம் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.அதை சரியாகப் புரிந்து கொள்வதும், எதிர்மறையாக செயல்படுவதும் அவர் அவர் மனநிலையைப் பொருத்தது! உங்களுக்கு அதிசயமாக தெரிந்த விஷயம் பிறருக்கு கேலிக்கூத்தாக தெரிவது இயல்புதானே?ஆனால் அதே பெண்மணியின் கனவில் இன்றும் அடிக்கடி மீனாட்சி வருவதாக அவரே கூறுகிறார். மீனாட்சியின் பள்ளி வகுப்பறை இப்படித்தான் இருக்கிறது, அங்கே ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்(சாதாரண ஒரு ஆசிரியர்+ ஒரு நிழல் ஆசிரியர்+ ஒரு உதவியாளர்) இருக்கிறார்கள் என்பது வரை அவர் கனவில் வந்ததாகச் சொல்லும் விஷயங்கள் உண்மையுடன் பொருந்திப் போகின்றன.





தான்  சொல்வது உண்மை (True) என்பதை  தமிழ்  ஆங்கிலம் சேர்த்து இறுதியாக 'Trண்மை' என்று எழுதியிருக்கிறாள். இதை எழுதியபோது மீனாட்சிக்கு  ஐந்து வயது!


ஐந்து வயது குழந்தையால்  எதிர்காலத்தை நிகழ்காலத்தில் கடந்தகால எழுத்துமுறையில் விளக்கமுடிகிறதென்றால் இது உண்மையில் வியப்பான விஷயம்தானே?!


(இது நடந்த ஆறு மாதங்களுக்குள் ஐஸ்வர்யா கர்ப்பமான காரணத்தால் வேலையிலிருந்து தற்காலிகமாக நின்றுகொண்டாள்.வேறு வழியில்லாமல் மீனாட்சியின் ரைட்டிங் கிளாஸும் நிறுத்தப் படவேண்டிய நிலை வந்தது!).

முக்கிய குறிப்பு: இதே ஐஸ்வர்யா, மீனாட்சியிடம் உனக்கு எத்தனைமொழிகள் தெரியும் என்று கேட்க "So many. Can't count"("நிறையத் தெரியும். எண்ணிலடங்காது)  என்று எழுதியிருக்கிறாள். "நீ அறிந்தவற்றுள் உனக்கு மிகவும் பிடித்த மொழி எது?" என்ற கேள்விக்கு ஏதோ மெத்தப் படித்த அறிஞரைப் போல் "தமிழ்" தான்! "இலக்கணம் இலக்கியம்" சிறப்பாக கொண்டுள்ளதால் காரணத்தால் என்று பொருள்படும்படி பதிலளித்துள்ளாள். மேலும் "எழில் மிகுந்த மொழி" என்று குறிப்பிட்டுள்ளாள். 


இது எழுதியபோது மீனாட்சிக்கு நாலரை வயது!

உதாரணம்#3: எனது மனைவியின் மூத்த சகோதரர் ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்திருந்தபொழுது மீனாட்சியைப் பற்றி அவரிடம் குறிப்பிட்டேன். இதைக் கேட்ட அவர் "மாப்ளே!  எங்கிட்ட எழுதுவாளானு  தெரியல.நீங்களே அவ கையப் புடிச்சுக்கோங்க. நான் என்னைக்கு சுவிட்ஸர்லாந்து போவேன்னு அவ கிட்ட கேளுங்க!"என்றார். இது நடந்தது டிசம்பர் 2016ல். இவள் எழுதிய தேதி 'மே 5,  2017' என்று. இதைப் பார்த்த அவர் தனது மொபைலில் கேலண்டரை சென்று பார்த்தார். அவருக்கு முகமெல்லாம் வியர்த்து படபடப்பாக காணப்பட்டார் "மாப்ளே! நீங்க குழந்தைப் பற்றி கவலையே படாதீங்க!அவ பெரிய ஜீனியஸ்! என் மனைவியையும் அழைத்து "நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டிய நேரம் இது.எதற்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?"என்றார். அவர் மேலும் சொன்னார் "நான் மே முதல்வாரத்தில் வெளிநாடு செல்வேனென்று தெரியுமே ஒழிய, தேதி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. ஆனால் எங்கள் நிறுவனத்தைப் பொறுத்த வரையில் வாரத்தின் இறுதி வேலை நாட்களில் தான் அதாவது வெள்ளிக் கிழமைகளில் தான் 'ஆன்சைட்' அனுப்புவார்கள். மீனாட்சி குறிப்பிட்டுள்ள தேதி வெள்ளிக்கிழமையாகத் தான் வருகிறது. அப்படியானால் எனக்கே தெரியாத நிலையில் நான் ஊருக்கு செல்லும் நாளை அவள் எப்படித் தெரிந்து வைத்திருக்கிறாள் பாருங்கள்!"என்றார்.

உதாரணம்#4: ஒருமுறை அமெரிக்காவிலிருந்து வந்திருந்த எனது மாமாவிடம் மீனாட்சியின் கையைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி உங்களுடைய அலைபேசி எண்ணைக் கேளுங்கள் எழுதுவாள் என்றேன். அவரிடம் அழகாக ஒத்துழைத்த மீனாட்சி அவருடைய பத்து இலக்க அமெரிக்க அலைபேசி எண்ணை அவருக்கே எழுதிக் காட்டினாள் (அவள் எழுதியதைப் பார்த்தால் அவரது கையை தொட்டதால் அவரது உணர்வுகளை புரிந்து கொண்டது போல் இல்லை! தனக்கு முன்பே தெரிந்த விஷயத்தை ஆர்வமாக எழுதுவது போல் நடந்து கொண்டாள்). இது தவிர அவரது மகள் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும்பொழுது அமெரிக்காவின் பிரபல போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் செய்துகொண்டிருந்தாள். நான் "சந்தியா எந்த நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறாள்?" என்று மீனாட்சியிடம் வினவினேன். இவள் உடனே 'Lockheed Martin' (லாக்ஹீட் மார்ட்டின்) என்று ஆங்கிலத்தில் தொடங்கி கடைசி எழுத்து 'ன்'னை மட்டும் தமிழில் எழுதிக் காட்டினாள். இன்று அவளுக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் வேலை கிடைத்தாலும் அவள் வேலைக்கு சேர்ந்தது என்னவோ லாக்ஹீட் மார்டினில் தான். 

உதாரணம்#5: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒரு விஷயம்!

அப்பொழுது எனது மனைவி கருத்தடை மாத்திரை உட்கொண்டதையும் மீறி கருவுற்றிருந்தாள். இதில் ஆபத்து அதிகம் என்ற காரணத்தால் மருத்துவரின் பரிந்துரைப்படி 38 நாள் கருவை மாத்திரை மூலம் கலைக்க முடிவு செய்திருந்தோம். குறிப்பிட்ட நாளில் கருக்கலைப்பு மாத்திரையை எனது மனைவி உட்கொண்ட அந்த சமயத்தில் கையில் ஒரு கைக்குட்டையை எடுத்துக் கொண்ட மீனாட்சி பூஜை அறையில் போய் உட்கார்ந்து கொண்டாள். ஒரு மணிநேரத்தில் கரு கலையத்
தொடங்கியது. சரியாக கரு கலைந்துவிட்டது என்று தெரிந்த அந்த நேரம் பூஜை அறையை விட்டு வெளியே வந்த மீனாட்சி தனது அம்மா ரேவதியின் மணிக்கட்டை கடிக்கத் தொடங்கினாள்.இதனால் மீனாட்சியின் பற்கள்பட்டு ரேவதியின் கைகள் முழுவதும் புண்ணாக்த் தொடங்கியது. இது கிட்டத்தட்ட 2 வாரங்கள் நீடித்தது. 'மீனாட்சிக்கு புதிதாக மனநல பாதிப்பும் ஏதேனும் சேர்ந்துவிட்டதோ?' என்று நாங்கள் அஞ்சத் தொடங்கினோம். அந்த சமயத்தில் ரேவதி ஓய்வில் இருக்க, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு நான் மட்டுமே மீனாட்சியை தெரப்பி வகுப்புகளுக்கு அழைத்துச் சென்று வந்தேன். ஒருமாத காலம் கழித்து ரேவதி சற்று உடல் நலம் தேறியவுடன் அவளே அழைத்துச் செல்ல தொடங்கினாள். அவளை வெகு நாட்கள் கழித்து பார்த்த அந்த தெரப்பி சென்டர் நிர்வாகி "ரேவதி! உங்களுக்கு கருக்கலைப்பு ஏதேனும் நிகழ்ந்ததாயென்று கேட்க?". ரேவதிக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது. அவர் மேலும் கூறியதாவது "உங்கள் மகள் உங்கள் மீதும் உங்கள் கணவரின் மீதும் மிகுந்த கோபத்தில் இருப்பதாக என்னிடம் எழுதிக் காட்டினாள். மேலும் "நன்றாகத்தானே இருந்தான் எனது தம்பி? (எனது கருத்து: 38 நாள் கரு ஆணா பெண்ணா என்று மருத்துவர்களாலேயே  கணிக்க முடியாதே!) பிறகு ஏன் அவனை அழித்தார்கள் என்று கேட்டுச் சொல்லுங்கள்" என்று ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறாள். மருத்துவரின் ஆலோசனையின் பெயரில்தான் கருக்கலைப்பு நடந்ததாக மீனாட்சியிடம் நாங்கள் வாய்மொழியாக எடுத்துச் சொன்னோம். பெரிய விஷயத்தை தானாகவே புரிந்து கொண்ட மீனாட்சிக்கு நாங்கள் சொன்னது புரிந்ததா என்று தெரியாது‌. ஆனால் இந்த சம்பவம் நடந்ததிலிருந்து எந்த பொம்மைக் கடைக்குச் சென்றாலும், அங்கே ஒரு தவழும் சிறுவனின் பொம்மையோ அல்லது பால்புட்டியுடனிருக்கும் ஒரு சிறுவனின் பொம்மையைக் கண்டாலோ மீனாட்சி  முதலில் அதைத் தான் எடுப்பாள்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்  இன்றுவரை மீனாட்சி அவளது விரல்களைப் பிடித்துக் கொண்டால் மட்டுமே எழுதுகிறாள். எல்லோரிடமும் எழுதுவதில்லை. பள்ளியிலும்  தெரப்பி கிளாஸ்களிலும் அழகாக ஒத்துழைக்கிறாள்.பள்ளியில் தற்போது நிழல் ஆசிரியையின் (shadow teacher) உதவியுடன் ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் (இது ஒரு இன்க்ளூஷன் பள்ளி. சிறப்பு பள்ளி அல்ல!) பயிலும் மீனாட்சி, அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதுடன் வியக்கத் தகுந்த வகையில் அனைவரையும் விடவும் மிக விரைவாகவே தேர்வுகளை எழுதுகிறாள் என்கிறார்கள். பெரிய வகுப்புகளின்  பாடங்கள் கூட அவளுக்குத் தெரிந்திருக்கிறது என்பதை பள்ளி நிர்வாகிகளும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

பெரும்பாலும் வீட்டில் எங்களிடம் எழுதுவது அவளது அப்போதைய மனநிலையைப் பொருத்தது.தெரிந்தவர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் போன்றவர்களிடம் அவளது இந்தத் திறமையைப் பற்றி சொல்லி எழுதுகிறாளா என்று பார்த்தால் பெரும்பாலும் கிறுக்கிவிடுகிறாள். யாரிடம் எப்போது எழுத வேண்டும் யாரிடம் எழுத வேண்டாம் போன்ற விஷயங்களை அவளே தீர்மானிக்கிறாள். அவளது பிடிவாதத்தை உடைப்பது எங்களால் முடியாத காரியமாகவே உள்ளது.அவள் எழுதுவதை கேமராவில் பதிவு செய்வதுகூட எங்களால் முடியாது! (எப்படி மறைத்துக்கொண்டு வீடியோ எடுத்தாலும் 'டெலிபதி' மூலம் தெரிந்து கொண்டு விடுகிறாள்!)அவளைப் புரிந்து கொண்டவர்களுக்கு அவளோ ஒரு மேதை. புரியாதவர்களுக்கு ஒன்றும் தெரியாத குழந்தையைப் பற்றி நடக்காத விஷயங்களை நடந்ததாகச் சொல்லி பொய்க்கதை பரப்பிவரும் பெற்றோர்கள் நாங்கள். ஒரு சில கண்முன் நிகழும் அதிசயங்களை பிறருக்கு புரிய வைக்கமுடியாமல் போவது மிகப்பெரிய தவிப்பு தான். கிட்டத்தட்ட எங்களின் நிலைமையும் பேசமுடியாமல் மீனாட்சி கஷ்டப்படுவதற்கு ஒப்பானதே. அவளுக்கு  தொலைக்காட்சி மூலமோ,செய்தித் தாள் மூலமோ பெருமை வாங்கித் தர வேண்டியது எங்களுடைய வேலையல்ல. அது எங்களின் நோக்கமும் அல்ல. உற்றார், உறவினர், அவள் பயிலும் பள்ளி போன்றயிடங்களில் அவள் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டால் அவளை கையாள்வது அனைவருக்கும் எளிதாக இருக்கும் என்பது மட்டுமே எங்களின் ஆதங்கம்.

நாம் அனைவரும் காய்ச்சல்,தலைவலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றின் அறிகுறிகளை உணர்ந்துள்ளதால் நமக்கு அவற்றின் தாக்கம் தெரியும். இப்படியும் ஒரு பிரச்சனை உள்ளது என்பதை சொன்னாலும் பிறருக்குப் புரிய வைப்பது மிகவும் கடினமாகவே உள்ளது. இது ஒருவகையில் பார்த்தால் இதுபோன்ற குழந்தைகளுடன் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே நான் சொல்வது முழுமையாகப் புரியும். 

நான் மேற்கொண்டு இணையத்தைத்  தேடியதில் கருநீலக் குழந்தைகள் (Indigo Children) பற்றித் தெரிந்து கொண்டேன்:
நான்ஸி ஆன் டாஃபே என்ற‌ அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு பெண்மணி. இவருக்கு சினஸ்தீஸியா பிரச்சனை உண்டென்று சொல்லப்படுவதுண்டு. வண்ணங்களால் ஏற்படும் சினஸ்தீஸியாவை (colored grapheme synesthesia) அடிப்படையாகக் கொண்டு வண்ணங்களின் (colorology) அடிப்படையில் மனிதர்களை ஒளி வட்டங்களாகப் பிரித்து (energy level or aura) அவர்களது குணாதிசயங்களைக் குறிப்பிட்டுள்ளார். இவரது கூற்றின்படி கருநீலக் குழந்தைகள் (Indigo children) என்பவர்கள் 70களின் பிற்பகுதி மற்றும் என்பதுகளில் அதிகம் பிறந்த குழந்தைகள்.பெரும்பாலும் நினைத்ததைச் சாதிக்கும் குணமும், கட்டுப்பாடுகளை அதிகம் விரும்பாததும் இவர்களின் குணாதிசயங்களாக இருக்கும் என்கிறார். ஆனால் மருத்துவ உலகமோ ADHD போன்ற கவனச்சிதறல் உள்ள குழந்தைகளை 'கட்டுப்பாடுகளை விரும்பாதவர்கள்' என குறிப்பிடுவது ஒரு வகையில் அவர்களின் குறைகளை மறைப்பதற்கு எடுத்தாண்ட முயற்சி என்று குறிப்பிடுகிறார்கள். இதே  கருநீலக் குழந்தைகளை அடிப்படையாக வைத்து ஹாலிவுட் திரைப்படங்களும் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஸ்படிகக் குழந்தைகள் (crystal children): நான்ஸியைத் தொடர்ந்து கருநீல குழந்தைகளைப் பின்பற்றி புதிதாகப் பிறக்கத் தொடங்கியிருக்கும் புதிய தலைமுறைக் குழந்தைகளைப் பற்றி டோரன்‌ வெர்ச்யூ என்ற பெண்மணி ஸ்படிகக்  குழந்தைகள் (crystal children) என்ற தத்துவத்தை முன்வைக்கிறார். இவரது புத்தகம் "A guide to the newest generation of psychic and sensitive children" அமேசானில் விற்பனைக்கு கிடைக்கிறது. இவர் குறிப்பிடும் குணாதிசயங்கள் மீனாட்சிக்கு கனகச்சிதமாகப் பொருந்துகிறது. அதாவது இக்குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியானவர்கள், மென்மையானவர்கள், பேரன்பைக் கொண்டவர்கள், தாமதமாகவே பேசுவார்கள், ஆனால் நுண்ணுணர்வும் (telepathy) அமானுஷ்ய சக்தியும் இவர்களுக்கு உண்டு. கூட்டமான இடங்களில் தவிர்ப்பார்கள். இயற்கையை அதிகம் விரும்புவார்கள். சில குழந்தைகள் பிரபஞ்சத்தைப் பற்றியும் முற்பிறவியைப் பற்றியும் கூட பேசுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவை எதுவுமே மருத்துவர்களாலும் விஞ்ஞானத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
 





Wednesday, December 09, 2020

14. முன்ஜென்மம் உண்மையா?

 'முன்ஜென்ம நினைவு' பற்றி எனது அடுத்த மின்னஞ்சலில் டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்டிடம் கேட்டேன். அதற்கு அவர் "உலகின் பல பகுதிகளிலிருந்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பும் பெற்றோர்கள் இது குறித்த கேள்வியை என்னிடம் பலமுறை கேட்டிருக்கிறார்கள். இதற்கு எனது பதில் 'இருக்கலாம்! இல்லை என்று சொல்வதற்கு நான் யார்?' ஆனால் இதையெல்லாம் நான் ஜெனிடிக் மெமரி (மரபுவழி அறிவு) என்பதோடு சுருக்கிக் கொள்கிறேன்" என்று பதில் எழுதியிருந்தார். முன் ஜென்ம நினைவுகள் பற்றி நான் மேற்கொண்டு இணையத்தில் தேடியதில், முன்ஜென்ம நினைவுகளோடு பிறந்த குழந்தைகளைப் பற்றி வெர்ஜினியா பல்கலைக்கழகத்தின் உளவியல்துறையைச் சேர்ந்த டாக்டர்.ஜிம் டக்கர் முன்ஜென்ம நினைவுகளுடன் பிறந்த 200க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட டாக்டர்.இயன் ஸ்டீவன்சனின் ஆய்வைத் தொடர்கிறார். இதில் பெரும்பாலான குழந்தைகளுக்கு அவர்கள் உடலில் இருக்கும் மச்சம், மேலும் மீனாட்சிக்கு உள்ள ரத்த குழல் கட்டி (hemangioma), வினோதமான தழும்புகள் மற்றும் விரல்கள் இல்லாமல் பிறப்பது போன்ற பிறவிக் குறைபாடுகள் போன்றவற்றுக்கான காரணங்கள் பெரும்பாலும் அந்தக் குழந்தைகளாலேயே சொல்லப்பட்டிருக்கிறது. இவர்களெல்லாம் ஆட்டிசம், பேச்சு தாமதம் போன்ற பிரச்சினைகள் இல்லாத சாதாரணக் குழந்தைகள். எனவே இளம் வயதிலேயே தெளிவாகப் பேசக்கூடியவர்கள்.இதில் ஒரு சிலர் தங்களுக்கு முற்பிறவியில் இவர்களால் இந்த இடத்தில் இந்த நேரத்தில் இப்படிதான் பாதிப்பு ஏற்பட்டது என்பதுவரை தெள்ளத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு நெற்றிப்பொட்டில் வட்ட வடிவமான தழும்புடன் பிறந்த சிறுவன், தன்னை முற்பிறவியில் துப்பாக்கியால் ஒரு நபர் சுட்டதை தெளிவாகச் சொல்லி இருக்கிறான். இதில் அக்குழந்தைகள் குறிப்பிடும் சம்பவங்கள் சில ஆண்டுகள் முதல் பல ஆண்டுகள் முற்பட்டதாக இருந்திருக்கிறது. இதற்கு சாட்சியாக இருந்த பலர் நடந்த சம்பவங்கள் உண்மைதான் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். இதேபோல் ஸீனோக்ளாஸி(xenoglossy) என‌று டாக்டர் இயன் ஸ்டீவன்சனின் முக்கிய ஆராய்ச்சியாகக் குறிப்பிடப்படுவது, முன்ஜென்மத் தொடர்பால் ஒரு சிலர் முன்பின் தெரியாத மொழிகளில் சரளமாக பேசவும் எழுதவும் தொடங்குவதைப் பற்றியது. மேலும் சிலரிடம் 'ஹிப்னாடிசம்' போன்ற உத்திகளைப் பயன்படுத்தி ஆழ்மனதைத் தூண்டியபோது அதில் சிலர் முன்பின் அறியாத மொழிகளில் கூட பேச தொடங்கியதாக கூறியுள்ளார். சமீபத்தில் கூட இஸ்ரேலின் கோலன் குன்றுப் பகுதியில் ஆங்கிலம் தெரியாத குடும்பத்தில் பிறந்த ஓநீல் முகம்மது என்ற மூன்றரை வயது சிறுவன் மிகச் சரளமாக தெற்கு லண்டனில் வசிக்கும் பாகிஸ்தானியர் பேசும் வட்டார வழக்குடன் ஆங்கிலம் பேசுவதாக செய்தி படித்தேன்.

Monday, November 16, 2020

13. தமிழ் மீது தீராக் காதல்கொண்ட ஸ்காட்லாந்து சிறுவன் கோல்ட்!

சவான்ட் சின்ட்ரோம் பற்றி என்னிடம் சொன்ன சிலர் 'மறு ஜென்மம்' பற்றிப் பேசினார்கள். அதாவது மீனாட்சி போன்ற குழந்தைகளுக்கு ஒன்றிற்கு  மேற்பட்ட பூர்வ ஜென்மங்களின் நினைவுகள் இருப்பதால்தான் இவர்களுக்கு பன்மொழித் திறமை உள்ளது என்று என்னிடம் கூறினார்கள்.‌பெரும்பாலான ஹைபர்லெக்சியா உள்ள ஆங்கிலம் மட்டுமே பேசும் குடும்பங்களில் பிறக்கும் வெளிநாட்டுக் குழந்தைகள் முன்பின் அறிமுகமில்லாத தமிழ், அரபி, கொரியன்,ரஷ்யன், ஸ்பேனிஷ்,உருது போன்ற  அந்நிய மொழிகளில் எழுதுகிறார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் எனது முகநூல் நண்பர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த திரு.மைக்கேல் அவர்களின்  மகன் 'கோல்ட்' (Colt). இது எங்களைப் போன்ற ஹைப்பர்லெக்சியா உள்ள குழந்தைகளின் பெற்றோர்களால் தொடங்கப்பட்ட முகநூல் பக்கம். இதன் மூலம் எனக்கும் மைகேலுக்கும் உள்ளதுபோல் தேசம்,மொழி,இனம் கடந்த நட்பு இக்குழந்தைகள் மூலம் பல பெற்றோர்களுக்குள்  ஏற்பட்டுள்ளது. பிறரிடம் பகிரமுடியாத இக்குழந்தைகளை கையாள்வதில் உள்ள சிக்கல்களை இங்கே பகிர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் தீர்வுகளையும் பரிமாறிக்கொள்கிறோம். இங்கே ஜெர்மானியிலோ  இத்தாலியிலோ பிறந்த ஒரு குழந்தை முன்பின் அறிமுகமில்லா அரபியும் தமிழும் எழுதுவதாக ஆச்சார்ச்சத்துடன் சொல்லி  தினமும் ஒரு பெற்றோர் இக்குழுவில் சேர்வது வாடிக்கை. அது பெரும்பாலும் நாங்கள் கடந்துவந்த பாதையை  ஒத்திருப்பதும் வாடிக்கை. ஆனால் சமீபகாலமாக வரும் மேலைநாட்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் மனநல மருத்துவர்கள் ஹைப்பர்லெக்சியா சோதனை மேற்கொண்டு தங்கள் குழந்தைக்கு  ஹைப்பர்லெக்சியா உள்ளதை அங்கீகரித்துள்ளதாக சொல்வது மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னும் நம்நாட்டில் இதை ஆட்டிசத்திலிருந்து பிரிக்காமல் வைத்திருப்பது வேதனையே!

கோல்டிற்கு  மீனாட்சியின் வயதுதான். கோல்டிற்கும் மீனாட்சியைப் போல் தனித்து எழுதுவது பேசுவது போன்றவற்றில் பிரச்சனை இருந்திருக்கிறது. ஆனால் 5 வயதில் திடீரென ஒரே நாளில் அவனிடம் நல்ல மாற்றங்கள் தெரிந்திருக்கிறது. அவன் தனித்து எழுதத் தொடங்கிய நேரத்தில் அவன் 'வணக்கம்' என்று தமிழில் தொடங்கி உலக மொழிகள் அனைத்திலும் அதற்கு இணையாக உள்ள வார்த்தைகளில் வாழ்த்து தெரிவிக்கிறான். இது தவிர 'பென்10' என்ற கார்ட்டூன் நிகழ்ச்சியை கோல்ட் யூடியூப்பில் தமிழில் தான் பார்த்து ரசிப்பதாக மைக்கேல் என்னிடம் தெரிவித்தார்.‌ தமிழைப் பற்றி மைக்கேலிடம் கூறிய கோல்ட் "தமிழ்  குஜராத்திலும் இலங்கையிலும்" பேசப்படும் மொழி என்று கூறியிருக்கிறான்.‌ இலங்கையில் 'தமிழ்' என்பது நமக்குத் தெரிந்த விஷயம் தான்.குஜராத்திற்கு எப்படி தமிழ் வந்தது? இதுபற்றி என்னிடம் கூறிய இலங்கையைச் சேர்ந்த எங்கள் குடும்ப நண்பர் 'அந்தச் சிறுவன் சொல்வது ஒருவகையில் சரிதான். வடக்கு இலங்கையில் 'மேமன்' என்ற பிரிவைச் சேர்ந்த மக்கள் தமிழில் கதைத்தாலும் அவர்களின் பூர்வீகம் குஜராத் தான்'என்று கூறினார்.

இன்று கோல்டின்‌ முக்கிய பொழுதுபோக்கு: அவனுக்கு உலகின் அனைத்து நாடுகளின் பெயர்களும், கொடிகளும், தேசிய கீதங்களும் அத்துப்படி.‌மேலும் அவனே புதிய நாடுகளையும், கண்டங்களையும் கொண்ட உலக வரைபடத்தை உருவாக்கிவருகிறான்.

கோல்ட்

முன்பிருந்த 'லெமூரியா' கண்டம் இன்று இல்லை. அதேபோல் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக உடைய தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் நடக்கப் போவதை தான் சிறுவன் கோல்ட் விளையாட்டாக உருவாக்கிப் பார்க்கின்றானோ?


கோல்டிற்கும் மீனாட்சிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
நான் மைக்கேலிடம் கேட்டவரையில் கோல்டிற்கு ஹைபர்லெக்சியா மட்டுமே உள்ளது. மீனாட்சியைப் போல் பிறர் மனதைப் படிக்கும் நுண்ணுர்வுத் திறன் போன்ற 'சவான்ட்' திறமைகள் வெளிப்படவில்லை.தன்னிச்சையாக பேசவும் எழுதவும் தொடங்கிவிட்டான்.மீனாட்சி தனக்கு நன்கு பரிச்சயமான தாய், ஆசிரியை, தெரப்பிஸ்ட் போன்ற குறிப்பிட்ட சிலருடன் மட்டுமே குறைவான வார்த்தைகளுடன் மெல்லிய குரலில் பேசத் தொடங்கியிருக்கிறாள். கோல்ட் நிறையப் படித்து அறிவை மேம்படுத்திக் கொள்கிறான்.‌தன் திறமைகளை பிறரிடம் வெளிப்படுத்திக் கொள்கிறான். மீனாட்சிக்கு படிக்காமலேயே சகலமும் தெரியுமென்றாலும் தன்னை எல்லோரிடமும் வெளிப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை.

கீழே : எங்களுக்குள் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்கள்!

மீனாட்சியின் தமிழ், மலையாளம் போன்ற இந்திய மொழிகள்  மற்றும் உயர்த்த ஆங்கிலப்புலமை  பற்றி நான் கூற, மைகேல் உள்ளிட்ட வெளிநாட்டுப் பெற்றோர் தங்கள்குழந்தைகள் இந்திய மொழிகள் மற்றும் அந்நியமொழிகளில்  பெற்றிருக்கும் அறிவைப்  பற்றி விவரிக்கிறார்கள்!










அறிவார்ந்த குழந்தைகளின் உலகம் எப்படிப்பட்ட பொழுதுபோக்குகளையும் விளையாட்டுக்களையும் கொண்டுள்ளது என்பதை நீங்கள் காணவேண்டாமா!

 கீழே உள்ள படங்களைப் பாருங்கள்! இவை ஹைபர்லெக்ஸியா முகநூல் குழுவில் உலகெங்கிலுமுள்ள பெற்றோர்களால் பகிரப்பட்ட புகைப்படங்கள். இனிமேல்  உங்கள் குழந்தைகளை 'சிறப்புக் குழந்தைகள்' என்று சொல்லப்படும் குழந்தைகளுடன்  ஒப்பிடலாமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளவும்.என்னைப் பொறுத்தவரை படைப்பால் அனைத்துக்  குழந்தைகளும் ஒன்றுதான். அவர்களின் மனதில் பெற்றோராகிய நாம் 'தான்' என்ற உணர்வை ஊட்டி அதை அவர்களின் தலையில் ஏற்றிவிடக் கூடாது. 'தான்' என்ற உணர்வுதான் நமது அறிவிற்கு பின்னாளில் உடனிருந்து குழிபறிக்கும் நம்பிக்கை துரோகியாகிவிடுகிறது.


எழுத்துக்களுடன் விளையாடும் ஒரு சிறுவன் 



மும்மொழி அகர வரிசைகளுடன் ஒரு சிறுவன் 



எண்களுடன் பூஜ்யங்களை சேர்த்துக்கொண்டே போயி  ஸ்தனங்களுடன் விளையாடும் பொடியன் 



                                     இந்த வயதில் இவ்வளவு ஸ்தனங்களுடன் வகுத்தலா? 



இவன் வடிவியலில் நிபுணன்! 

                                                      
இது அர்த்தமுள்ள சுட்டித்தனம்!



புகைப்படத்துக்கு  போஸ் கொடுக்க வைப்பது என்றுமே கடினம்தான்!


இவன் மூன்று வயதில் பெற்ற  பிறந்தநாள் பரிசு 'லோகோக்கள்' அடங்கிய புத்தகம்  



கிரேக்கப் பிரபுபோல் உடை அணிந்துள்ளான். இவன் அறிந்த 44 மொழிகளுள் இவனுக்குப் பிடித்தது கிரேக்க மொழியாம்! 



உறங்கும்போதும் எழுத்துக்களே உற்றதோழன் 



கணக்கிற்கு  விடை எழுதி ஐபாடின் பாதுகாப்பை தகர்த்து ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய முயலும் 3 வயது சிறுவன்!





இந்த 10 வயது சிறுவன் தாத்தா பாட்டியிடம் பெற்ற பிறந்த நாள் பரிசு "கனிம அட்டவணை"



இவன் தினமும் கண்விழிப்பது அட்லஸின் முன்! 




இந்த ஐந்துவயது சிறுவனின் விருப்பம் உடற்கூறியல்




பன்மொழி  எழுத்துக்களுடன் ஒரு சிறுவன் 




 π(Pi)ன் மதிப்பிற்கு 127 தசமஸ்தானங்களில் (decimal places) விடையளிக்கிறான்


தின்பண்டத்தை வைத்து கண்டங்கள் வரையும் 4 வயது குழந்தை 


களிமண்ணில் பாக் மேன் (Pac -Man ) உருவாக்கி மகிழும் வெளிநாட்டுவாழ் இந்தியக் குழந்தை  


     
இது மீனாட்சியின் விளையாட்டு: இதை 'ஹைப்பர்லெக்சியா  பெற்றோர்கள்' முகநூல் பக்கத்தில் பகிர்ந்து என்னவென்று கேட்டேன். வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி இது வானவில்லின் வண்ணங்களை 'ROYGBIV' என்ற சரியான வரிசையில் அடுக்கி இருக்கிறாள் என்றார் (நமக்குத் தெரிந்த வரிசை VIBGYOR தானே?). ஒருசிலர் இது DNAவின் கட்டமைப்பை விவரிக்கும் 'ஹீலிஸ்' போல் உள்ளது என்றார்கள். இதில் மீனாட்சி ஸ்பூன் வைத்தவுள்ளதுபோல் தங்கள் குழந்தைகளும் வைப்பதாக ஒருசில தாய்மார்கள் தெரிவித்திருந்தார்கள்.                           




Sunday, November 15, 2020

12. கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோ குறிப்பிடும் 'உள்ளார்ந்த அறிவு' (innatism):

முதலில் நாம் "உள்ளார்ந்த அறிவு" (innatism) என்றால் என்ன என்பதை தத்துவார்த்த ரீதியாகப் பார்க்கலாம்! கிரேக்க தத்துவ மேதை பிளாட்டோ எழுதிய 'மெனோ'வில் தனது குருவான சாக்ரடீஸுக்கும் "மெனோ" என்ற அரசியல் பிரமுகருக்கும் நடந்த சம்பாஷணையைக் குறிப்பிடுகையில், 'மெனோவிடம் அடிமையாக இருந்த ஒரு சிறுவனிடம் அவன் முன்பின் அறியாத வடிவியல் தேற்றத்தை (geometry theorem) கேட்டவுடன் மிகச்சரியாக எழுதிக் காட்டினான். இதற்குக் காரணம் அவனது உள்ளார்ந்த அறிவு தூண்டப்பட்டதே!' என்கிறார் பிளாட்டோ.மேலும் அவர் குறிப்பிடுகையில் ஒரு குழந்தை பிறக்கும்பொழுது அதன் மனம் எதுவும் எழுதப்படாத வெற்றுக் கரும்பலகையைப் போல் இல்லை (mind is not a blank slate). அனைத்துக் குழந்தைகளுமே மொழியின் கட்டமைப்பு தெரிந்தே பிறக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் முதலில் கேட்கும் தாய்மொழியை எளிதாகக் கற்று சீக்கிரம் பேசத் தொடங்குகிறார்கள். அதேபோல் ஐம்புலன்களின் மூலமாக அவர்கள் உணர்வுகளை மட்டுமே தெரிந்து கொள்கிறார்கள்.ஆனால் "வடிவங்கள்/ உருவங்கள்" (forms) அவர்களுக்குக் கற்பிக்கப் படுவதற்கு முன்பே அவை அவர்களின் மனதில் இருக்கிறது. 


இதையே இப்போது விஞ்ஞான ரீதியாகப் பார்ப்போம்: பிளாட்டோவின் இக்கருத்தை ஆமோதிக்கும் வகையில் ஓஹியோ மாநில பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி முடிவுகள் சமீபத்தில் வெளியாகி உள்ளது. பிறந்த குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் மூளையின் மொழி அறியக்கூடிய பகுதியைக் கண்டுபிடித்துள்ளார்கள்.அதை  visual word form area (VWFA)  ) என்கிறார்கள். அதாவது ஒரு குழந்தைக்கு இதுதான் மொழிக்கான வரிவடிவம் என்பது நாம் கற்பிப்பதற்கு முன்பே தெரிந்திருக்கிறது என்கிறார்கள். 

                                                                       பிளாட்டோ 

பிளாட்டோவின் தத்துவம் என்னை பெரிதும் ஈர்ப்பதற்குக் காரணம் சவான்ட் சின்ட்ரோமும் ஹைபர்லெக்சியாவும் உள்ள குழந்தைகளில் சிலருக்கு மீனாட்சியைப்போல் ஐம்புலன்கள் மூலம்(sensory integration) விஷயங்களை புரிந்துகொள்வதில் பிரச்சனை உள்ளது.இதனால் அவர்களின் ஆறாவது புலனான உள்ளுணர்வு(consciousness) விழிப்படைந்து வழிநடத்துகிறதோ? அப்படியானால் அந்த உள்ளுணர்வு தான் ஆன்மாவா? அதுதான் விஞ்ஞானத்தால் "ஜெனிடிக் மெமரி" என்று அழைக்கப்படுகிறதா? அப்படியானால் அது எங்கே இருக்கிறது? அதைத் தூண்டியது யார்?ஆன்மா நம்மைப் பிரிந்து விட்டால் ஏன் சடலமாகிறோம்?