Showing posts with label 14. முன்ஜென்மம் உண்மையா?. Show all posts
Showing posts with label 14. முன்ஜென்மம் உண்மையா?. Show all posts

Wednesday, December 09, 2020

14. முன்ஜென்மம் உண்மையா?

 'முன்ஜென்ம நினைவு' பற்றி எனது அடுத்த மின்னஞ்சலில் டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்டிடம் கேட்டேன். அதற்கு அவர் "உலகின் பல பகுதிகளிலிருந்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பும் பெற்றோர்கள் இது குறித்த கேள்வியை என்னிடம் பலமுறை கேட்டிருக்கிறார்கள். இதற்கு எனது பதில் 'இருக்கலாம்! இல்லை என்று சொல்வதற்கு நான் யார்?' ஆனால் இதையெல்லாம் நான் ஜெனிடிக் மெமரி (மரபுவழி அறிவு) என்பதோடு சுருக்கிக் கொள்கிறேன்" என்று பதில் எழுதியிருந்தார். முன் ஜென்ம நினைவுகள் பற்றி நான் மேற்கொண்டு இணையத்தில் தேடியதில், முன்ஜென்ம நினைவுகளோடு பிறந்த குழந்தைகளைப் பற்றி வெர்ஜினியா பல்கலைக்கழகத்தின் உளவியல்துறையைச் சேர்ந்த டாக்டர்.ஜிம் டக்கர் முன்ஜென்ம நினைவுகளுடன் பிறந்த 200க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட டாக்டர்.இயன் ஸ்டீவன்சனின் ஆய்வைத் தொடர்கிறார். இதில் பெரும்பாலான குழந்தைகளுக்கு அவர்கள் உடலில் இருக்கும் மச்சம், மேலும் மீனாட்சிக்கு உள்ள ரத்த குழல் கட்டி (hemangioma), வினோதமான தழும்புகள் மற்றும் விரல்கள் இல்லாமல் பிறப்பது போன்ற பிறவிக் குறைபாடுகள் போன்றவற்றுக்கான காரணங்கள் பெரும்பாலும் அந்தக் குழந்தைகளாலேயே சொல்லப்பட்டிருக்கிறது. இவர்களெல்லாம் ஆட்டிசம், பேச்சு தாமதம் போன்ற பிரச்சினைகள் இல்லாத சாதாரணக் குழந்தைகள். எனவே இளம் வயதிலேயே தெளிவாகப் பேசக்கூடியவர்கள்.இதில் ஒரு சிலர் தங்களுக்கு முற்பிறவியில் இவர்களால் இந்த இடத்தில் இந்த நேரத்தில் இப்படிதான் பாதிப்பு ஏற்பட்டது என்பதுவரை தெள்ளத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு நெற்றிப்பொட்டில் வட்ட வடிவமான தழும்புடன் பிறந்த சிறுவன், தன்னை முற்பிறவியில் துப்பாக்கியால் ஒரு நபர் சுட்டதை தெளிவாகச் சொல்லி இருக்கிறான். இதில் அக்குழந்தைகள் குறிப்பிடும் சம்பவங்கள் சில ஆண்டுகள் முதல் பல ஆண்டுகள் முற்பட்டதாக இருந்திருக்கிறது. இதற்கு சாட்சியாக இருந்த பலர் நடந்த சம்பவங்கள் உண்மைதான் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். இதேபோல் ஸீனோக்ளாஸி(xenoglossy) என‌று டாக்டர் இயன் ஸ்டீவன்சனின் முக்கிய ஆராய்ச்சியாகக் குறிப்பிடப்படுவது, முன்ஜென்மத் தொடர்பால் ஒரு சிலர் முன்பின் தெரியாத மொழிகளில் சரளமாக பேசவும் எழுதவும் தொடங்குவதைப் பற்றியது. மேலும் சிலரிடம் 'ஹிப்னாடிசம்' போன்ற உத்திகளைப் பயன்படுத்தி ஆழ்மனதைத் தூண்டியபோது அதில் சிலர் முன்பின் அறியாத மொழிகளில் கூட பேச தொடங்கியதாக கூறியுள்ளார். சமீபத்தில் கூட இஸ்ரேலின் கோலன் குன்றுப் பகுதியில் ஆங்கிலம் தெரியாத குடும்பத்தில் பிறந்த ஓநீல் முகம்மது என்ற மூன்றரை வயது சிறுவன் மிகச் சரளமாக தெற்கு லண்டனில் வசிக்கும் பாகிஸ்தானியர் பேசும் வட்டார வழக்குடன் ஆங்கிலம் பேசுவதாக செய்தி படித்தேன்.