Monday, June 01, 2020

9. ஹைபர்லெக்சியா (Hyperlexia)-பிறர் கற்பிக்காமலேயே எழுதப்படிக்கத் தெரிவது!

"ஹைபர்லெக்சியா" (Hyperlexia) என்பது குழந்தைகளிடம் காணப்படும் மிக அரிதான ஒரு பிரச்சனை என்றும், அது டிஸ்லெக்சியா (dyslexia) என்ற பொதுவான கற்றல் குறைபாடுள்ள பிரச்சனைக்கு நேர் எதிரானது என்று தெரிந்துகொண்டேன். அதாவது அதீதமான அறிவுடன் எழுத்துக்களையும் எண்களையும் அறியக்கூடிய தன்மை என்பதே அதன் பொருள்.

இது மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. 

பிரிவு-1: இந்தப் பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் ஆட்டிஸம் போன்ற எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சாதாரணமாக (neurotypical) இருப்பதுடன் அதீத அறிவுடன் எழுத்துக்களையும் எண்களையும் கையாளக் கூடியவர்களாக இருப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் கூட செய்தித் தாள்களிலும் தொலைக் காட்சிகளிலும் 4 வயதுடைய சிறுவன் திருக்குறளின் எந்த அதிகாரத்திலிருந்து எந்தக் குறளைக் கேட்டாலும் ஒப்பிப்பதைப் பார்த்திருப்போம். சில குழந்தைகள் அனைத்து நாடுகளின் தலைநகரங்களையும் தலைகீழாக ஒப்பிப்பார்கள்.

பிரிவு -2: இந்தப் பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் ஆட்டிஸம் போன்ற பிரச்சனைகளுடன் முதல் பிரிவில் கூறியது போல் அதீத அறிவுடன் செயல்படக்கூடியவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

பிரிவு-3: இப்பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆரம்ப காலத்தில் ஆட்டிஸம் போன்ற பிரச்சனைகளின் அறிகுறி தென்பட்டாலும், வளர வளர முதல் பிரிவினரைப் போல் பிரச்சனை ஏதும் இல்லாமல் சாதாரண குழந்தைகள் போல் (neurotypical) ஆகிவிடுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இக்குழந்தைகள் கடிகாரத்தை பார்க்காமலேயே நேரத்தை கடைபிடிப்பவர்கள் என்றும், ஒரே ஒரு முறை ஒரு இடத்திற்கு சென்று வந்தாலே அனைத்தையும் நினைவில் வைத்துக்கொண்டு; மீண்டும் அதே இடத்திற்கு செல்ல நேர்ந்தால் செல்ல வேண்டிய திசையையும் வழிகளையும் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய ஆற்றல் பெற்றவர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தவிர பிறருடன் கண்ணோடு கண் பார்ப்பது, அன்பை வெளிப்படுத்துவது ஆகியவற்றில் ஹைபர்லெக்சியா இரண்டாவது பிரிவினரை விட இவர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்தப் பிரிவு மீனாட்சிக்கு மிகச் சரியாகப் பொருந்தும் என்றே எனக்குத் தோன்றியது. காரணம் நான் முன்பு குறிப்பிட்டது போல் அவள் ஞாயிற்றுக்கிழமையானாலும் சரியாக பள்ளிக்குச் செல்லும் நேரம் தாண்டும்போது ஸ்கூல் பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விடுவாள். அவளுக்குப் பள்ளி விடுமுறை என்பதை சொல்லி புரிய வைக்க தான் நாங்கள் படாதபாடு படுவோம். அதேபோல் பள்ளி நேரம் முடிந்து நாங்கள் என்றாவது அவள் பள்ளி இருக்கும் திசை பக்கம் சென்றால், அவள் பள்ளி வரும் 2 தெருக்களுக்கு முன்பே அழத் தொடங்கி விடுவாள்.(நாங்கள் வேறு வழியில் வந்தால் கூட கண்டுபிடித்து விடுவாள்!). எங்களுக்குத் தான் காரணம் புரியாது. அதேபோல் அவளுக்கு பிடித்த ஐஸ்கிரீம் கடை, பீட்சா கடை  என்று அனைத்தையும் நினைவில் வைத்திருப்பாள் போலும்! நாங்கள் அந்தப் பக்கம் செல்லும்போது திடீரென வண்டியிலிருந்து குதிக்க முற்படுவார்கள். நாங்கள் அவளை அதட்டி மீண்டும் வண்டியில் உட்கார வைக்க பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டும். சில சமயங்களில் நாங்கள் நடந்து வரும் பட்சத்தில் அவள் எங்களை பிடித்துத் தள்ளி கடையை நோக்கி திருப்பி விடுவாள். அதேபோல் நான் முன்பே குறிப்பிட்டதுபோல் எங்கள் வீட்டின் 'லிப்ட்' எந்த தளத்தில் உள்ளது, எனது கம்ப்யூட்டர் மானிட்டரின் லோகோவை இவள் பிய்த்து எடுத்தது, தொலைக்காட்சியின் சேனலை மாற்றச் சொல்லி அடம்பிடித்தது, டிவியில் திரைப்படங்கள் முடியும்போது அதில் ஓடும் பெயர்களை வரிவிடாமல் அருகில் சென்று பார்ப்பது என்று தனக்கு எழுதப்படிக்கத் தெரியும் என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்தியிருக்கிறாள். நமக்கு தான் அவளது செயல்பாடுகள் வித்தியாசமானதாக‌ இருந்திருக்கிறது! அதேபோல் நான் முதலில் குறிப்பிட்டது போல் அமெரிக்காவிலிருந்து எனது தாயார் வாங்கி வந்த 'ஏ ஃபார் ஆப்பிள், பி ஃபார் பால்' என்று எழுதிய புத்தகங்களை அவள் தூக்கி எறிந்ததை நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன். அவளது செயல்களுக்கு காரணம் புரியாமல் நாம் முழிக்கும் போது அவளால் அதை பேசி புரிய வைக்க முடியாத காரணத்தால் அது கடும் கோபமாக வெளிப்பட்டிருக்கிறது. சரியாகச் சொல்வதானால் அவளுக்கு பிறந்தது முதலே எழுதவும் படிக்கவும் தெரியும். அவளின் அறிவிற்கு A,B,C,D எல்லாம் சிறுபிள்ளைத் தனமாக தெரிந்திருக்கிறது. அவளுக்கு ஒன்றல்ல இரண்டல்ல பல மொழிகள் தெரியும் என்ற உண்மை எனக்கு போகப் போகத்தான் தெரிந்தது. அவை இந்திய மொழிகள் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த மிகத் தொன்மையான மொழிகளையும் அதன் பழைய எழுத்து வடிவங்களையும் கூட அவள் நன்கு அறிவாள் என்ற உண்மை புரிய தொடங்கியபோது எனக்கும் என் மனைவிக்கும் பயத்தில் உடல் நடுங்கியது.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேல் இரவு நேரங்களில் துங்காமல் இதுபற்றி இன்டர்நெட்டில் நான் தேடத் தேடப் பல ஆச்சரியங்கள் எனக்குக் காத்திருந்தது. அதுவரை நொந்து அழுத எனது கண்கள் முதல் முறையாக ஆனந்தக் கண்ணீரைக் கண்டது. அவளைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த 'ஆட்டிஸம்' என்ற  மாயபிம்பம் சுக்கு நூறாக உடையத் தொடங்கியது. இதையெல்லாம் அவளுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்? சொல்லிக் கொடுத்தால் கேட்டுப் புரிந்து கொள்ளக் கூடிய குழந்தையா அவள்? அவளிடம் மேற்கொண்டு கூட்டல் கழித்தல் என்று கேட்டுப் பார்த்தால் இரண்டு இலக்கக் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் எல்லாம் பார்த்த மாத்திரத்தில் நேரடியாகவே விடைகளை எழுதுகிறாள். ஆனால் அவளது கையை நாம் பிடித்துக் கொள்ள வேண்டும். தனியாக விட்டு விட்டால் அவள் கிறுக்கத் தொடங்கி விடுவாள் (இந்த சவால் இன்றுவரை எங்களைத் தொடர்கிறது!). இவளுக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்பதைத் தாண்டி சாதாரண மனிதர்களுக்கு அப்பாற்பட்ட ஆற்றல்களைப் பெற்றிருக்கிறாள் என்ற விஷயங்களை உணரத் தொடங்கினோம். எது? நான் முன்பு சொன்னது போல் 'அவள் கையைப் பிடித்தால் நான் என்ன நினைக்கிறேனோ அதை கேட்டு முடிப்பதற்குள்ளேயே அதற்கான விடையை எழுத தொடங்கி விடுவாள் 'என்று குறிப்பிட்டிருந்தேனே? அது தான்! இதுபோன்ற ஆற்றல்களைப் பெற்றவர்களை சவான்ட் (savant )என்று சொல்கிறார்கள்.‌ சவான்ட் என்ற பிரென்ஞ்சு வார்த்தைக்கு "கற்றறிந்தவர்" என்று பொருள். "ஞானி" என்ற பொருளும் பொருந்தும். எனவே சில குழந்தைகளுக்கு ஹைப்பர்லெக்சியா(Hyperlexia)வோடு சவான்ட் சின்ட்ரோம்(Savant syndrome) பிரச்சனையும் சேர்ந்து கொள்கிறது. இனி இவற்றையெல்லாம் பிரச்சனைகள் என்றுதான் சொல்ல வேண்டுமா? என்ன செய்வது ஒரு குழந்தைக்கு ஒன்றுமே தெரியாவிட்டால் அது எவ்வளவு பெரிய பிரச்சனையோ, அதேபோல் அளவுக்கு அதிகமாக எல்லாமே தெரிந்திருந்தால் அதுவும் பிரச்சனை தானே?!

டாக்டர் .டெரால்ட் டிரெஃபர்ட்(Dr.Darold Treffert): சரி, மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று இன்டர்நெட்டை அலசிய போது கிடைத்த பெயர் அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும், மனநல மருத்துவருமான டாக்டர் .டெரால்ட் டிரெஃபர்ட்(Dr.Darold Treffert). இவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஹைப்பர்லெக்சியா(Hyperlexia) மற்றும் சவான்ட் சின்ட்ரோம்(Savant syndrome) பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். 300க்கும் மேற்பட்ட  இப்பிரச்சினைகளைக் கொண்ட நோயாளிகளை சந்தித்து; அவர்களைப் பற்றிய தகவல் களஞ்சியமே வைத்திருக்கிறார். மேலும் "ஆட்டிஸம்" என்ற பிரச்சனையை கண்டறிந்த மருத்துவர் டாக்டர்.லியோ கானரிடம் நேரடியாகப் பயிற்சி பெற்றவர். இது தவிர அமெரிக்க மனநல மருத்துவர் சங்க தலைவராகவும் இருந்திருக்கிறார். இவரது முக்கிய நோயாளியான கிம் பீக்(Kim Peek) என்பவரைப் பற்றி ஹாலிவுட் இயக்குனர் பேரி லெவிசன் பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள்  டஸ்டின் ஹஃப்மேன் மற்றும் டாம் குரூஸை வைத்து அவர் இயக்கிய ரெயின் மேன் (Rain Man) என்ற திரைப்படம் 1988ல் ஆஸ்கர் விருது பெற்றதாகவும் அறிந்தேன். உடனே அந்த மருத்துவரை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு மீனாட்சி பற்றிய முழுக் கதையையும், ஸ்கேன் செய்த ரிப்போர்ட்களுடன் அவருக்கு எழுதி அனுப்பியிருந்தேன். ஓரிரு நாட்களுக்குள் எனக்கு அவரிடமிருந்து மிக விரிவான ஒரு மின்னஞ்சல் வந்தது. மீனாட்சிக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட அந்த மருத்துவர் எனக்கு ஒருசில  முக்கியமான விஷயங்களைக் கூறினார். எடுத்ததுமே "நீ தெரிந்தோ தெரியாமலோ ஒரு விஷயத்தை மிகச்சரியாக செய்திருக்கிறாய்! நான் அனைவரிடமும் சொல்வது என்னவென்றால் நீங்கள் ஒரே நேரத்தில் பேச்சு பயிற்சி(Speech), ஆக்குபேஷனல் தெரப்பி(OT) மற்றும் ஏபிஏ(ABA)என்று மூன்றையும் ஒரே நேரத்தில் கொடுக்கும்படி பரிந்துரைப்பேன்" என்றார் (மேற்கண்ட விஷயங்களை நான் ஒரே நேரத்தில் செய்ததற்காக நம்மூர் தெரப்பிஸ்டிடம் திட்டு வாங்கியது எனக்கு நினைவுக்கு வந்தது!).

                                                     டாக்டர் .டெரால்ட் டிரெஃபர்ட்                                                     (புகைப்படம் அவரது சிறப்பு அனுமதியுடன் உங்களுக்காக!) 

மேலும் "நீ இதுவரை கூறியது மிகவும் குறைவு.  அவள் வளர வளர அவளது மூளையும் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது! இனிமேல் தான் உனக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கிறது.‌ இனி நான் செய்யப்போவது பிரச்சனையை அதன் போக்கிலேயே விட்டு விட்டு கண்காணிக்கப் போகிறேன். என்னென்ன அதிசயங்கள் நடக்கப்போகிறது என்று நீயும் பார்க்கத்தான் போகிறாய்" என்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில் யாருக்கெல்லாம் மூளையின் அமைப்பில் வேறுபாடுகள் இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் மூளையின் செயல்பாடுகளிலும் வேறுபாடு இருக்கும். இதன் காரணம் மூளையில் இருக்கும் நியூரான்களின் கட்டமைப்பு இவர்களுக்கு சிக்கல்கள் நிறைந்ததாக வித்தியாசமான இணைப்புகளை கொண்டதாக இருக்கும். உன் மகளுக்கு தலையிலுள்ள கால்போகஃபாலி (colphocephaly) போன்ற பிரச்சனைகள் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். (அதாவது‌ மீனாட்சிக்கு மூளையில் நீர் (Cerebropinal Fluid) சுரக்கும் உச்சிக் குழி [rear ventricle] இயல்பைவிட அளவில் பெரிதாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது). எனது நோயாளி கிம் பீக்கிற்கு மூளையின் அமைப்பு மிகவும் வித்தியாசமானது. அவரது மூளையின் வலது மற்றும் இடது பகுதிகளை இணைக்கும் பாலமான "கார்ப்பஸ் கொலோசம்" (corpuscollosum) என்ற பகுதி விடுபட்டிருந்தது. அவரது நடவடிக்கைகள் ஆட்டிஸம் போலக் காட்சியளித்தது. உண்மையில் அவருக்கு ஆட்டிஸம் கிடையாது. ஆனால் சில நுட்பமான வேலைகளைச் (fine motor issue) செய்வதில் அவருக்கு இறுதிவரை பிரச்சனை இருந்தது. அதாவது கிம் பீக்கிற்கு  மூளையின் வலது மற்றும் இடது பகுதிகளை சேர்க்கும்  இணைப்பு இல்லாததால் அவருக்கு மூளையே இரண்டு தனித்தனி மூளைகள் போல் இயங்கும் திறனைப் பெற்றிருந்தது. அவரால் ஒரே நேரத்தில் 'சிவாஜி' திரைப்பட ரஜினிபோல் இரண்டு புத்தகங்களை இரண்டு கண்களாலும் தனித்தனியே படித்து, அதிலுள்ள விஷயங்கள்  அனைத்தையும் மொத்தமாக மூளையில் சேர்த்து வைத்துக்கொள்ள முடியும். மேலும் இவரிடம் அமெரிக்காவின் எந்த ஊரின் அஞ்சல் குறியீட்டு எண்ணைச் (Zip Code) சொன்னாலும் ஊரின் பெயரைச் சொல்லிவிடுவார்.


இப்பொழுது எனக்கு தெரிந்த ஹைப்பர் லெக்சியா பிரிவு -1க்கு உதாரணம் பார்க்கலாம் (பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் அதிக அறிவுடன் செயல்படும் சாதாரணக் குழந்தைகள்). நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது சென்னையில் உள்ள மாதர் அரிமா சங்கத்தின் (Lioness Club) சார்பில் நடத்தப்பட்ட ஒரு பேச்சுப்போட்டியில் பங்கெடுத்து கொள்ள நான் சென்றபோது, அங்கே சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டது எங்கள் வீட்டின் எதிர் வீட்டில் முன்பு குடியிருந்தவரின் மகள் காயத்ரி என்ற மூன்றரை வயதுக் குழந்தை. அந்த குழந்தையின் அப்பா என்னிடம் சொன்னார் "அவள் தானாகவே எழுதப்படிக்கக் கற்றிருக்கிறாள். அதுதான் மாதர் அரிமா சங்கத்தின் சார்பில் அவளை கௌரவிக்க இங்கே அழைத்து வந்திருக்கிறோம்" என்றார். அதே நேரத்தில் அந்த குழந்தையைப் பற்றி பிரபல தொலைக்காட்சி சேனலிலும் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டது. அப்பொழுது அக்குழந்தையை ஆய்வு செய்த பிரபல நரம்பியல் நிபுணர் 'அமரர்' திரு.B .ராமமூர்த்தி அவர்கள் அந்தக் குழந்தையின் தலையில் உள்ள கெமிக்கல்களின் அளவுகள் சராசரி மனிதர்களிலிருந்து மாறுபட்டு இருப்பதாகக் கூறியிருந்தார்.

இங்கே நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும்! டாக்டர் டிரெஃபர்ட் சொல்லுகிறார் மூளையின் அமைப்பிலுள்ள வித்தியாசமே (திடப் பொருள்) இதற்கு காரணமென்று. நம்மூர் மருத்துவர் சொல்கிறார் மூளையில் உள்ள கெமிக்கல்கள் தான் (திரவங்களின் அளவே)  காரணமென்று. எது சரி என்று கேட்கிறீர்களா?! சற்று பொறுங்கள்! எனது ஆய்வின் நோக்கமே உண்மைக் காரணத்தை அறிவது தான். 

மேலும் அந்தக் குழந்தையின் தந்தை சில நாட்கள் கழித்து எங்கள் வீட்டிற்கு வந்த போது அவருடைய கொள்ளுத் தாத்தா இதேபோல் பெரிய மேதையாக வாழ்ந்தவர் என்றும் அவர்தான் தனக்கு மகளாகப் பிறந்திருப்பதாக ஒரு‌ஜோசியர் சொன்னதாகச் சொன்னார். மேலும் குழந்தையை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வதை தாம் முற்றாக நிறுத்தி விட்டதாகவும், பெரிய‌ மேடைகளில் அதிக ஒளி உமிழும் விளக்கங்களுக்கு (floodlight) முன்னால் குழந்தையை நிறுத்துவது குழந்தையை பாதிக்கிறது என்பதால் இந்த முடிவெடுத்திருப்பதாகக் கூறினர்.இப்பொழுது காயத்ரி என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று தெரியவில்லை. அவள் தந்தையின் தொடர்பும் எங்களுக்கு இல்லை.

இப்பொழுது மீண்டும் மீனாட்சிக்கே வருவோம்! மீனாட்சியின் கையை பிடித்துக்கொண்டு நான் எனது பெயரைக் கேட்டேன். அவள் எனது பெயரையும் எனது செல்லப் பெயரையும் சேர்த்தே தமிழ் ஆங்கிலமென இரண்டிலும் எழுதிக்  காட்டினாள். இதில் என்ன ஆச்சரியம் என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், 4 வயது குழந்தை அதுவும் தனது பெயரை கூப்பிட்டாலே சரியாகத் தெரியாத குழந்தை எப்படி எனது இரண்டு பெயரையும் அறிந்திருக்க முடியும் அவளுக்கு 'அப்பா' என்று சொன்னால் என்னை சுட்டிக்காட்டத் தெரியுமா? அம்மா என்று சொன்னால் அவளையாவது தெரியுமா? உங்களுக்கு மேலும் காத்திருக்கிறது அதிர்ச்சி! அவளிடம் என்னுடைய அலைபேசி எண் என்னவென்று நான் கேட்க, அவள் எனக்கே எனது எண்ணை எழுதிக் காட்டினாள். அதேபோல் நாங்கள் இருக்கும் தெருவின் பெயர் மற்றும் ஏரியாவின் பெயர் என அனைத்தையும் சிறு பிழை கூட இல்லாமல் இரு மொழிகளிலும் எழுதி காட்டினாள். இது மட்டுமா? எனது பைக் மாடல், அதன் எண், எங்கள் கார், அதன் மாடல், பெயர், கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங்கில் சி++ (C++) கூட தெரிந்து வைத்திருக்கிறாள், இது தவிர அணுவினுள் புரோட்டான், எலக்ட்ரான் தவிர மூன்றாவதாக
என்ன இருக்கும் என்றால், 'நியூட்ரான்'  என்று ஆங்கிலத்தில் எழுதிக் காட்டினாள். பிறகு ராக்கெட் நியூட்டனின் எந்த விதியை அடிப்படையாகக் கொண்டது என்று கேட்டால் "3rd" என்று  எழுதினாள். இது தவிர நாங்கள் கேட்ட வேதியியல் (உதாரணத்திற்கு சல்பியூரிக் ஆசிடின் வேதியல் பெயர் என்றதும் 'H2SO4 ' என்று எழுதினாள்) மற்றும் புவியியல் தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதில்களை‌ எழுதிக்‌ காட்டினாள். டாக்டர் டெரால்ட் டிரெஃபர்ட் கூறியதுபோல் "கேலண்டர் எபிலிட்டி", அதாவது எந்த ஒரு தேதி, மாதம் ஆண்டைக் குறிப்பிட்டாலும் மிகச்சரியாக கிழமையை எழுதுகிறாள். உதாரணத்திற்கு, 'ஆகஸ்ட் 15,1947 அன்று என்ன கிழமை?' என்று கேட்டால் "வெள்ளி" என்று‌ எழுதுவாள்.

அப்பொழுது தான் வெளிநாடு சென்றுவிட்டு வீடு திரும்பிய எனது அண்ணனிடம் நடந்ததை கூறி, 'முடிந்தால் நீயும் சோதித்துப் பார்' என்று கேட்டேன். அவர் எடுத்ததுமே தான் சென்று வந்த நாட்டின் தலைநகரின் பெயரை எழுதும்படி அவளிடம் கேட்டுவிட்டு அவளது விரல்களை பிடித்துக் கொண்டார். அவள் எழுதிய விடை ‘Belgrade’. இது எனது அண்ணன் சென்று வந்த 'செர்பியா' (Serbia) நாட்டின் தலைநகரமாகும். இதில் சற்றே அதிர்ச்சி அடைந்த அவர், மீனாட்சியிடம் கேட்ட அடுத்த கேள்வி "திருப்பதியில் என்ன கிடைக்கும்?" உடனே மீனாட்சி "லட்டு" என்று எழுதிக் காட்டினாள். இதற்கடுத்து அவர் ஹைதராபாத்தில் இருக்கும் தனது நெருங்கிய நண்பனின் பெயர் என்ன என்று கேட்க, இவள் "பான" என்று பதில் எழுதினாள். அவரது பெயர் P. ஆனந்த். சுருக்கமாக "பான" (பானை கிடையாது!) என்றே கூப்பிடுவார்கள். இப்பொழுது எனது அண்ணன் அவளிடம் கேட்ட கேள்வி சற்று சிக்கலானது‌! அதன் விடை அவரைத் தவிர வீட்டில் எங்கள் யாருக்கும் தெரியாது. அவர் கேட்டார் "குட்டி! Universe (பிரபஞ்சம்) பற்றி ஆய்வு மேற்கொள்ளும் ஸ்விட்சர்லாந்து நாட்டில் செயல்படும் அமைப்பின் பெயரென்ன?" அவள் உடனே எழுதிய பதில் 'CERN'. ஒரு நொடி என் அண்ணனுக்கு இருதயம் நின்று திரும்பியது. ஆம்! அது மிகச் சரியான விடையே. அது எப்படி உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் உலகின் மிகப்  பெரிய அறிவியல் சம்பந்தமான ஆராய்ச்சியைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறாள்? இந்த வயதுடைய குழந்தைகள் தனக்கு நாலு சினிமாப் பாட்டு தெரிந்தாலே பெருமை பொங்க 'டிக் டாக்'கில் ஆடிப்பாடி வீடியோ போடும் இந்தக் காலத்தில் எப்படி ஒன்றும் அறியாத  ஊமைப் பெண்போல் இருக்கிறாளே இந்தக் "கல்லுளிமங்கி" என்று நான் இன்றுவரை யோசிப்பதுண்டு. பிறகுதான் தெரிந்து கொண்டேன் இவளுக்கும் பிரபஞ்சத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டென்று (அது என்ன என்பதை பிறகு பார்க்கலாம்!). பிரபஞ்சத்தைப் பற்றியே தெரிந்தவளுக்கு இந்த உலகிற்குள் நடக்கும் விஷயங்கள் தெரியாதா என்ன?!

ஹைப்பர்லெக்சியா சில முக்கியத் தகவல்கள்:
ஹைபர்லெக்சியா பிரிவு-3ஐச்  சேர்ந்த குழந்தைகளுக்கு பிரிவு-2ஐச் சேர்நத குழந்தைகளைப்போல் சிறப்புப் பள்ளிகளில் சேர்க்காமல் சாதாரண குழந்தைகளுடன் கலந்து படிக்கக் கூடிய பள்ளிகளில் (inclusion schools) சேர்த்தால் குழந்தைகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். (நான் மீனாட்சியை சேர்த்திருப்பது கூட இது போன்ற ஒரு பள்ளியில் தான்!).

அதேபோல், ஹைபர்லெக்சியா உள்ள குழந்தைகளுக்கு பயிற்சி மற்றும் கற்பித்தல் என்பது வாழ்வின் ஓர் அங்கமாக (ஏபிஏ முறையும் அதுவே!) இருக்க வேண்டும் என்பதையே டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட் போன்றவர்கள் சொல்கிறார்கள். நம்மூரில் "ஆடுகின்ற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்" என்ற சொல்லுக்கு ஏற்ப "ஓடுகின்ற குழந்தையை உட்காரவைத்து கற்பிக்க முயற்சிக்காதீர்கள்!அதோபோல் உட்கார்ந்து கொண்டிருக்கும் குழந்தையை எழுப்பி ஓடி ஆடி விளையாடும்படியான பயிற்சிகளைக் கொடுக்காதீர்கள்!" என்கிறார்கள். குழந்தையின் மனநிலையை அறிந்து உட்காரும் நேரத்தில் புதிர் போன்ற பயிற்சிகளையும், அதிக ஆற்றலுடன் இருக்கும் நேரத்தில் அந்த ஆற்றலைக் குறைப்பதற்கான உடற்பயிற்சிகளையும் கொடுத்தால் அவர்களை கையாள்வது எளிதாக இருக்குமென்று சொல்கிறார்கள். இதை விடுத்து பயிற்சி என்ற பெயரில் குழந்தைகளிடம் கண்டிப்பு காட்டி வற்புறுத்தி செயல்படுத்த முற்பட்டால், பிறகு அவர்களை ஒத்துழைக்க வைப்பது மிகக் கடினமாகிவிடும்.

  • ஹைப்பர்லெக்சியா  பிரிவுகள் 2 மற்றும் 3ஐச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆக்குபேஷனல் தெரபி (OT ), பேச்சுப் பயிற்சி மற்றும் ஏபிஏ (ABA)ஆகியவற்றை சேர்த்துக் கொடுப்பது அதிகப் பயனளிக்கும். பிரிவு-1ஐச் சேர்ந்த குழந்தைகள் எந்த பிரச்சனையும் இல்லாத குழந்தைகள் என்பதால் நாம் அவர்களை நினைத்துக் கவலைப்படத் தேவையில்லை.

  • பிறவியிலேயே எழுதப்படிக்கத் தெரிந்த குழந்தைகள் என்ற காரணத்தால் ஹைபர்லெக்சியா உள்ள குழந்தைகளை அதிகமாக எழுத ஊக்குவிப்பது நல்லது .

  • பெரும்பாலான ஹைபர்லெக்சியா பிரிவு 2 மற்றும் பிரிவு3- பாதிப்புள்ள குழந்தைகள்  தாமதமாகப் பேசக்கூடிய குழந்தைகளாக இருப்பார்கள். அதேவேளையில் செவித்திறன் குறைபாடு மற்றும் மனநல பாதிப்புள்ள குழந்தைகளும் தாமதமாகப் பேசலாம். எனவே மற்ற பிரச்சனை உள்ள குழந்தைகளோடு ஹைபர்லெக்சியா உள்ள குழந்தைகளை பிரித்துப் பார்ப்பதில் அதிக கவனம் வேண்டும்.

  • ஹைபர்லெக்சியா குழந்தைகள் 5 வயதிற்குள் தங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியுமென்பதை நிச்சயம் வெளிக்காட்டி விடுவார்கள்.

  • அதேபோல் ஹைப்பர்லெக்சியா உள்ள குழந்தைகள்  ஆரம்பகட்டத்தில் 'ஒலி' வடிவத்தில் மொழியைக் கேட்டு மற்றவர்கள் கூறும் கட்டளைகளை பின்பற்ற சற்று சிரமப்படுவார்கள். ஏனென்றால் அவர்களது மூளை ஒலியையும் எழுத்து வடிவமாகவே வாங்கி சிந்திக்கக் கூடியது. அதனால்தான் அவர்களுக்கு முதலில் நன்கு பழகியவர்களின் குரலில் கட்டளைகள் புரியத் தொடங்கும். போகப்போகத்தான் மற்றவர்கள் பேசுவது புரியும். அதேபோல்  நேரடியான கட்டளைகளை (concrete language) மட்டுமே அவர்களால் புரிந்து கொள்ள முடியும். மறைமுகமான கட்டளைகளை புரிந்து கொள்ள சற்று சிரமப்படுவார்கள்.              உதாரணம்: "டிவி ரிமோட்டை எடுத்து வா" என்று சொன்னால் புரிந்து கொள்வார்கள். "டிவி பாக்கணும்னா முதல்ல 'ஆன்' பண்ண வேண்டாமா? போயி எடுத்துட்டு வா"என்று சொன்னால் குழம்பிவிடுவார்கள். ஆரம்பகட்டத்தில் மீனாட்சியை பெயர் சொல்லி அழைத்தாலே திரும்ப மாட்டாள், சுட்டிக் காட்டிய இடத்தை பார்க்க மாட்டாள். மேலும் எளிய வார்த்தைகளுடன் கூடிய கட்டளைகளை பின்பற்றுவதே மிகக் கடினமாக இருந்தது அவளுக்கு. அவர்கள் வளர வளரத் தான் இதுபோன்ற பிரச்சனைகளில் முன்னேற்றம் தெரியும்.

  • அதேபோல் எண்களாலும் எழுத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட ஹைபர்லெக்சியா குழந்தைகள் பொதுவாக மளிகைக் கடைக்கோ அல்லது பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கோ செல்லும்போது, அங்கு அவர்களுக்குப் பிடித்த குறிப்பிட்ட  பிராண்ட் சாக்லேட்டோ அல்லது மற்ற பொருட்களோ அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக்  கண்டால் அவர்களால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது (overstimulation). வினோதமாக குதித்தும், வித்தியாசமான ஒலிகளை எழுப்பியும் சந்தோஷத்தை வெளிப்படுத்துவார்கள். அதிக கூட்டம் நிறைந்த பகுதிகளுக்கு சென்றாலும் இதுவே ஏற்படும்! அதிக ஒலியும் இரைச்சலும் அவர்களது சமநிலையை பாதிக்கும். 

இதில் நான் புரிந்து கொண்ட மிக முக்கியமான விஷயம்:இக்குழந்தைகள் ஒரே நேரத்தில் பல விஷயங்களையும் கவனிக்கக் கூடிய தன்மை கொண்டவர்கள் (multi tasking ability). ஆனால் எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற இடத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். இவர்களுக்கு ஒரே நேரத்தில் குக்கர் கத்துவது, ரோட்டில் கார் செல்வது, பக்கத்து வீட்டில் நாய் குரைப்பது, எதிரில் டிவி ஓடுவது, பக்கத்து ரூமில் அப்பா பேசுவது என அனைத்தையும் சமமாக கவனித்து வருவார்கள்.கவனிக்க வேண்டிய விஷயங்கள் அதிகமாகும்போது நாம் அதை 'இரைச்சல்' என்று விட்டுவிடுவோம். ஆனால் இவர்கள் ஒவ்வொன்றையும் கவனித்து வருவது ஓரளவிற்குமேல் இவர்களைக் குழப்பிவிடுகிறது!

முக்கிய குறிப்பு: "கவனக் கலை" (multi tasking) மிகப் பழமையானது நமது தமிழ்ப் பாரம்பரியத்தில். இதில் சிறந்து விளங்கியவர்களை 'அஷ்டாவதானி '    (8 விஷயங்களை ஒரே நேரத்தில் கவனிப்பவர்), 'தசாவதானி' (10 விஷயங்களை ஒரே நேரத்தில் கவனிப்பவர்) என்பார்கள். இதனை இன்றும் மதுரையைச் சேர்ந்த "கவனகர்" திரு.இராம.கனகசுப்புரத்தினம் பழகுகிறார், கற்பிக்கவும் செய்கிறார். மற்றொருவர் திரு.கலைச் செழியன்.

சில ஹைப்பர்லெக்சியா குழந்தைகளுக்கு எகோலாலியாவும் (echolalia) இருக்கலாம். அதாவது அவர்கள் பார்த்த அல்லது கேட்ட வார்த்தைகளை இரண்டு மூன்று முறை சொல்லிப் பார்ப்பார்கள். இதுவும் ஒரு வகையான கற்றல் முறை தான் என்றும் சொல்பவர்கள் உண்டு. ஆனால் இது பெரும்பாலும் பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. இது அதிகமாக ஆட்டிஸம் மற்றும் ஆடிஸத்துடன் கூடிய ஹைப்பர்லெட்சியா பிரிவு-2ல் காணப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் பிரிவு-3ஐச் (ஆரம்பத்தில் ஆட்டிஸம் போல தோன்றும்) சேர்ந்த குழந்தைகள் தாமதமாகப் பேசத் தொடங்குவதால் இந்த வளர்ச்சி நிலையை பெரும்பாலும் கடந்து சென்று விடுகிறார்கள்.

ஹைப்பர்லெக்டசியா பிரிவு-3ஐ பற்றி டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட் மட்டுமே சொல்லிவருகிறார். அவருடைய ஆய்வின்படி இப்பிரிவைச் சேர்ந்த குழந்தைகள், பின்னாளில் ஹைப்பர்லெக்சியா பிரிவு-1ஐ போல் எந்த பிரச்சனையும் இல்லாத குழந்தைகளாக மாறிவிடுகிறார்கள் என்பதைத்  திட்டவட்டமாகச் சொல்கிறார். ஆனால் ஏபிஏ(ABA)வும், ஓடி(OT)யும்,பேச்சுப் பயிற்சியும் (Speech ) சரியாகக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமென்கிறார். அவர் கண்காணித்து வரும் பல குழந்தைகள் பிரிவு-3ல் இருந்து மீண்டு  வந்திருக்கிறார்கள் .

ஆனால்  மனநல மருத்துவர்கள் பயன்படுத்தும் மனநல பரிசோதனை மற்றும் புள்ளிவிவரக் கையேடான DSM-5ன் படி (Diagnostic and Statistical Manual of Mental Disorders) ஹைப்பர்லெக்சியா சேர்க்கப்பட்டாலும். சவான்ட் சிண்ட்ரோம் (Savant Syndrome) இன்னும் சேர்க்கப்படவில்லை. அதே  நேரம் வழக்கத்தைப் பொருத்தவரையில் பெரும்பாலான மருத்துவர்களும், தெரப்பிஸ்ட்களும் அனைத்துக் குழந்தைகளையும் 'ஆட்டிஸம்' என்ற‌ ஒற்றைக் குடையின் கீழ் தான் வைத்துள்ளார்கள். பெரும்பாலும் சிறப்பாக செயல்படும் குழந்தைகளை 'உயர்திறன் ஆடிஸம்' (High functioning  autism) அல்லது ஆஸ்பர்ஜர் சிண்ட்ரோம் (Asperger Syndrome) என்றும், கற்றல் குறைபாடு, டவுன் சின்ட்ரோம் போன்ற பிரச்சனைகளுடன் ஆடிஸம் உள்ள குழந்தைகளை 'குறை திறன் ஆட்டிஸம்' (Low functioning autism) என்றே குறிப்பிடுகிறார்கள். இவற்றை  மொத்தமாக  'ஆட்டிஸம்' என்று சொல்லாமல்,  தனித் தனிப் பிரச்சனைகளாக அங்கீகரிக்க வேண்டும் என்ற குரல் இன்று உலகமெங்கும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. DSM-6ல் இதற்கான தீர்வு கிடைக்கலாம் என்று நான் பலமாக நம்புகிறேன்! 

ஜெனிடிக் மெமரி மற்றும்  டெலிபதி (நுண்ணறிவு ): எனது அடுத்த மின்னஞ்சலில் மீனாட்சிக்கு எப்படி கற்றுக் கொடுக்காமலேயே எல்லாம் தெரிந்திருக்கிறது என்று டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர் கூறிய காரணம் "ஜெனிடிக் மெமரி" (மரபு வழி அறிவு) தூண்டப்பட்டதன் காரணமாகவே உன் மகள் அனைத்தையும் அறிந்துள்ளாள் என்று கூறினார்(போதிதர்மனின் வழித்தோன்றலின் ஜெனிடிக் மெமரியை தூண்டுவதன் மூலம் அவருக்கு போதிதர்மனின் அறிவும் திறமையும் கிடைக்கும் என்று "ஏழாம் அறிவு" என்று தமிழில் கூட ஒரு திரைப்படம் வந்திருக்கிறதே?!). அவர் மேலும் கூறினார் "உன் மகளுக்கு "டெலிபதி" (நுண்ணறிவு-பிறர் மனதில் நினைப்பதை உணரும் திறமை) தெரியும் என்று சந்தேகிக்கிறேன். இங்கே என்னிடம் சிகிச்சைக்கு வரும் இன்னும் பேச்சு வராத  ஒரு குழந்தையிடம் தெரபிஸ்ட் எந்த கணக்கை கொடுத்தாலும் சரியாக விடை எழுதிவிடுகிறாள். நாங்கள் அவளை 'கணிதமேதை' என்று தான் முதலில் நினைத்தோம்.பிறகு தான் தெரிந்தது அந்தக் குறிப்பிட்ட கணக்கின் விடையை தெரப்பிஸ்ட் முன்கூட்டியே அறிந்து வைத்ததை இந்த குழந்தை அவரின் மனதைப் படிப்பதன் மூலம் எளிதாக தெரிந்து வைத்திருந்திருக்கிறாளென்று.

மேலும் துபாயில் வாழும் கேரளாவைச் சேர்ந்த நந்தனா என்ற சிறுமி இதேபோல் "டெலிபதி" தெரியும் என்றும், அந்தப் பெண்ணின் பெற்றோர் தன்னுடன் மின்னஞ்சல் மூலம் தொடர்பில் இருந்ததாகவும், ஆனால் தற்பொழுது அவள் என்ன செய்கிறாள் என்று தெரிந்து கொள்ள முடியவில்லையென்றும் கூறினார். நான் மேலும் அவளை பற்றி தெரிந்து கொள்ள 'கூகுள்' செய்து பார்க்குமாறு கூறினார்.

(மேலே நான் வழங்கியுள்ள இணைப்பில் நந்தனாவைப் பற்றி  கலீஜ் டைம்ஸில்  வெளியான முழு பேட்டி இடம்பெற்றுள்ளது. நந்தனா எப்படி தனது தாயின் மனதை படிக்கிறாள், இவளுக்காக தாய் சந்தியா ஏபிஏ (ABA )-வில் சிர்டிபிகேட்டும், பெங்களூர் பல்கலைக் கழகத்திலிருந்து சமூக மறுவாழ்வுத்துறை படிப்பில் பட்டயமும் பெற்று  அவளுக்கு நிழல் ஆசிரியையாக (shadow teacher) பள்ளியில் அவளுடன் அமர்ந்து பரிட்சை எழுதுவது, அவளை சோதித்த வல்லுநர் குழுவினர்  வியப்பில் ஆழ்ந்தது என அனைத்துத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன).

நான் கண்ட மற்றொரு  யூடியூப் காணொளி ஒன்றில் பேசிய ஆட்டிஸம் பாதித்த ஒரு சிறுவன் தான் ஏன் பிறரது கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவதில்லை என்பதற்கும் பதிலளித்துள்ளான். அவன் சொல்கிறான் "நான் பிறரைப் பார்த்து அவர்களது கண்களை நோக்கும்போது அவர்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் எனது எண்ணங்களோடு குறிக்கிடுகின்றன. எனவேதான் நான் நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்க்கிறேன்" என்கிறான்.

"ஹைப்பர்லெக்சியா" குழந்தைகளை சரியான முறையில் ஊக்கப்படுத்தி வளர்ப்பதற்கு  டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட் வழங்கியுள்ள பெற்றோருக்கும் , பயிற்சியாளர்களுக்குமான இலவசக்கையேடு! அனைவரும் இங்கிருந்து படித்துப் பயன்பெறுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். 


முக்கிய குறிப்பு:  டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட் (88) அவர்கள் 14/12/2020 அன்று  இயற்கை எய்தினார். உலகெங்கிலும் என் போன்ற பெற்றோர்கள் ஒரு சிறந்த வழிகாட்டியை இழந்து தவிக்கிறோம். அன்னாரது  பிறந்த நாளை  சவான்ட் சின்ட்ரோம் மற்றும்  ஹைப்பர்லெக்சியா விழிப்புணர்வு தினமாக கொண்டாடவேண்டுமென்ற கோரிக்கையை மற்ற பெற்றோரிடமும் டாக்டரின் குடும்பத்தாரிடமும் தெரிவித்துள்ளேன். இதற்கான முயற்சிகளையும் தீவிரப்படுத்த முடிவெடுத்துள்ளேன்.



                                             டாக்டர்.டெரால்ட் டிரெஃபர்ட்டின்  இரங்கல் சிறப்பு இதழில்  எனது பதிவு

8. வெளிப்பட்டது மீனாட்சியின் சுயரூபம்!

இது நடந்த மறுநாள், மீனாட்சி படிக்கும் பள்ளியின் நிர்வாகியை சந்தித்து பெரும்பாலான வகுப்புகளை நிறுத்தி இருப்பதாகச் சொல்லி அதனால் புதிதாக ஏதேனும் பிரச்சனைகள் அவளிடம் தென்படுகிறதா என்று வினவினோம்.அதற்கு அவர் தனக்குத் தெரிந்த ஒரு பயிற்சி மையத்தில் ஆக்குபேஷனல் தெரபி,ஸ்பீச், ஸ்பெஷல் எஜுகேஷன் என அனைத்தும்  தரப்படுவதாகவும், அதை நடத்தும் பெண்மணியை ஒருமுறை சந்தித்து வரும்படியும் சொன்னார். நானும் என் மனைவியும் வழக்கம்போல் எல்லா இடத்திலும் சொல்வதுபோல் அவள் பிறப்பதற்கு முன்னால் தலையிலிருந்த கால்ஃ போகபாலி (colpocephaly) பிரச்சனை, பிறந்த பிறகு பின்னந் தலையில் தோன்றிய hemangioma (ரத்தக் குழல் கட்டி), நாங்கள் சென்று கொண்டிருந்த வகுப்புகள் என ஒவ்வொன்றையும் வரிசை மாறாமல் எடுத்துச் சொன்னோம். அந்தப் பெண்மணி அனைத்து பயிற்சிகளையும் ஒரு குடையின்கீழ் தங்கள் இடத்திலேயே தருவதாகச் சொல்லி எங்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசி அனுப்பி வைத்தார். அந்தப் பெண்மணி நாங்கள் அங்கிருந்து கிளம்பிய சில நிமிடங்களில், மீனாட்சியின் பள்ளி நிர்வாகியை அழைத்து "நீங்கள் அனுப்பி வைத்த அந்தக்குழந்தை மீனாட்சியும் அவளது பெற்றோரும் இப்பொழுது தான் இங்கு வந்து சென்றார்கள். அந்தக் குழந்தைக்கு நீங்கள் நினைப்பதுபோல் "ஆட்டிஸம்"  பிரச்சனை எல்லாம் கிடையாது.அவள் யாரென்று சில நாட்களில் அவளுடைய பெற்றோரே வந்து செல்வார்கள். அதுவரை நீங்கள் பொறுத்திருங்கள்" என்று சொல்லியிருக்கிறார். இதை பள்ளி நிர்வாகி மூலம் தெரிந்து கொண்ட எனது மனைவி ரேவதி அதை என்னிடம் சொல்ல "ஆட்டிஸம் மட்டுமல்ல இன்னும் நிறைய பிரச்சனைகள் சேர்ந்தே இருக்கிறது என்று சொல்லி நம் வயிற்றில் புளியைக் கரைக்க போகிறார். அதுதான் நடக்கப் போகிறது பார்" என்றேன்.

அதேவேளையில் எனது பெற்றோரும் நாடு திரும்பி விட, ஒரு நாள் நானும் எனது தாயாரும் தி.நகர் ரங்கநாதன் தெருவிற்கு சென்றோம். நான்காவது பிறந்தநாளை நெருங்கிக்கொண்டிருக்கும் குழந்தை படிப்பில் என்ன செய்யப்போகிறாளோ என்ற பயத்தில் நான் எனது  பள்ளிப்பருவத்தில் பயன்படுத்திய ஸ்லேட்டையும், குச்சியையும் தேடினேன். வீட்டிற்கு வந்து எனது மனைவியிடம் அதை கொடுத்து "தயவுசெய்து அவளுக்கு அ, ஆ-விலிருந்து ஆரம்பித்தது எழுதப் பழக்கு. நாம் பார்க்கும் நிறைய குழந்தைகளைப் போல் தனியாக எழுத சிரமப்பட போகிறாள்" என்றேன். மீனாட்சி அழைத்துக்கொண்டு எனது மனைவி ஸ்லேட்டுடன் எங்கள் ரூமிற்குச் சென்றாள். வழக்கம்போல் மீனாட்சியின் அழுகையும், அலறலும் கேட்டது. சிறுது நேரம் கழித்து வெளியே வந்த எனது மனைவி ரேவதி, "மீனாட்சி தானே நன்றாக எழுதுகிறாள்" என்றாள். "நீ கையைப் பிடித்தால் நீ எழுதிய எழுத்துக்களின் மேல் எழுதுகிறாளா?" என்று கேட்டேன். ரேவதி சொன்னாள் "இல்லை! அவளே எழுதுகிறாள்"என்று சொன்னாள். எனக்கு அது சரியாக புரியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து நான் அந்த ஸ்லேட்டை வாங்கிக் கொண்டு, மீனாட்சியை என் மடியில் அமர்த்தி அவளின் கையை பிடித்துக்கொண்டு அ, ஆ எழுதச் சொன்னேன். ரேவதி சொன்னதன் அர்த்தம் எனக்கு இப்பொழுது தான் புரிகிறது! நான் கையை பிடித்திருக்கிறேன். ஆனால் எழுதுவது நானல்ல! அது மீனாட்சி தான்! எனக்கு ஒரே குழப்பமாகிவிட்டது. இப்பொழுது அ, ஆ தாண்டி 1 , 2 என்று எண்களைக் கேட்க நான்  கேட்டு முடிக்கும் முன்பே 1,2,3 என்று கிறுக்கலாக எழுதத் தொடங்குகிறாள். எனக்கு குழப்பம் இப்போது அதிகமானது. நாம் தான் எழுதுகிறோமா அல்லது அவள் எழுதுகிறாளா அது எப்படி நாம் கேட்கும் முன்பே பதில் எழுத ஆரம்பிக்கிறாள். எனக்கு உண்மையிலேயே தலைசுற்றியது .எனது லேப்டாப் முன்பு அமர்ந்த நான் கூகுளில் தேட தொடங்கினேன். எனக்குத் தேவையான பதில்கள் ஹைபர்லெக்சியா(Hyperlexia), சவான்ட் சின்ரோம் (savant syndrome) என்ற தலைப்புகளில் கிடைத்தன.

7. இந்தக் குருட்டுப் பிச்சைக்காரனுக்கு பிச்சையிடப்போவது யார்? 

சரி, குழந்தைக்கு என்னதான் பிரச்சனை என்று தெரிந்துகொள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று காட்டினோம். அவர் குழந்தையை முழுமையாக சோதித்து விட்டு குழந்தை இப்படி நினைத்த இடத்திலெல்லாம் சிறுநீர் கழிப்பதற்கு உடல் ரீதியாக எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்தார். அப்படியானால் நாங்கள் பின்பற்றும் பாதையில்தான் எங்கோ பிரச்சனை உள்ளது என்று அறிந்து ஸ்பீச், ஆக்குபேஷனல் தெரபி இரண்டையும் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டோம். ஏபிஏ மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தோம். இம்முறை எனது பெற்றோர் மீண்டும் வெளிநாடு செல்ல, அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை எங்களை வாட்டியது.எனக்கு துவக்கத்திலிருந்தே பெரிதாக கடவுள் நம்பிக்கை கிடையாது. அதே நேரத்தில் கடவுள் இல்லை என்றும் நான் சொன்னது இல்லை.கும்பிட வேண்டுமென்று தோன்றினால் கோவிலுக்குச் செல்வேன். இல்லையென்றால் விட்டு விடுவேன்.

திப்பு மஸ்தான் அவ்லியா தர்கா, ஆற்காடு

இந்த நேரத்தில் சிறுவயதிலிருந்தே மைசூர் மன்னர்கள் ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தானைப் பற்றி ஆராய்ச்சி செய்து வந்த எனக்கு, ஒரு ஆண் வாரிசு வேண்டி அப்போது மைசூரின் தளவாயாக இருந்த ஹைதர் அலியும், அவரது மனைவி ஃபக்ருநிசாவும் ஆற்காட்டில் இருந்த "சூஃபி" ஞானி திப்பு மஸ்தான் அவுலியா (சூஃபி-என்றால் அரபியில் கம்பளி ஆடை அணிந்த துறவி என்று பொருள்.மஸ்தான்- என்றால் "இறைப் பித்தர்‌" என்று பொருள். இது போன்றவர்களை இந்து மதத்தில் "பிரம்ம ஞானிகள்"என்று குறிப்பிடுவார்கள்) தர்காவிற்கு சென்று, தொழுது, அவரது ஆசிர்வாதத்துடன் 1750ஆம் ஆண்டு மகன் பிறந்ததால் அந்தக் குழந்தைக்கு அந்த ஞானியின் நினைவாக 'திப்பு சுல்தான்' என்று பெயரிட்டதாக அறிவேன். இது தவிர ஆற்காடு நவாப் குடும்பத்தாருக்கும் அவர்கள் வேண்டியதை நிறைவேற்றித் தந்திருக்கிறார் என்று படித்திருக்கிறேன். இப்பொழுது அங்கே அந்த தர்கா இன்னும் இருக்கிறதா என்பதை கூகுள் உதவியுடன் தெரிந்துகொண்டு, மீனாட்சியை அழைத்துக்கொண்டு நானும் எனது மனைவி ரேவதியும் காரில் ஆற்காடு நோக்கிப் பயணித்தோம்.

கண்ணிழந்த ஒரு யாசகனுக்கு யார் பிச்சையிட்டார்கள் என்று தெரியுமா? அவன் இருக்கும் நிலைக்கு அவன் தட்டில் விழும் காசு தான் அவனுக்குக் கடவுள். கிட்டத்தட்ட நானும் அதே நிலையில் தான் இருந்தேன். எது உதவும்? யார் உதவுவார்கள்? இந்தப் பிரச்சனைக்கு தீர்வென்ன? எங்கே முடியப் போகிறது? எதுவும் தெரியாது! ராணிப்பேட்டை பாலம் கடந்த உடனேயே இடதுபுறம் ஆற்காடு வந்தது. உள்ளே நுழைந்த சில கிலோமீட்டர்களிலேயே இடம் வந்து சேர்ந்தது. மிக எளிமையாகக் காட்சி அளித்த அந்த தர்காவை திப்பு மஸ்தான் அவ்லியாவின் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இன்னும் நிர்வாகித்து வருகிறார்கள். நான் சென்ற அன்று மதிய நேரம் என்பதால் தர்கா மூடியிருந்தது. இரண்டு கட்டடங்கள் தாண்டி அருகிலேயே அதன் நிர்வாகிகளின் வீடு இருந்ததால் அங்கிருந்த ஒரு இளைஞன் எங்களுக்காக தர்காவை திறந்து, மந்திரம் ஓதி, மயிலிறகால் குழந்தையை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தான். வழக்கம்போல் மீனாட்சி அங்குமிங்கும் ஓடிக் கொண்டும் அழுதுகொண்டும் தனி உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.அந்த இளைஞன் செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் விடுமுறை நாள் என்பதால் சொந்த ஊருக்குத் திரும்பி இருப்பதாகவும் கூறினான்.  அந்த தர்கா அனைத்து மதத்தினரும் வந்து செல்லும் இடமென்று தெரிந்துகொண்டேன். நான் சில நிமிடங்கள் கண்மூடிப் பிரார்த்தனை செய்தேன். பிறகு அங்கிருந்து சென்னை நோக்கிக் கிளம்பினோம்.

Sunday, May 31, 2020

6. ஆக்குபேஷனல் தெரப்பி, ஏபிஏ என்றால் என்ன?

இதே நேரத்தில் சென்னை அடையாரிலுள்ள ஒரு பிரபல குழந்தைகள் நரம்பியல் மருத்துவரின் (CHILD NEUROLOGIST) ஆலோசனையின் பேரில் குழந்தையை ஆக்குபேஷனல் தெரப்பியில் சேர்த்தோம். அவர் எங்களிடம் கூறியது "குழந்தைக்கு ஆட்டிஸம் பிரச்சனை உள்ளது. ஆனால் மிகக் குறைந்த அளவில் என்று தான் சொல்வேன். இவள் பேசுவதற்கு நிச்சயம் நேரம் எடுக்கும். அதே வேளையில் இவள் கணிதம் போன்ற சில பாடங்களில் மற்ற குழந்தைகளை விட சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே நீங்கள்  தாமதிக்காமல் உடனடியாக ஆக்குபேஷனல் தெரப்பியை ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே தெரபியை துவங்கிய ஒரு குழந்தைக்கும் தெரபியை கொடுக்காமல் வளரும் குழந்தைக்கும் நிச்சயம் செயல்பாடுகளில் வித்தியாசம் தெரியும். எனவே மீண்டும் சொல்கிறேன்! தாமதிக்காமல் இப்பொழுதே ஆரம்பியுங்கள்"என்று கூறினார்.

நான் புரிந்து கொண்ட வரையில் 'ஆட்டிஸம்' என்ற பெயருக்கு சரியான பொருள் "மன இறுக்கம்" என்பதே. தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், மனநலம் குன்றியவர்களும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களும் வெவ்வேறு பிரச்சினைகளை உடையவர்கள் என்பதை நாம்  தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது தெரியாமல் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடுவது நாம் அவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும். ஏனென்றால் மனநலம் குன்றியவர்கள் முழுக்க தனது சுயநினைவை இழந்தவர்கள். ஆனால் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர் (ASD) பாதித்தவர்களுக்கு சுயநினைவு உண்டு. ஆனால் அவர்கள் செயல்படும் விதம் வித்தியாசமாகவும், பிறரைக் கண்ணோடு கண் பார்த்துப் பேசுவது, கேட்ட கேள்விக்கு பதில் கூறுவது, சில நுட்பமான  வேலைகளைச் செய்வது போன்ற விஷயங்கள் அவர்களுக்கு மிகக் கடினமானதாக இருக்கும். அப்படியானால் இதை ஏன் நமக்கு மிகவும் பரிச்சயமான "ஸ்பெக்ட்ரம்" (அலைக்கற்றை) என்ற சொல்லோடு சேர்த்து சொல்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? இதோ உங்களுக்கான பதில்! ஆட்டிஸம் உள்ளவர்களை உளவியல் துறையினர் கார்ஸ் சோதனை‌ (CARS TEST) என்ற உலகளாவிய அங்கீகாரம் பெற்ற ஆட்டிஸத்திற்கான சோதனையை மேற்கொள்ளும்போது பிரச்சனைக்கு தகுந்தாற்போல் மதிப்பெண்களை வழங்குவார்கள். அதாவது 30 மற்றும் அதற்குக் கீழே மதிப்பெண் எடுத்தால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று அர்த்தம். 33இல் இருந்து 36 வரை எடுத்தால் அவர்களுக்கு மிதமான ஆட்டிஸம் (mild autism) என்றும், அதற்கு மேல் எடுத்தால் தீவிர ஆட்டிஸம் (severe autism) என்றும் மதிப்பீடு வைத்திருக்கிறார்கள். அதாவது ஒருவர் நான் 'பாஸ்' என்று கூறினால் அவர் 40   மதிப்பெண்கள் முதல் 100 மதிப் பெண்களுக்குள் எவ்வளவு மதிப்பெண் வேண்டுமானாலும் எடுத்திருக்கலாம். இப்படி  குறைந்தபட்சத்தில் தொடங்கி அதிகபட்சமாக இதில் முடியும் என்னும் போது நமது மதிப் பெண் இடைப்பட்ட இடத்தில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாமென்று குறிப்பிடுவதால் தான் இதை  "ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸாடர்" (ASD) என்று சொல்கிறார்கள். நீங்கள் பெறும் மதிப்பெண்ணைப் பொறுத்து உங்களின் நிலை (பிரச்சினையின் அளவு) தீர்மானிக்கப்படுகிறது.

நான் முன்பே கூறியது போல் குழந்தை விளையாடும் முறை, விளையாட்டுப் பொருட்களை கையாள்வது, பிறர் உத்தரவைக் கேட்டு செயல்படுவது, வயதுக்கு ஏற்ற அளவு வார்த்தைகளை பேசுவது, பேர் சொல்லி அழைத்தால் திரும்புவது, கண்ணோடு கண் பார்ப்பது (eye contact) மற்றும் ஒரு விஷயத்தில் நீடித்த கவனம் செலுத்துவது (attention span) போன்றவை சோதிக்கப்படும். இவை தவிர பெற்றோர்கள் பதில் கூறவேண்டிய பகுதியானது மிகவும் விரிவானதாக குழந்தையின் வளர்ச்சி நிலைகளைப் பற்றியும் அதில் ஏதேனும் வேறுபாடு அல்லது தாமதம் இருந்ததா என்பதைப் பற்றியும் இருக்கும். குடும்பத்தில் யாருக்கேனும் இதுபோன்ற பாதிப்பு முன்பே இருந்ததுண்டா மற்றும் நெருங்கிய உறவுக்குள் திருமணம் நடந்து பிறந்த குழந்தையா, கர்ப்ப காலத்தில் குழந்தையின் தாய்க்கு ஏதேனும் உடல் ரீதியான பிரச்சனைகள் இருந்து சக்தி வாய்ந்த மருந்துகளை உட்கொண்டுள்ளாரா, கர்ப்ப காலத்தில் விபத்தேதும் நடந்ததுண்டா மற்றும் சுகப் பிரசவமா இல்லை அறுவை சிகிச்சையா என்பதுவரை அதில் கேட்கப்பட்டிருக்கும்.‌ பெரும்பாலும் சுகப்பிரசவத்தை விட அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைகளுக்குத் தான் இது போன்ற பிரச்சனைகள் வருவதாக வல்லுனர்கள் சொல்கிறார்கள். குழந்தையின் செயல்பாடுகளோடு நாம் (பெற்றோர்கள்) கொடுக்கும் பதில்களைப் பொறுத்தே இறுதியில் மதிப்பெண் வழங்கப்படுகிறது.

தினமும் காலையில் ஆகுபேஷனல் தெரப்பி (இது நான் முன்பு கூறிய இடம்போல் அத்தனை தொலைவு இல்லை. வீட்டிலிருந்து பத்து கிலோமீட்டருக்குள் தான்!) அதன் பின்பு பள்ளி என்று நேரத்தை பிரித்துக் கொண்டோம். .

நான் எனது அனுபவத்தில் தெரிந்து கொண்ட விஷயங்கள்  என்னென்ன? ஆக்குபேஷனல் தெரப்பி (OT) என்பது முதல்  உலகப் போர் நிகழ்ந்த பின்பு போர்க்களத்தில் காயமுற்ற வீரர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கவும், அறுவை சிகிச்சைகளுக்குப் பின்பு கை, கால் போன்ற உறுப்புகள் நுட்பமான வேலைகளை மீண்டும் செய்ய அவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டது. அதே பயிற்சிகளை மீனாட்சியைப் போல் ஓர் இடத்தில் அமைதியாக உட்காராமல் ஓடிக்கொண்டே இருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து ஓரிடத்தில் உட்கார வைத்து, சொல்லும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்க  வைப்பது.

இவை எல்லாம் நடக்க வேண்டும் என்றால் குழந்தை வந்தவுடனேயே முதலில் சில உடற்பயிற்சிகளை கொடுத்து அவளை சோர்வாக்கி பின்பு மேற்கூறிய விஷயங்களை செய்யச் சொல்வது. இவை தவிர குழந்தைகளுக்கு மூளைக்கு வேலை கொடுக்கும் சில பயிற்சிகள். உதாரணத்திற்குப் புதிர்களுடன் கூடிய விளையாட்டுக்கள் (PUZZLES) மற்றும் நேர் கோட்டில் நடக்க வைப்பது, ஊஞ்சல் போன்ற அசையும் விஷயங்களில் உட்கார வைத்துப் பழக்குவது‌‌ (vestibular exercises) என்று தொடரும். அதாவது புவியீர்ப்பு விசை, பாதுகாப்பு, தற்காத்துக் கொள்ளும் திறன், தூண்டுதல், கவனிக்கும் திறன் போன்ற உணர்வுகள் சூழ்நிலைக்கும் மூளையின் செயல்பாட்டுக்கும் தொடர்புடையவை. சூழ்நிலை பற்றிய தகவல் (ஐம்புலன்களின் மூலம் அறியப்பட்டு) மூளைக்கு சரியாக எடுத்துச்செல்லப்படாத பட்சத்தில் அது குழந்தையின் செயல்பாடுகளில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குகிறது .

சில உதாரணங்கள்:
  சாலையில் ஒரு வண்டி அதிவேகமாக ஒலி எழுப்பியபடி வந்தால் நாம் அங்கிருந்து நகர்ந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு, இந்த உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் நமக்கு அடிபட்டு விடும் என்ற உணர்வு, அதிக ஆழம் உள்ள தண்ணீரோ பற்றி எரியும் நெருப்போ நமக்கு ஆபத்தை உண்டாக்கும் என்று புரிந்துகொள்ளும் தன்மை நமக்கு இயல்பிலேயே இல்லாதபட்சத்தில் அது பிரச்சனையே. இவற்றை தூண்டிவிடவே பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன.

குழந்தையைக் கூப்பிட்டால் திரும்ப மாட்டேனென்கிறாள் என்ற காரணத்திற்காக அவளது கேட்கும் திறனை சோதித்தோம். இதற்கு 'பெரா' டெஸ்ட் (BERA Test) என்று சொல்வார்கள். ஆனால் குழந்தை எந்த சோதனைக்கும் ஒத்துழைக்க மாட்டாள் (அவளுக்கு எதையும் சொல்லி விளங்க வைக்க முடியாது) என்ற காரணத்திற்காக ஒரு மயக்க மருந்து சிகிச்சை நிபுணரையும் வைத்துக் கொண்டு குழந்தைக்கு மயக்க ஊசி கொடுத்த பின்பே சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் குழந்தையின் காதுகளில் எந்த பிரச்சனையும் இல்லை நன்றாகவே கேட்கிறது என்று தெரியவந்தது. எனக்குத் தெரிந்து இன்னும் சில குழந்தைகளுக்கு கண்பார்வையில் உள்ள பிரச்சனை, கேட்கும் திறனில் உள்ள பிரச்சனை, ‌ஹெர்னியா (குடலிறக்கம்), மலச்சிக்கல் போன்றவற்றால் அந்த குழந்தைகள் ஆட்டிஸம் பாதித்த குழந்தைகள் போலவே செயல்பட்டு வந்தார்கள்.ஆனால் அவர்களது அடிப்படை பிரச்சனைகள் தீர்ந்த பின்பு அந்தக் குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டார்கள். அப்படி ஒரு அதிசயம் மீனாட்சிக்கும் நடக்காதா என்ற ஆதங்கத்தில் தான் இந்த சோதனையை மேற்கொண்டோம். வேறு எந்தப் பிரச்சனையும் குழந்தைக்கு இல்லை என்று ஒவ்வொன்றாக தெரியவரவே, எங்களது கவனம் "ஆட்டிஸம் தானோ?" என்ற சந்தேகத்துடன் தொடர்ந்தது அதை உறுதிப்படுத்தும் நோக்கில்.

இதற்கிடையே எங்களை ஒரு நாள் அழைத்த அந்தப் பள்ளி நிர்வாகி "சார்! உங்க குழந்தைய பார்த்துக்கற்து கஷ்டம். அவள ஸ்பெஷல் ஸ்கூல்ல  சேர்த்துடுங்க. அதான் நல்லது" என்று கூறினார். (பெரும்பாலும் பள்ளிகளில் தான் குழந்தைக்கு ஆட்டிஸம், ஹைப்பர் ஆக்டிவிட்டி போன்ற பிரச்சனைகள் உள்ளது என்று சொல்லி அனுப்புகிறார்கள். இது இங்கு மட்டுமல்ல உலகம் பூராவும் நடக்கின்ற விஷயம்தான். பிற்பாடு எனக்கு வெளிநாடுகளைச் சேர்ந்த பெற்றோர்களும் இதே புகார் வந்ததாகச் சொல்லி இருக்கிறார்கள்). நான் சொன்னேன் "அவளுக்கு மருத்துவ சோதனைகள் இன்னும் நிறைவடையவில்லை.அவை நிறைவடையும் பட்சத்தில் அவளுக்கு "ஆடிஸம்" பிரச்சனை தான் என்று உறுதியானால்  நான் அதற்கு ஆவன செய்கிறேன். இந்த ஆண்டு அவள் பள்ளியை முடிக்கும்போது ப்ரீ கேஜி படித்ததற்கான சர்டிபிகேட் கொடுங்கள் நான் மேற்கொண்டு பார்த்துக்கொள்கிறேன்" என்றேன். அதற்கு அந்தப் பெண்மணி "சர்டிபிகேட் கொடுத்தா எங்களுக்குப் பிரச்சனை. அதெல்லாம் தர முடியாது சார்" என்று மறுத்துவிட்டார். இதனால் கோபமுற்ற எனது மனைவி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள் "இப்படித்தான் நடந்து கொள்ள போகிறோம் என்று முடிவெடுத்த நீங்கள் எதற்காக உங்கள் பள்ளியில் இடம் கொடுத்தீர்கள்? ஃபீஸும் வாங்கிக் கொண்டீர்கள் அதுவும் முன்கூட்டியே! இது நியாயம் தானா?" என்று கேட்டாள். மேற்கொண்டு அந்தப் பெண்மணியுடன் பேசுவது பிரயோஜனமில்லை என்று புரிந்துகொண்டதுடன் ஒரு முழு ஆண்டு வீணாகிவிட்டதே என்ற வருத்தத்துடன் நாங்கள் வீடு திரும்பினோம் (எனக்கு இதைவிடப் பெருங்கவலை! ஒருவேளை என் மகள் எதிர் காலத்தில் தனது வகுப்புத் தோழன் யாரையேனும் காதலித்தால், அவன் வயதில் இவளைவிட இளையவனாக இருப்பானே என்ற அச்சமே!) என் மனைவி என்னிடம் "முதலில் உங்கள் மகள் ஒரு சராசரிக் குழந்தைபோல் ஒரு பள்ளியில் படிப்பாளா என்பதே கேள்விக் குறியாக உள்ளது.இந்த நேரத்தில் இந்தக் கவலை உங்களுக்கு தேவையா?" என்று நொந்து கொண்டாள்.

 அப்போது அந்தப் பள்ளியில் வேலை செய்த ஆசிரியை அங்கே ஒதுக்கி வைக்கப்பட்ட மீனாட்சி போன்ற குழந்தைகளின்மேல் கொண்ட தனிப்பட்ட அக்கறையினால் தனக்குத் தெரிந்த ஒரு சிறிய பள்ளியில் சேர்க்க உதவினார். அந்தப் பள்ளியை நடத்தி வரும் பெண்மணி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்துடன் சிறப்பு குழந்தைகளை கையாள்வதிலும் அடிப்படைப் பயிற்சி பெற்றவர் என்ற காரணத்தால் அங்கு சேர்த்தோம். எங்களைப் போன்ற கதியற்ற பெற்றோருக்கு இந்த நேரத்தில் இப்படி ஒரு வாய்ப்பு நிச்சயம் மகிழ்ச்சியை தரும் விஷயம்தானே? நான் பெருமைக்காக பெயர் பெற்ற பள்ளியில் என் மகளை சேர்க்க வேண்டும் என்று என்றுமே விரும்பியதில்லை. அது அவசியமும் இல்லை என்றே கருதுவேன். ஆனால் ஒரு சாதாரண பள்ளியில் சேர்த்துப் படிக்க வைப்பதே இத்தனை பிரச்சனையாகுமென்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்தப் பள்ளியில் குழந்தைகள் மிகக் குறைவு. மேலும் இந்த பள்ளியின் நிர்வாகி மற்ற குழந்தைகளின் பெற்றோர்களிடம் "இங்கு சில குழந்தைகளுக்கு உதவி தேவைப்படுகிறது.அதனால் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து ஒரே வகுப்பறையில் தான் படிப்பார்கள்.‌ அப்படி அந்தக் குழந்தைகள் உங்கள் குழந்தையோடு சேர்ந்து படிப்பதில் உங்களுக்கு விருப்பமில்லையென்றால் நீங்கள் உங்கள் குழந்தையை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளலாம்!" என்று சொல்லியுள்ளார். இப்படியும்  பேசக்கூடிய ஆசிரியர்கள் இன்றும் இருக்கத் தான் செய்கிறார்கள்!

இதே நேரத்தில் எனது அண்ணனின் நெருங்கிய நண்பரின் மனைவி (உக்ரேன்  நாட்டுப் பெண்மணி) இங்கே சென்னையில் புதிதாக ஏபிஏ(ABA-Applied Behavior Analysis ) என்ற முறையில் சிறப்புக் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வருவதாகக் கூறி அங்கு மீனாட்சியை அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தினார்.

நான் முன்பு கூறிய ஆக்குபேஷனல்  தெரப்பியிலிருந்து சற்று மாறுபட்டது இந்த முறை. இதில் குழந்தையின் மூளைக்கும் சிந்தித்து செயல்படுவதற்கும் (cognitive development) அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏபிஏ (ABA) ஒரு வாழ்க்கைமுறை என்றே கூறுகிறார்கள். வெளிநாட்டில் ஆட்டிஸத்துடன் வாழும் தனிநபர்கள் பிறரின் துணையின்றி இறுதிவரை வாழ இந்த முறை வழி செய்கிறது. இதில் சைகை மூலம் குழந்தைகள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளப் பயிற்சி அளிக்கிறார்கள்.அதாவது குழந்தை பேச முடியாவிட்டாலும் செய்கையினால் தனது தேவைகளை பெற்றோரிடம் கூறி பூர்த்தி செய்து கொள்வதால் அவர்களுடைய மன அழுத்தம் மற்றும் கோபம் குறையும் என்று சொல்கிறார்கள்.இது தவிர குழந்தைகள் தானாகவே கழிப்பறைக்குச் சென்று வருதல், பூப்படையும் நிலையிலுள்ள பெண் குழந்தைகள் தங்கள் மாதவிடாயின் போது தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுதல் ஆகியவற்றிற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இந்த பயிற்சியை ஒரு சேவையாக கருதி பள்ளி, கல்லூரி மாணவியர் கூட இதுபோன்ற சிறப்புப் பயிற்சி மையங்களுக்குச் சென்று இலவசமாக பயிற்சி வழங்கி வருவதாகச் சொல்கிறார்கள். இந்த முறையில் பயிற்றுவிக்கும் பெரும்பாலானவர்கள் இதற்குரிய கல்வித் தகுதியின்றி அனுபவம் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் செயல்படுகிறார்கள். 

இதேவேளையில் நாங்கள் குழந்தைக்கான பேச்சுப் பயிற்சியை (speech therapy) தொடங்கினோம். ஒரே நேரத்தில் ஆக்குபேஷனல் தெரபி, ஏபிஏ மற்றும் பேச்சுக்கான பயிற்சி என்று மூன்று வகுப்புகளும் மூன்று திசைகளில் இருந்தது. இது தவிர பள்ளி வேறு! 24 மணி நேரம் போதவில்லை எங்களுக்கு. குழந்தையையும் இது நிச்சயம் கஷ்டப்படுத்தியிருக்கும். என் செய்வது? மந்தையில் செல்ல வேண்டிய எங்கள் ஆட்டுக்குட்டி தனித்து தொலைந்துவிடக் கூடாதே என்ற கவலைதான்! இவள் வயதுடைய மற்ற குழந்தைகளைப் பார்க்கும்போது தான் பேசுவதும், கைகளால் சுட்டிக் காட்டுவதும், கூப்பிட்ட குரலுக்கு திரும்புவதும், மழலையுடன் திரைப் பாடல்களை பாடுவதும் உலக அதிசயம் போல் காட்சியளித்தது எங்களுக்கு. மேலும், எங்கள் குடும்பத்தாரின் உதவியின்றி எங்களால் நிச்சயம் இத்தனை தூரம் கடந்து வந்திருக்க முடியாது என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அதிலும் பொருளாதார ரீதியாக எனது அண்ணனும், அப்பாவும் எங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டிய நேரத்தில் செய்துள்ளார்கள் (இன்றும் செய்து கொண்டிருக்கிறார்கள்!).

இந்த நேரத்தில் ஆக்குபேஷனல் தெரபி மையத்தில் நாங்கள் கண்ட ஒரு காட்சி எங்களை சற்று தலைசுற்றச் செய்தது.‌ அங்கு வந்த பன்னிரெண்டு வயது மதிக்க தக்க ஒரு சிறுவன் அங்கே பணிபுரியும் ஒருபெண் ஊழியரிடம் தனது முதுகிலுள்ள பையைக் கழட்டி வைக்க உதவி கோரினான்.‌ அவர் உதவும் அந்த நேரத்தில் சற்றென்று அப்பெண்மணியின் நெஞ்சில் "கிண்"ணென்று ஓங்கிக் குத்திவிட்டு, உடனே தான் பயிற்சி மேற்கொள்ளும் அறைக் கதவை திறக்கிறான் இப்படிக் கூறியபடி "அக்கா...என்னைய அடிக்காதீங்க! எனக்கு பயமா இருக்கு!". நான் மட்டும் அவன் அடிப்பதைப் பார்க்காவிட்டால் தவறு அந்த பெண்மணியின் மேல்தானென்று நினைத்திருப்பேன். அந்தப் பெண்மணி என்னை நோக்கி பதற்றத்துடன் "நானா சார் அவன அடிச்சது?நீங்களே பாத்தீங்கயில்ல?"என்கிறார். பிறரை தனது கண்களால் நேருக்கு நேராக பார்க்க முடியாத மெலிந்த உடல்கொண்ட அந்த சிறுவனைப் பார்த்தால் யாருக்கு தான் பரிதாபம் பிறக்காது? இது அவன் தினமும் விளையாடும் விளையாட்டு போலும். அதி புத்திசாலித்தனத்துடன் கூடிய கொடூர விளையாட்டல்லவா இது? இப்பொழுது புரிந்தது கொண்டோம் தாமதமாக தெரப்பியை தொடங்கினாலோ அல்லது இளம் வயதிலேயே பிரச்சனையை கண்டு கொள்ளாமல் இருந்திருந்தாலோ இப்படி தான் ஆகுமென்று!

அதே நேரத்தில் நாங்கள் சென்று வந்த அந்த ஏபிஏ தெரபிஸ்ட் குழந்தைக்கு வேண்டிய பயிற்சிகளை கொடுத்து வந்தார். ஆனால் அவருக்கு நாங்கள் கொடுக்க வேண்டிய கட்டணம் மற்ற பயிற்சி மையங்களில் கொடுக்கும் கட்டணத்தைவிட மிக அதிகமாகவே இருந்தது. அமெரிக்க வாழ்க்கை முறையை மையமாக வைத்து கொடுக்கப்படும் இந்த பயிற்சி பிறர் உதவியின்றி தனித்து வாழ சிறப்புக் குழந்தைகளுக்கு  கொடுக்கப்படும் வாழ்வியல் பயிற்சியாகும். ஆனால் பயிற்சி கொடுத்த பெண்மணியிடம் சில பிரச்சனைகள் இருந்தது. 'காசு தான் குறி" என்பதை அவர் சற்று வெளிப்படையாக காட்டிக் கொண்டார். உதாரணத்திற்கு குழந்தைகளின் தகவல்களை மென்பொருளில் சேமித்து வைத்திருப்பதாக் கூறி அதற்கு ஆண்டிற்கு 6000 ரூபாய் சந்தா தொகை என்றால் அதை தனித்தனியாக ஒவ்வொரு குழந்தையிடன் பெற்றோரிடமிருந்தும் பெற்றுக்‌கொள்வார். "இதை எளிய முறையில் எக்ஸெலில் (excel sheet) பராமரிக்கலாமே?" என்று நான் கேட்டதுண்டு. அவருக்கு நான் கேள்வி கேட்டால் பிடிக்காது. நான் கேள்வி கேட்பதை "மீட்டிங்" என்ற பெயரில் உட்காரச் சொல்லி ஒன்று முதல் இரண்டு மணி நேரங்களுக்கு  (என்னை பேசவிடாமல்) அவரே பெரும்பாலும் பேசிக்கொண்டு, அதை இரண்டு வகுப்புகளாக கணக்கிட்டு அதற்கான தொகையைக் கழித்துக் கொண்டு விடுவார். இதுபோல் எனக்கு இரண்டு மூன்று முறை நடந்துள்ளது. 

மேலும் புதிதாக வேலைக்குச் சேர்ந்து ஏபிஏ முறையில் பயிற்சி பெற வந்த ஒரு பெண்மணியை  மீனாட்சிக்கு வகுப்பெடுக்க விட்டுவிட்டு, கடைசியில் மீனாட்சி சரியாக ஒத்துழைக்கவில்லை என்று எங்களிடம் புகார் கூறியதுடன், இன்னும் அதிக வகுப்புகள் எடுத்துக் கொண்டால் நல்லதென்று எங்களுக்கு அட்வைஸ் கூறினார். இதை ஏற்காத நான் "இத்துறையில் அனுபவம் வாய்ந்த நீங்கள் வகுப்பு எடுக்க வேண்டுமென்று தான் உங்களிடம் மீனாட்சியை சேர்த்துள்ளோம்.‌ பயிற்சி எடுக்க வந்தவர் மீனாட்சியை கையாளத் தெரியாததால் தான் அவளிடம் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் தங்களுக்கு வழங்கும் அதே தொகையை பயிற்சி பெற வந்தவர்க்கும் கொடுக்கச் சொன்னால் எப்படி நியாயமாகும்?" என்று கேட்டதுண்டு. இதுபோன்ற கேள்விகளுக்கு தான் அவர் நீண்ட நெடிய விளக்கமளிப்பதுடன் என்னிடமிருந்து பணத்தையும் கழித்துக்கொண்டு விடுவார். நாங்கள் விடுப்பு எடுத்து எங்கும் சென்று விடக்கூடாது என்று சொல்வதுண்டு. அதற்கு அந்த அம்மையார் கூறும் காரணம், அப்படி இடைவெளி விட்டுவிட்டால் குழந்தை பழைய நிலைக்குப் பின்னோக்கிச் சென்று விடுவாள். பிறகு அவளை மீண்டும் பழக்கிக் கொண்டுவருவது கடினம் என்று கூறுவார். இதற்கு உண்மையான காரணம், நாங்கள் வகுப்பிற்கு வராதா நாட்களில் அவருக்கு வருவாய் குறைந்துவிடும் என்பதுதான். இதேபோல்  குடும்பத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் "சிறப்புப் பயிற்சி பட்டறை" என்ற பெயரில்  எனது பெற்றோரை அங்கு வரச் சொல்லி தாத்தா, பாட்டி போன்ற சொந்தங்கள் சிறப்புக் குழந்தையிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தனித் தனியாக வகுப்பெடுத்து பணத்தைக் கறந்துவிடுவார். இதை நான் சொல்வதாக இருந்தால் சுருக்கமாகச் சொல்லி விடுவேன்! அதாவது குழந்தையின் பெற்றோர் மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் குழந்தையின் வளர்ச்சிக்கு மிக முக்கியம். பெற்றோர்கள் சில சமயங்களில் கண்டிப்புடன் குழந்தையிடம் நடந்து கொண்டால், தாத்தா பாட்டி போன்ற மற்ற குடும்ப உறுப்பினர்கள் அந்த நேரங்களில் தலையிட்டு பெற்றோர்களைக் கண்டிக்காமல் சற்றே ஒதுங்கி இருத்தல். மேலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு குழந்தைகள் பெற்றோரை விட்டுவிட்டு தாத்தா பாட்டியிடம் வந்து எளிதாக 'தாஜா' செய்து தனக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்வார்கள். எனவே அவர்களும் பயிற்சியின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு ஒருமித்த கருத்தோடு செயல்படுதல் என்பவை தான்.

 உதாரணத்திற்கு: குழந்தை ஃபிரிட்ஜில் உள்ள சாக்லேட்டை கேட்டால், பேசமுடியாத குழந்தைகள் பெற்றோரை கையைப் பிடித்து இழுத்துச் செல்லும் ஃபிரிட்ஜின் அருகில். அப்போது பெற்றோர் "உனக்கு வேண்டியதை கைகளால் சுட்டிக்காட்டு அல்லது வாயால் கேள்"என்று கேட்க வேண்டும். குழந்தை சுட்டி காட்ட மறுப்பதுடன் பேசவும் மறுக்கும். ஒரு கட்டத்தில் வெறுப்பின் உச்சத்திற்கு செல்லும் குழந்தை கத்திக் கூப்பாடு போடுவதுடன் கோபத்தில் பெற்றோரைக் கீறுவது, கையில் சிக்கிய பொருட்களைத் தூக்கி உடைப்பது என்று ஆரம்பிக்கலாம். அந்த நேரத்தில் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் குழந்தை அவர்கள் தனக்கு வேண்டியதை எடுத்துக் கொடுப்பார்கள் என்ற நோக்கத்தில் முகத்தை சற்று பரிதாபமாக வைத்துக்கொண்டு அழுதபடி அவர்களை நோக்கி திரும்பும். இந்த நேரத்தில் அவர்கள் "குழந்தையை ஏன் அழவிடுகிறாய்? அவள் கேட்டதை கொடுக்க வேண்டியதுதானே?" என்று பெற்றோரைக் கடிந்து கொள்ளாமல் அவர்களும் குழந்தையைப் பேச வைக்கவோ அல்லது சுட்டிக்காட்டும்படியோ சொல்ல வேண்டும். பொதுவாக அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் குழந்தையை வற்புறுத்தி எந்த எந்தவிதமான பயிற்சியும் கொடுக்க வேண்டாம் என்றே சொல்கிறார்கள். அப்படி வற்புறுத்துவது அங்கே சட்டத்திற்குப் புறம்பானது. இங்கே "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?" என்ற அடிப்படையில் குழந்தையை கண்டிப்புடன் நடந்து கொண்டாலும் பரவாயில்லை நமது கட்டளைகளை அவள் பின்பற்றியே ஆகவேண்டுமென்று கண்டிப்புடன் பயிற்சியைத் தரும்படி சொல்கிறார்கள் ஆக்குபேஷனல் தெரபி மற்றும் பேச்சுப் பயிற்சி கொடுப்பவர்கள். இதையே ஏபிஏ முறையில் சற்றே வித்தியாசமாக  நம் கட்டளைகளைக் கேட்டு குழந்தை செயல்பட்டால், உடனே "உனக்கு சாக்லேட் தருவேன் அல்லது கன்னத்தில் முத்தம் கொடுப்பேன்" என்று "ஆடுகின்ற மாட்டை ஆடிக் கறக்கும்" (Positive reinforcement) வித்தையை செய்யச் சொல்கிறார்கள்.

இதேவேளையில், இதற்கு நேர் எதிராக செயல்பட்டு வந்தார் மீனாட்சியின் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட். அவர் கையாண்ட விதம் சற்று முரட்டு தனமாக இருந்தது.அதாவது குழந்தையின் ஹைப்பர் ஆக்டிவிட்டியைக் குறைக்க அவளது கை மற்றும் கால்களை படுக்க வைத்த நிலையில் இறுகப் பிடித்துக் கொள்வார் (JOINT CO -CONTRACTION EXERCISE). உதவிக்கு என்னையும் கூப்பிடுவார். குழந்தையின் ஒரு கை மற்றும்  காலை நான் (எனது எடை 100ஐ தொடும்!) அமுக்கிப் பிடித்தபடி இருக்க, மற்றொருபுறம் அவர் பிடித்துக் கொண்டிருப்பார். இது 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடரும். குழந்தை மீனாட்சி வெகு சாதாரணமாக இதற்கிடையே இரண்டு மூன்று முறை எங்களை எட்டித் தள்ளி இருப்பாள். அப்படியானால் 4 வயது கூட நெருங்காத பெண் குழந்தையின் வலிமை எவ்வளவென்று தெரிந்து கொள்ளுங்கள்.  இதே நேரத்தில் அவள் படுத்திருந்த இடத்தில் சிறுநீர் கழித்து அதை துடைக்கின்ற நேரத்தில் தனக்கு ஓய்வு கிடைக்கும் என்ற நோக்கில் எங்களை திசைதிருப்பி விடுவாள். நீங்கள் இந்தக் குழந்தைகளை அவர்களின் வயது, நடந்து கொள்ளும் விதம் ஆகியவற்றை வைத்து குறைத்து எடை போட்டால் நீங்கள் ஏமாற்றப்படுவது உறுதி!

இந்த  சமயங்களில் வீட்டிலிருந்து எடுத்துவந்த டெட்டால் மற்றும் துணியுடன் வரும் எனது மனைவி, இடத்தை சுத்தம் செய்துவிட்டு பயிற்சியைத் தொடர உதவுவாள். இது மற்ற ஆக்குபேஷனல் தெரபிஸ்டுகள் பின்பற்றும் முறையிலிருந்து வெகுவாக மாறுபட்டிருந்தது. பெரும்பாலானவர்கள் இந்தக் கட்டத்தில் குழந்தைகளை ஊஞ்சல் போன்றவற்றில் உட்காரச் சொல்லி பயிற்சியைத் தொடங்குவார்கள் (VESTIBULAR EXERCISES). இந்த நேரத்தில் நாம் சொல்லிக் கொடுப்பதை குழந்தைகள் கேட்டு பதிலளிக்கத் தொடங்கும். நிலையாக உட்கார்ந்திருப்பதை விட இதுபோன்ற நிலையில்லாத ஊஞ்சல் போன்ற இடங்களில் உட்காரும் நேரங்களில் அவர்களால் எளிதில் கவனிக்க முடியும் என்று சொல்வார்கள் இதற்கு "வெஸ்டிபுலார் சீக்கிங்" (vestibular seeking) என்று பெயர். ஆனால் எங்கள் தெரப்பிஸ்டோ இறுதிகட்டமாக தான் இதை செய்யப் போவதாக சொன்னார். அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை அவர் என்னை தனிப்பட்டமுறையில் கடிந்து கொள்ளத் தொடங்கினார். "உங்கள் வீட்டில் என்றாவது குழந்தைக்குத் தொட்டிலோ அல்லது தூளியோ கட்டியிருக்கிறீர்களா? உங்கள மாதிரி படிச்ச பேரன்ட்ஸ் தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம்" என்பார். நானும் கிராமத்தில் வளர்ந்தவன் தான். இங்கே அப்பார்ட்மெண்டில் ஃபேன் மாட்டவே இடம் இல்லாதபோது எங்கே கட்டுவது தூளியை? சொன்னால் கேட்கவா போகிறார்!

இதே சமயத்தில் வேறொரு விஷயத்தையும் கவனித்தேன். என்னிடம் இத்தனை கண்டிப்பாக இருக்கும் அந்த நபர் எனது மனைவியைக் கண்டால் "அந்நியனிலிருந்து ரெமோ வாக" மாறி விடுவார். அந்தக் கரும்பாறைக்குள்ளும் ஈரமுண்டென்று அப்பொழுது தான் தெரிந்துகொண்டேன். என் மனைவியின் ஜாடை அவருடன் படித்த மாணவி யாரையோ நினைவுபடுத்தி இருக்க வேண்டும்! (ஒரு பெண்ணின் மனது ஒரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்பது போல் ஒரு ஆணின் மனது இன்னொரு ஆணுக்குத் தெரியாதா என்ன?). இதுபோன்ற சமயங்களில் அவர் பேசும்போது மறந்தும் என் பக்கம் தலை திரும்பாது. அவர் வாயிலுள்ள பற்களைக் கூட அப்படியே எண்ணிவிடலாம்.என்ன! என்னைக் கடிந்து கொள்வது மட்டும் சற்றுக் குறையும். நான் கூட என் மனைவியிடம் சொன்னது உண்டு "நீ உள்ளே வந்து உட்கார்ந்தால். நான் சிறிது தப்பித்துக்கொள்ளலாம்" என்று.

கிளாஸ் முடிந்து வீட்டிற்கு வந்தால் எனது பெற்றோர் என்னை நிச்சயம்  திட்டுவார்கள் "என்ன இது! ஓடியாடி விளையாடும் குழந்தை ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறாள்? இப்படியா முரட்டுத்தனமாக பயிற்சி கொடுப்பான் அந்த ஆள்?" என்பார்கள். "நமது நோக்கமே அவள் அமைதியாக ஓரிடத்தில் உட்கார வேண்டும் என்பது தானே?"என்று கேட்டால்"ஒரு பயிற்சியும் தேவையில்லை. குழந்தையை அவள் போக்கில் விட்டுவிடு" என்று சொல்வார்கள். அதேவேளையில் கிளாசில் சிறுநீர் கழிக்கும் மீனாட்சி வீட்டிலும் திடீர் திடீரென சிறுநீர் கழிக்கத் தொடங்கினாள். இது நாங்கள் ஏற்கனவே ஏபிஏ பயிற்சி வகுப்பில் கழிப்பறையில் சிறுநீர் கழிக்க கற்றுக் கொடுத்த பயிற்சிக்கு எதிராக அமைந்தது. இந்தப் பிரச்சனை பற்றி அந்த ஆகுபேஷனல் தெரப்பிஸ்டிடம் நான் கேட்க "நீங்க சும்மாவா இருக்கீங்க? ரொம்ப படிச்சிட்டோம் அதிபுத்திசாலினு நெனப்பு. ஒரே நேரத்துல ஏபிஏ, ஓட்டி(OT), ஸ்பீச்னு எல்லாம் சேர்த்து  கொடுக்குறீங்க? குழந்தை குழம்பிப் போகாதா? நம்ம கலாச்சாரப்படி கையால் எடுத்து சாப்பிட பாப்பாவ பழக்கணும். ஏபிஏ-ல சொன்னாங்கன்னு வெள்ளக்கார குழந்தை மாதிரி ஸ்பூன்ல சாப்படப் பழகினா பாப்பாவுக்கு சூடு எது குளிர்ச்சி எதுன்னு எப்படி சார் தெரியும்? என்னயக் கேட்டா எல்லாம் பிரச்சனைக்கும் நீங்க தான் காரணம்னு சொல்லுவேன்" என்றார். இவரிடம் மேற்கொண்ட தொடர்வது சரியாக இருக்காது என்று என் மனைவிக்கு தோன்றவே அவரிடம் சொல்வதை நிறுத்த முடிவெடுத்தோம்.

(இதில் வேறொரு காரணமும் அடங்கியிருக்கிறது! நான் அலுவல் காரணமாக வராத ஒரு நாளில் என் மனைவி மட்டும் மீனாட்சியை அழைத்துக்கொண்டு அவரிடம் சென்றிருக்கிறாள். அன்று மீனாட்சிக்கு வகுப்பெடுப்பதை நிறுத்திவிட்டு என் மனைவியின் கையில் பிற்பாடு ஒரு பிரச்சனை வரும் என்பதை கணித்த அந்த தீர்க்கதரிசி ஆக்குபேஷனல் தெரப்பிஸ்ட் பணியிலிருந்து பிசியோதெரபி ஸ்டாக மாறி அவரே தன்னிச்சையாக என் மனைவியின் கையைப் பிடித்து சில பயிற்சிகளைக் கற்பித்திருக்கிறார். அவரது நோக்கத்தில் ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்த என் மனைவி, அவர் கையை எடுக்கும்படி கண்டிப்பாக சொன்னதுடன் கிளாஸ் போதும் என்று சொல்லி வீட்டுக்கு வந்துவிட்டாள்).

இதே சிறுநீர் கழிக்கும் பிரச்சனை பள்ளியிலும் தொடர்ந்தால் அவர்களால் கவனித்துக் கொள்ள முடியாதே! என்ன செய்யப்போகிறோம் என்று குழம்ப தொடங்கினோம். ஒருவேளை இந்த முரட்டுத்தனமான பயிற்சியால் குழந்தையின் வயிற்றுப் பகுதியில் ஏதேனும் பிரச்சனை உண்டாகி இருக்கிறதோ என்ற ரீதியில் கூட யோசிக்கத் தொடங்கினோம்.

அதேசமயம் ஸ்பீச் கிளாஸில் என் மகளுக்கு வகுப்பு எடுக்க வேண்டியவர் அப்போது கருவுற்றிருந்த காரணத்தால் (அவர் பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் கிளினிகல் சைக்காலஜி பட்டப்படிப்புப் பிரிவில் விரிவுரையாளர். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்பீச் கிளாசில் ஒரு குழந்தை அவரது வயிற்றை எட்டி உதைத்ததால் அவருக்கு வயிற்றில் வளர்ந்த கரு கலைந்துவிட்டது). எனவே இம்முறை மீனாட்சியைக் கையாள தனது மாணவியை அமர்த்தியிருந்தார். அந்த இளம் பெண்ணுக்குத் தண்ணி காட்டத் தொடங்கினாள் மீனாட்சி! (யாருக்கு பயப்பட வேண்டும் யாரை மிரட்ட வேண்டும் போன்ற விஷயங்களில் கைதேர்ந்தவள் தான் எங்கள் மகள்!). அந்தப் பெண் ஆறு மாதங்களாக "அம்மா" என்ற ஒற்றை வார்த்தையைக் கற்பித்து "அம்"வரை சொல்லிவிட்டாள். இன்னும் இரண்டு மாதங்களில் முழுமையாக "மா" சேர்த்து சொல்லிவிடுவாள் என்று எங்களிடம் பெருமிதமாக கூற, இடைப்பட்ட நேரத்தில் அந்தப் பெண்ணுக்கும் தேர்வு நேரமும் வந்து சேர, நாங்கள் ஒரு மாதம் விடுப்பெடுக்க வேண்டியதாயிற்று."எத்தனை விதங்களில் துன்பம் வைத்தாய் இறைவா!"என்று  நொந்து கொண்டேன்.

கருப்பு ஆடு: இந்த சமயத்தில் போரூரில் இருக்கும் ஒரு பிரபல ஹோட்டலின் பின்பக்கம் இருக்கும் (வார இதழ்களில் தன்னைப் பற்றிய தானே சுய விளம்பரம் கொடுத்துக் கொள்வார்!) ஹோமியோபதி மருத்துவர் ஒருவரை என் அப்பா சிபாரிசு‌ செய்ய, அவரைக் காண நானும் என் மனைவியும் மீனாட்சியை அழைத்துச் சென்றோம். அவர் நான் சென்ற நிமிடத்திலிருந்து என்னை பேச அனுமதிக்கவில்லை. மீனாட்சியும் அந்த மருத்துவரைக் கண்ட நிமிடத்திலிருந்து ஓயாமல் அழத் தொடங்கியதுடன், அவரது அறையை விட்டு வெளியேற முற்பட்டாள். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அந்த மருத்துவர், எடுத்ததுமே "நான் சொல்கிறேன்! நீங்கள் "உம்" கொட்டிக் கேட்டால் போதும்.‌ குறுக்கே பேசக்கூடாது! உங்கள் மகள் ஒரு இடத்தில் உட்கார மாட்டாள்- ஹைபர் ஆக்டிவ் குழந்தை. பெயர் சொல்லி அழைத்தால் கூட திரும்ப மாட்டாள். நீங்கள் அவளை சாதாரணப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தால் பிரச்சனைதான். அவளுக்கு எளிதில் பாடங்களைப் புரிய வைக்க முடியாது. அவளுக்கு ஆட்டிஸம் உள்ளது" என்று கூறியதுடன் நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை, ஆனால் அந்த தலைக்கணம் பிடித்த மனிதர் மேலும் தொடர்ந்தார் "இது என்ன பையனா? பொண்ணுதானே! அவள எதையாவது படிக்க வச்சு எவனாவது இளிச்சவாயனாப் பாத்து பின்னாடி கட்டிவைக்கப் போறீங்க. அவ்வளவுதானே? செஞ்சிடலாம்! நான் ஜெர்மனியிலிருந்து 'நானோ செல்'னு (Nano cell) ஒண்ணு கொண்டு வந்திருக்கேன்.‌ அதை ரெண்டு மாசம் குடுத்துட்டு அதுகூட நீங்க  ஆக்குபேஷனல் தெரபியும் கண்டினியூ பண்ணா நிச்சயம் ஆறு மாசத்துல பலன் கொடுக்கும்" என்றார். அவர் பேசிய விதம் எனது ஆத்திரத்தை தூண்டியது. இருந்தாலும் நாங்கள் இருந்த சூழ்நிலை மற்றும் எனது அப்பாவின் சிபாரிசு போன்ற காரணங்களால் அவர் விரும்பியது போலவே அவரை மட்டுமே பேச விட்டு விட்டு 500 ரூபாய் ஃபீசும் கொடுத்து விட்டு நாங்கள் வீடு திரும்பினோம்.

பொதுவாக நோயாளிகளிடம் "உங்களுக்கு என்ன பிரச்சனை?" என்று கேட்டு அதை நாம் கூற, மருத்துவர் கேட்பதில் தான் நமக்கு ஒரு திருப்தி இருக்கும். அதுகூட பரவாயில்லை, ஆனால் ஒரு பெண் குழந்தையைப் பற்றி அவர் சொன்ன விஷயம் அவரது அந்தஸ்து, சார்ந்த தொழில் அனைத்தையும் தாண்டி அவர் வளர்க்கப்பட்ட விதம் மிகவும் தவறானது என்றே  எங்களுக்குத் தோன்றியது. நல்ல பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட ஒரு ஆணின் வாயிலிருந்து இது போன்ற கீழ்த் தரமான வார்த்தைகள் நிச்சயம் வராது. அவரது வீட்டில் இருக்கும் பெண்களின் நிலைமை நிச்சயம் பரிதாபகரமானதே!

வீட்டிற்கு வந்ததும் நடந்ததை எனது பெற்றோரிடம் சொன்னோம். அன்றோடு அவருடன் பேசுவது மற்றும் அவரது மருத்துவ ஆலோசனைகளையும் எனது தகப்பனார் நிறுத்திக்கொண்டார். எனது தந்தையாருக்கு அந்த நேரத்தில் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனை ஆரம்ப கட்டத்தில் இருந்தது. அந்த மருத்துவர் கூறிய "நானோ செல்" பற்றி நான் இன்டர்நெட்டில் பார்த்த பொழுது அது கேன்சர் சம்பந்தமான மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தக்கூடியது என்று தெரிந்து கொண்டேன்.மேலும் நிரூபிக்கப்படாத சோதனை நிலையிலிருக்கும் ஒரு விஷயத்தை குழந்தைக்கு கொடுப்பது மிகவும் ஆபத்தானது என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

இது போன்ற துறைகளில் இருப்பவர்கள் வல்லுநர்களாக இருப்பதுடன் பெற்றோர்களின் மனநிலை மற்றும் தனிப்பட்ட குழந்தைகளின் தேவையறிந்து சிறந்த முறையில் செயல்பட்டு பணம் என்கிற விஷயத்தையும் தாண்டி சேவை நோக்கத்துடன் செயல்படுகின்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இதுபோல் இருக்கும் ஒரு சில "கருப்பு ஆடுகள்" செய்யும் தவறுகளால் நாம் இவர்களின் சிகிச்சை முறைகளையே குறை சொல்வது பெரும் தவறாகிவிடும். எனவே நான் மீண்டும் ஒருமுறை கூறிக் கொள்கிறேன், நடக்கும் தவறுகள் என்று நான் சொல்வதெல்லாம் தனி நபர்கள் செய்யும் தவறே ஒழிய எந்த ஒரு குறிப்பிட்ட பயிற்சி முறையையோ மருத்துவ முறையையோ நான் நிச்சயம் குறை கூற மாட்டேன். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப எந்த முறை வேண்டுமானாலும் உங்கள் குழந்தைக்குப் பயன் அளிக்கலாம். அதே விஷயம் எனக்குப் பலன் தராமல் இருந்திருக்கலாம். எனவே இது ஆளுக்காள் நிச்சயம் மாறக்கூடிய விஷயம். ஆனால் பெற்றோராகிய நமது கடமை தொடர்ந்து ஒவ்வொரு கதவாகத் தட்டி பார்க்க வேண்டியதுதான். நாம் இன்று ஏதாவது ஒன்றைச் செய்யாமல் விட்டுவிட்டு, பின்னாளில் "ஐயகோ! அதை அன்றே செய்திருந்தால் குழந்தை இந்நேரம் நேரம் குணமாகி இருக்குமோ?!” என்ற குற்ற உணர்ச்சியுடன் வருந்தக் கூடாது. ஆனால் கருப்பு ஆடுகளுக்கு பெற்றோர்களின் மனதில் இருக்கும் சந்தேகம், பயம், எதனால் பிரச்சனை என்று தெரிந்து கொள்ள துடிக்கும் தவிப்பு ஆகியவையே பணம் கறக்கக் காரணமாகிறது. 'பிறர் அறியாமையில் இருந்தால் தான் தனக்கு லாபம்' என்று நினைப்பவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். இது அனைத்துத் தொழில்களுக்கும் பொருந்தும்.


5. காரிருள் சூழ்கிறது! 

 எங்கள் வீட்டின் எதிர் வீட்டிலேயே  என் அண்ணன் குடியிருந்தார்.அவர் இந்தியாவின் தலைசிறந்த தனியார் பொறியியல் கல்லூரியில் படித்ததோடு வெளிநாட்டிலும் படித்துவிட்டு கலைத் துறைக்கு வந்தவர்.அவருக்கு மீனாட்சி என்றால் உயிர். இவளுக்கும் பெரியப்பாவை மிகவும் பிடிக்கும். என்னைவிட ஏழு வயது மூத்தவர்.பெரும்பாலும் வீட்டு விஷயங்களிலும் வெட்டிப் பேச்சுக்களிலும் பங்கெடுக்க மாட்டார். அப்படி என்றாவது தலையிட்டுக் கருத்துக் கூறினால் அதை வேத வாக்காக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். அதற்கு மாற்றுக்‌ கருத்து சொல்வது மிகக் கடினம். அவரின்  அறிவுத் திறன் (IQ) 140க்கு குறையாது (சராசரி மனிதனுக்கு 90 முதல் 110 வரை தான்). நான் பொதுவாக அனைவருக்கும் மதிப்பளிப்பேன். என்னைவிட‌ புத்திசாலி என்று உணரும் பட்சத்தில் அதிக கவனத்துடன் மதிப்பளிப்பேன். இந்த சமயத்தில் எனது சகோதரனின் நண்பர் (திரைப்பட ஒளிப்பதிவாளர்) ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்.அவர் என்னிடம் "தம்பி குழந்தைக்கு 'ஆட்டிஸம்' இல்லன்னு கன்ஃபார்ம் பண்ணிட்டீங்களா?" என்று கேட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர் மேற்கொண்டு "இல்லை என்று உறுதி செய்து கொண்டால் நல்லது தானே? என் பிள்ளைக்கும் ஆட்டிஸம் இருக்கு அதான் கேட்டேன். எனக்கு ஆரம்பத்துல என்னன்னு தெரியாமப் போச்சு. தெரிஞ்சிருந்தா முதல்லயே தெரப்பி எல்லாம் கொடுத்திருப்பேன்" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

ஒருநாள் மீனாட்சி என் அண்ணன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபொழுது எனது அண்ணனின் நண்பர்கள் அங்கு வந்திருந்தனர்.அவர்களுள் ஒருவர் பிரபல திரைப்பட இயக்குனர். அவர் என் அண்ணனிடம் "பாப்பாவுக்கு ஆட்டிஸம் இருக்குனு நினைக்கிறேன். நான் சொல்ற இடத்துக்கு தம்பிய கூட்டிட்டு போகச் சொல்லுங்க. இப்பவே பார்த்துட்டா நல்லது தானே?" என்று அவரும் சொல்லிச் சென்றுள்ளார். இவருடைய  மகனுக்கும்  ஆட்டிஸம் பாதிப்பு உண்டாம்!

இவை நடந்த ஓரிரு நாட்களில்  இறுகிய முகத்துடன் வந்த எனது அண்ணன் என்னையும், என் மனைவியையும் அழைத்து "நான் சொல்றத நீங்க கவனமா கேட்கணும்! குழந்தைக்குப் பிரச்சனை இருக்கு. இதைப் பத்தி நெட்ல நெறைய பார்த்தேன். அவளோட நடவடிக்கையைப் பார்த்தா 'ஆட்டிஸம்' மாதிரி தான் தோணுது.அதனால என் ஃபிரண்டு சொன்ன இடத்துக்கு  அவளை கூட்டிட்டு போங்க. என்ன பிரச்சனைனாலும் நாம சேர்ந்து பாத்துப்போம். நீங்க ரெண்டு பேரும் முதல்ல தைரியமா இருக்கணும்" என்று சொல்லவே எனக்கு என்னவென்று முழுமையாகப் புரியாவிட்டாலும் ஏதோ பெரிய பிரச்சனை ஒன்று 'காரிருளாக' சூழ்கிறது என்று மட்டும் புரிந்தது.

மறுநாள் காலை நேரத்தில் பார்த்தால் எதற்குமே கலங்காத எனது அப்பா பேத்தியின் நிலைகண்டு திடீரெனக் கண்ணீர்விட்டழுதது எனக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது. கடும் மனஅழுத்தத்தின் காரணமாக எனக்குத் தலைவலியுடன் ரத்தக் கொதிப்பும், சர்க்கரை அளவும் அதிகரிக்கத் தொடங்கியது. நாங்கள் மிகுந்த மனவருத்தத்தில் இருந்ததை அறிந்த எனது மனைவியின் சகோதரர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார்கள். அதில் அவளது மூத்த சகோதரர் "மாப்ள! நீங்க எதுக்கும் கவலைப்படக்கூடாது. உங்களுக்கு உங்க அண்ணன்  மட்டும் இல்ல நாங்களும் கூட இருக்கோம். நம்ப இந்த சொந்தம் இப்போ வந்தது .நாம அதுக்கு முன்னாடியே ஃபிரெண்டஸ். எதுனாலும் கவலைப் படாதீங்க! அவளுக்கு அமெரிக்காவுக்கு டிரீட்மெண்டுக்குப்  போகணும்னாலும்  நாம போகலாம்" என்று சொன்னது எங்களுக்கு "நாம் தனித்து விடப்படவில்லை" என்ற உணர்வைத் தந்தது.

 அண்ணன் சொன்ன தெரப்பி சென்டருக்கு நானும், என் மனைவியும் மீனாட்சியை கூட்டிச் சென்றோம். அங்கிருந்த தெரபிஸ்டுகள் மீனாட்சியை பலவிதங்களில் சோதித்தார்கள். குறிப்பாக அவள் விளையாடும் விதம்!  முக்கியமாக விளையாட்டுப் பொருட்களை கையாளும் திறனை சோதித்தார்கள். பெரும்பாலும் குழந்தைகள் பொருட்களை நேர்வரிசையில் அமைத்தல் (straight line) அல்லது ஒன்றன் மீது ஒன்றாக வைத்து கோபுரம் போல் எழுப்புவது(stacking). மேலும் கார் போன்ற சக்கரங்களையுடைய பொம்மைகளைக் கொடுத்தால், அவர்கள் அதை முழுமையாகப் பயன்படுத்தி விளையாடுகிறாளா அல்லது அதை தலைகீழாக கவிழ்த்து சக்கரங்களை மட்டும் உருட்டி உருட்டி விளையாடுகிறார்களா போன்ற மேற்படி விஷயங்களுக்கு "ஆம்" என்று பதில் வரும் பட்சத்தில் அது "ஆட்டிசத்தின் அறிகுறிகள்" (signs of autism) என்றே சொல்கிறார்கள். அப்படியானால் 'எல்லா குழந்தைகளுமே இப்படியும் செய்வதுண்டே!' என்று கேட்கிறீர்களா? இது போல் சாதாரண குழந்தைகளும்  செய்யலாம் என்றாலும் எத்தனை முறை  இப்படி விளையாகிறார்கள் என்பதை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்ற விஷயம் எனக்குப் பிறகு தான் புரிந்தது.

 
கோபுரம் போல் எழுப்புவது(stacking)



                                                        நேர்வரிசையில் அமைத்தல் (straight line)  
                                                                                   
இது தவிர அவளது கேட்கும் திறன், பிறர் உத்தரவுகளை  பின்பற்றுகிறாளா என்றெல்லாம் சோதித்துவிட்டு அவர்களுடைய விரிவான ரிப்போர்ட்டை எங்களுக்கு வழங்கினார்கள். அவர்களின் முதல் பரிந்துரை "குழந்தை சப்தங்களை புரிந்துகொண்டு செயல்பட்டு வந்தாலும் தனது பெயரை கூப்பிடும்போது திரும்பவில்லை. இதை சற்று கவனமாக பார்க்க வேண்டும்". அதே நேரத்தில் குழந்தைக்கு பொழுதுபோக்கு போன்ற விஷயங்களுக்கு மொபைல் போனைக் காட்டுவதைத் தவிர்த்து பூங்காக்களுக்கு அழைத்துச் செல்வது, குழந்தையுடன் அதிக நேரம் உரையாடுவது போன்ற விஷயங்களை கடைபிடித்துவரச் சொன்னார்கள். மேலும் இரண்டு வயது கூட பூர்த்தி அடையாத ஒரு குழந்தைக்கு 'ஆட்டிஸம்' போன்ற முத்திரைகளை இப்பொழுதே குத்த வேண்டாம். நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறியதுடன் வாரத்துக்கு இரண்டு நாட்கள் குழந்தையுடன் இங்கு வாருங்கள். இப்பொழுதே தெரப்பி வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் இருவரும் பெற்றோர்கள் எனவே நீங்கள் இந்த குழந்தையை எப்படிக் கையாள வேண்டும் போன்ற அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கற்றுத் தருகிறோம் என்றார்கள். நானும் எனது மனைவியும் அவர்கள் கூறியபடி கர்மசிரத்தையாக வாராவாரம் அங்கு சென்று வந்தோம். ஆனால் எங்கள் வீட்டிலிருந்து அதிக தூரத்தில் இருந்ததால் கோடைகாலத்தில் அங்கு சென்று வருவது எங்களுக்கும் குழந்தைக்கும் அதிக சோர்வை உண்டாக்கியது. மேலும் "சன் ரைஸ் ப்ரோக்ராம் ஃபார் ஆட்டிஸம்" (son rise program for autism) என்ற புத்தகத்தை எங்களிடம் கொடுத்து வார நாட்களில் அதை படித்துவிட்டு வாருங்கள். வார இறுதிநாட்களில் நாம் அதைப் பற்றி பேசுவோம் என்றார்கள். "ஆட்டிஸம்" தான் என்று உறுதியாக சொல்லவில்லை. அப்படி இருக்க, என்ன பிரச்சனை என்று  தெளிவுபடுத்தாத நிலையில் அவர்கள் எங்களுக்கு என்ன கற்பிக்க முயற்சிக்கிறார்கள் என்று தெரியாமல் ஒரே குழப்பமாக இருந்தது. நாங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அங்கு சென்று வருவதை  நிறுத்தி விட்டோம்.

இந்த நேரத்தில் குழந்தை இரண்டரை வயதை எட்டிய சமயத்தில் ப்ளே ஸ்கூலில் (play school) சேர்க்க வேண்டும் என்ற காரணத்தால் எங்கள் வீட்டின் அருகில் உள்ள ஒரு  மழலையர் பள்ளியில் அவளை சேர்த்தோம். அவள் பள்ளியில் சேர்ந்து 2 மாதங்கள் நெருங்கும் சமயத்தில் பள்ளியிலிருந்து  எங்களுக்கு ஒரு புகார் வந்தது. "உங்கள் குழந்தை மற்ற குழந்தைகளைப் போல் இல்லாமல் எப்பொழுதும் அழுது கொண்டே இருக்கிறாள். சாதாரணமாக அழுதால் பரவாயில்லை; அழுதழுது மூர்ச்சையாகி விடுவாளோ என்று எண்ணும்படி செய்கிறாள். எனவே அவளை தயவுசெய்து வேறு பள்ளியில் சேர்த்து விடுங்கள்" என்று சொன்னதோடு இல்லாமல், எங்களிடம் வாங்கிய 6000 ரூபாய் அவளுக்கான ஐடி கார்டு வழங்கியதில் செலவாகி விட்டதாக ஒரு காரணத்தைக் கூறி அந்தப் பெண்மணி நாங்கள் கட்டிய பணத்தை திருப்பித் தர மறுத்துவிட்டார். எங்களுக்கு குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. "சரி அடுத்து என்ன செய்யலாம்?" என்று யோசிக்கத் தொடங்கினோம். அதே நேரத்தில் என் மகளை கவனித்து வந்த குழந்தைகள் நல மருத்துவர் அவள் இன்னும் பேசாமல் இருப்பது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியதோடு அவளின் தலையின் சுற்றளவு அதிகப்படியான அளவை நெருங்கிவிட்டது.எனவே அவளுக்கு ஒரு எம்ஆர்ஐ(MRI) பார்த்துவிட்டு அப்படியே ஒரு கிளினிக்கல் சைக்காலஜிஸ்டை (clinical psychologist) அணுகி அவளுக்கு "ஆட்டிஸம்" டெஸ்ட் எடுக்கும்படி கூறினார்.

இந்த நேரத்தில் நான் முன்பு கூறிய சிங்கப்பூரில் வசிக்கும் எங்களுக்குத் தெரிந்த அந்த டாக்டர் பெண்மணி ஒரு மருத்துவ மாநாட்டில் பங்கேற்பதற்காக எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் நான் மீனாட்சியை பற்றிய சொல்ல, அவர் என்னிடம் ஒரு நல்ல கருத்தை சொன்னார்  "குழந்தைக்கு ஆட்டிஸம் இருக்கா இல்லையா என்று நீங்களே யோசித்துக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு உடனே ஒரு developmental pediatricianஐ (குழந்தைகளுக்கான வளர்ச்சி நிலை சிறப்பு மருத்துவ நிபுணர்) அணுகி அவரது ஆலோசனையைப் பெற்று வரவும்" என்று சொன்னார்.

இந்த சமயத்தில் பிரபல தமிழ்த் தொலைக்காட்சியில் வந்த ஒரு விவாத நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர் சொன்ன ஒரு விஷயம் என்னையும், என் மனைவியையும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கியது. அவர்கள் சொன்னார்கள் "நாங்கள் இறந்து போவதற்குள் எங்கள் குழந்தை முதலில் இறக்க வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை" என்று சொன்னார்கள்.கேட்க அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவர்கள் கூறிய காரணம் மிகவும் நியாயமானதாகத் தோன்றியது . அவர்கள் சொல்கிறார்கள் "நாங்கள் இறந்து விட்டால் எங்கள் குழந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள்?" என்ற இதே கருத்தை அனைத்து பெற்றோரும் தனித்தனியாக சொன்னதுதான் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதையெல்லாம் கேட்டு நான் மனம் நொந்து என் மகள் மீனாட்சியைப் பார்த்தபடி கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தேன்.  அவள் என் மனைவியின் மடியில் படுத்துக்கொண்டு இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். நான் அவளை பார்த்து அழுவதை உணர்ந்த குழந்தை திடீரென என்னை நோக்கிப் பார்த்தாள். சில நொடிகளில் என் மனைவி அவளை தூக்கி எழுந்துகொண்டு என்னை தாண்டி செல்லும்போது குழந்தை "படார்" என என் மீது பாய்ந்த அழுது கொண்டிருந்த எனது  கண்களை துடைத்து என்னைக் கொஞ்சினாள். ஆனால் அவளது கண்கள் கலங்கியிருந்தன. இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. "நாம் கவலைப்பட்டால் அது குழந்தைக்கு நன்கு புரிகிறது" என்று அன்றுதான்  நான் தெரிந்து கொண்டேன்.ஆனால் நாம் மனதில் நினைப்பது ஒவ்வொன்றும் அவளுக்கு  புரியும் என்ற விஷயம் அன்று எனக்கு விளங்கவில்லை. நமக்கு அப்பாற்பட்ட விஷயங்களை புரிந்து கொள்ளும் பக்குவம்  அந்த நேரத்தில் எனக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் எனக்கு தெளிவாகப் புரிந்தது! எனது அழுகைக்குக் காரணம் இயலாமை தான்! அந்த குழந்தைக்கு எப்படி உதவ வேண்டும் என்று புரியாத காரணம் தான் கண்ணீராக வெளிப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், மற்ற  பெற்றோர்களும் என்னைப் போல் கண்கலங்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத் தான்.

 பொதுவாக நாம் செய்ய வேண்டியது "பிரச்சனை என்று ஒரு விஷயம் தெரியும் பட்சத்தில், அதற்கு என்ன தீர்வு என்று பார்க்க வேண்டும். மேலும் அது நமக்கு பிரச்சனை என்று புரியாவிட்டாலும், பிறர் (குறிப்பாக நமது நலம் விரும்பிகள்-எனக்கு என் அண்ணன் சொன்னதுபோல்!) அது பிரச்சனை தான் என்று நம்மிடம் எடுத்துக் கூறினால், அது ஜீரணிக்க முடியாத கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை ஏற்கும் மனப்பக்குவத்தை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.பிரச்சனையை தீர்க்கத் தெரியாமல் தேங்கி நிற்பது காலத்தை வீணடிக்கும் என்பது தான் இங்கே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். உண்மை தான் என்று‌ தெரிந்த பிறகும் இறுதிவரை அந்தப் பிரச்சனையை நாம் அணுகாமலேயே விட்டுவிட்டால் நம்மை நாமே கடைசியில் ஏமாற்றிக் கொள்வோம் என்பதே நிதர்சனமான உண்மை. முடிவில் இழப்பும் நமக்கே!

இந்த நேரத்தில் குழந்தையை சேர்க்க வேறொரு பள்ளியைப் பார்த்தோம். பள்ளியில் சேர்க்கும் போதே குழந்தைக்கு சில பிரச்சினைகள் உள்ளது  என்பதை எழுத்துப்பூர்வமாக கொடுத்தேன். மேலும் குழந்தைக்கு மருத்துவ சோதனைகள் மேற்கொண்டால் அதன் முடிவுகளையும் நிச்சயம் பகிர்ந்து கொள்வதாகவும் நானே தன்னிச்சையாக உறுதியளித்தேன். அவர் "குழந்தைகளை நாங்கள் பல ஆண்டுகளாக கையாண்டு வந்துள்ளோம். நல்ல முறையில் நிச்சயம் பார்த்துக் கொள்வோம்" என்று உறுதி கூறிய பின்பே சேர்த்து வந்தோம்.சேர்த்தது மீண்டும் அதே ப்ளே ஸ்கூல் தான். அந்தப் பள்ளி நிர்வாகி எங்கள் வீட்டின் அருகே இருக்கும் தங்கள் பள்ளியின் மற்றொரு கிளையில் சேர்க்கும்படி சொன்னதோடு அதை நிர்வகித்து வரும் தனது உறவுக்காரப் பெண்மணியையும் கைபேசியில் அழைத்து மீனாட்சியைப் பற்றி சொன்னார். குழந்தையை பள்ளியில் விடும்போதும் மீண்டும் அழைத்து வரும் போதும் அந்த பள்ளியின் நிர்வாகிக்கு உரிய மதிப்பளித்தே நடந்து வந்தோம். ஒரு முறை பள்ளி நிர்வாகம் குழந்தைகளை கிண்டி சிறுவர் பூங்காவிற்கு அழைத்துச் சென்றபோது மீனாட்சியையும் இன்னும் சில குழந்தைகளையும் அழைத்துச் செல்லவில்லை என்ற விஷயம் எங்களுக்கு மற்ற பெற்றோர் மூலம் தெரியவந்தது. அதாவது 50 குழந்தைகளில் 5 குழந்தைகளுக்கு மீனாட்சி போல் பிரச்சனை உள்ளவர்கள் என்று பள்ளி நிர்வாகம் கணித்து அவர்களை மட்டும் கூட்டிச் செல்லவில்லை. இதை மற்ற பெற்றோர்கள் எங்களிடம் புகாராகச் சொன்னபோதுகூட "நியாயம்தானே! இந்தக் குழந்தைகளை சமாளிப்பது அவர்களுக்கும் கஷ்டமாகத் தானே இருக்கும்" என்று நானும் எனது மனைவியும் பேசிக் கொண்டோம். அங்கிருந்த பெற்றோருக்குள் ஒரு பெண்மணி "நமது குழந்தைகளை அவர்கள் மற்ற குழந்தைகளோடு வகுப்பறையில் சேர்க்காமல் தனிமைப்படுத்தி தான் வைத்திருக்கிறார்கள்" என்றார். நாங்கள் அந்தப் பெண்மணி ஏதோ அனுமானத்தில் பேசுகிறார் என்றே நினைத்தோம். ஆனால் பள்ளி முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்பு என்னுடன் பேசிய அந்த பள்ளி நிர்வாகி; தங்களது பள்ளிக்கு கணக்குகளை தணிக்கை(audit) செய்ய வேண்டி உள்ளது. அதன்படி மிச்சமிருக்கும் நான்கு மாதங்களுக்கான மாதாந்திரத் தொகையை மொத்தமாக உடனே கொடுத்து விடும்படி கேட்டார்.  நாங்களும் அவ்வாறே செய்தோம்.

Wednesday, May 20, 2020

4. இந்திய சமுதாயத்தின் சாபக் கேடு!

நமது சமூகத்தில் "பிறர் நலனில் அக்கறை" என்ற பெயரில் அளவுக்கு அதிகமாகவே நம்மையும் அறியாது பிறரின் விஷயங்களில் மூக்கை நுழைத்து விடுகிறோம்.‌ இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னைப் பற்றி சமூகம் என்ன பேசுமோ நாலு பேர் என்ன நினைப்பார்கள் என்று பிறரைத் திருப்திப்படுத்தவே வாழ வேண்டியுள்ளது.

 சில உதாரணங்கள்: வறட்டு கவுரவத்திற்காக காசை வாரியிறைத்து  திருமணங்களுக்கு செலவழிப்பது, பெருமைக்கு வீடு வாங்கிவிட்டு வட்டி கட்ட முடியாது விழிபிதுங்கி நிற்பது, 10வது அல்லது 12வது படிக்கும் மாணவனைக் கண்டால் "ஏன் நீ அந்தப் பள்ளியில் படிக்கவில்லை? என்ன மார்க்? நீ டாக்டரா? இஞ்ஜினியரா?" என்று கேட்டதன் கோளாறு இன்று டாக்சி ஓட்டுபவரிலிருந்து விவசாயம் செய்பவர் வரை (முகநூல் விவசாயிகளையும் சேர்த்தால் எண்ணிக்கை நிச்சயம் பன்மடங்கு கூடும்!) அனைவருக்கும் அடிப்படைக் கல்வியாகிவிட்டது பொறியியல் படிப்பு. திருமணம் ஆகாதவர்களைக் கண்டால் "எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்?" என்று பொது வெளியில் கேட்டுக் குடைவது, திருமணம் ஆனவர்களென்றால் "எப்போது குழந்தை பெற்றுக் கொள்வீர்கள்?" என்று நச்சரிப்பதில் தொடங்கி "குழந்தையிடம் பேசிக் கொண்டேயிருந்தால் இந்நேரம் பேசியிருக்குமே! நாக்கிலும் வாயைச் சுற்றிலும் ஒரு மண்டலம் தேன் தடவிப் பாருங்கள் அதற்குமேல் பேசாவிட்டால்  என் பெயரை மாற்றிக் கொள்கிறேன்" என்று கூறியவர்கள் இன்னும் அதே  பழைய பேருடன் தான் உலா வருகிறார்கள். "ராமன் கோபக்காரன் (சமரசமின்றி மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவதால் எனக்குக் கிடைத்த பட்டம்!) பலர் வாயில் விழுந்தெழுந்ததால் அந்த சாபம் இன்று குழந்தையைப் போட்டுப் பார்த்துவிட்டது". மேற்கூறிய கடைசி விஷயம் என் அப்பாவே என் மனைவியிடம் ஒருநாள் சொன்னதுதான்.‌ என் மகள் எனக்கு "வரமா? சாபமா?" என்பதை இந்தப் பதிவை முழுமையாக வாசித்தவர்கள் இறுதியில் முடிவைச் சொல்லலாம்.

 இதைவிட எங்கள் குடியிருப்பில் இருக்கும் ஒரு பெண்மணி மீனாட்சிக்கு காது கேட்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள கீழே நானும் என் மனைவி ரேவதியும்  குழந்தையுடன் காரில் ஏறும் சமயம் பால்கனியில் துணி காய வைக்கும் பொழுது சில கிளிப்களை கீழே தவறவிட்டார். நான் கூட கிளிப் கீழே விழுந்துவிட்டதே என்று எடுக்கச் செல்ல, என் மனைவி அந்தப் பெண்மணியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு "எடுக்காதீர்கள்!" என்று சைகை செய்ததோடு என்னைக் கிளம்பச் சொன்னாள். "ஆண்களுக்கு காரியம் மட்டுமே புரியும். ஆனால் பெண்களுக்கு காரணமும் சேர்த்தே புரியும்" என்ற காரணத்தால் நான் சில சமயங்களில் மனைவியின் பேச்சையும் கேட்பதுண்டு (மற்ற சமயங்களில் கருத்துக் கேட்பேன்.ஆனால் பெரும்பாலும்  முடிவை நானே எடுப்பேன்). கார் புறப்பட்டதும் நடந்த விஷயத்தை மனைவி என்னிடம் சொல்ல, நான் கடும் கோபமுற்றேன். நான் இப்படியே இன்னும்   எத்தனை பேரிடம் கோபப்பட வேண்டியிருக்கும்? அது முடியுமா?!

Tuesday, May 19, 2020

3. தொடங்கின சில சிக்கல்கள்

குழந்தை பிறந்த சில மணிநேரங்களில் என் மனைவியை குழந்தைக்கு பாலூட்டச் சொன்னார் மருத்துவர். குழந்தையின் பசிக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு பால் சுரக்கத் தொடங்கவில்லை. இதனால் கோபமுற்ற குழந்தை பசியிலும் கோபத்திலும் வீர்.. வீரென அழத் தொடங்கினாள். அங்கிருந்த  செவிலி குழந்தையை சமாதானப் படுத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அவர் என் மனைவியிடம் கூறினார் " எனது இத்தனை ஆண்டுகள் அனுபவத்தில் பிறந்த குழந்தை இத்தனை முரண்டுபிடித்து நான் பார்த்ததேயில்லை. பக்கத்து அறையில் இருந்தவர்கள்கூட இவளது குரல் கேட்டு பார்த்துச் சென்றுள்ளார்கள்" என்றார்.

தாய் முயற்சித்தால் நிச்சயம் பால் சுரக்குமென்று அனுபம் வாய்ந்த பெண்டிர் சொல்லத் தொடங்கினர்."குழந்தை ஒத்துழைக்க மறுக்கிறது. தான் விரும்பிய வேகத்திற்கு குடிக்க முடியவில்லை என்று கோபப்படுகிறது" என்ற என் மனைவியின் கூற்று ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இது விரைவில் என் மனைவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதை நன்கு புரிந்து கொண்ட மருத்துவர் தாய்ப் பாலுக்கு மாற்றாக பால் பவுடரை கொடுக்கும்படி பரிந்துரைத்தார் (சில நாட்களில் பால் பவுடருக்கு பழகிய குழந்தை தாய்ப் பாலை அறவே தவிர்க்கத் தொடங்கிவிட்டது!).மருந்துவமனையிலிருந்து வீடு திரும்பும் பொழுது "மூன்று மாதங்களுக்குப் பிறகு நீங்க சென்னை சென்றதும் குழந்தையின் தலைக்கு ஒரு அல்ட்ரா சோனிக் ஸ்கேன் எடுத்து ரிப்போர்ட் அனுப்புங்கள்" என்று சொல்லிவிட்டு டிஸ்சார்ஜ் செய்தார் மருத்துவர்.நாங்களும் அவ்வாறே செய்தோம். இப்பொழுது குழந்தை பிறப்பதற்கு முன்னால் இருந்த கால்போகஃபாலி(colpocephaly) போன்ற எந்த பிரச்சனையும் அல்ட்ராசோனிக் ஸ்கேனில் தென்படவில்லை.‌ குழந்தை நல்ல அழகுடனும்  துறுதுறுப்புடனும் காணப்பட்டாள்.

‌மூன்று மாதங்களிலிருந்து மற்றவர்களுடன் நன்கு பழகுவது இன்னும் சொல்லப்போனால் கிண்டலும் கேலியும் புரியும் அளவிற்கு புத்திசாலியாகத் தெரிந்தாள். ஒருமுறை எனது அப்பா மீனாட்சிக்கு 4-5 மாதங்கள் இருக்கும்பொழுது "கண்ணன் வருவான் கதை சொல்லுவான்" என்ற பழைய பாடலை "அண்ணன் வருவான் அதை சொல்லுவான்" என்று குழந்தைக் குரலில் பாடிக்காட்ட; அவர் பாடியதில் உள்ள நகைச்சுவையை நன்கு புரிந்துகொண்டதுபோல் கடகடவென சிரித்ததோடு என் அம்மாவை நோக்கி "பாட்டி! தாத்தா எப்படி பாடுகிறார் பார்!" என்று அர்த்தபுஷ்டியுடன் சிரித்தது அனைவருக்கும் வியப்பளித்தது. நான் அவள் போல் குழந்தையாக இருந்தபொழுது "துலாபாரம்" படத்தில் வந்த "பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்" என்ற சோகப் பாடலை எனது அம்மா பாடிக் கேட்கும்போதெல்லாம் விசும்பி விசும்பி அழுவேன் என்று கூறியுள்ளார். என் மகள் அப்பொழுது வந்த குத்துப் பாடல்களுக்கு ஏற்றபடி படுத்த இடத்திலேயே காலல்களை ஆட்டி உற்சாகமாக ரசித்துக் கொண்டிருக்க, நான் ஒருநாள் இந்த பழைய பாடலைப் போட்டுக் காட்ட, அதுவரை உற்சாகமாக இருந்த குழந்தையின் முகம்‌ வாடியதுடன் அவளும் விசும்பத் தொடங்கியது எங்களுக்கு வியப்பாக இருந்தது. எனக்கும் இன்றுவரை எனது தாய் என்னை கருவில் சுமந்த காலத்தில் வெளியான சில திரைப் பாடல்களைக் கேட்டால் அடிவயிற்றைப் பிசைவதுபோல் உணர்வேன்.‌எனது தாய் அந்த நேரத்தில் மனக் கவலையில் இருந்ததால் அவருக்கும் அதே உணர்வு ஏற்பட்டதாகக் கூறுவார். அபிமன்யுவின் கதையை உண்மை என்று  ஆமோதிப்பதுபோல் இன்று இஸ்ரேல் போன்ற நாடுகளில் கற்பமுற்ற பெண்களின் மனதையும் குழந்தையின் மனதையும் சாந்தப்படுத்தும் விதத்தில் மென்மையான மேற்கத்திய இசையைக் கேட்கச் சொல்கிறார்கள். சமீபத்தில் கூட கருவிலிருக்கும் ஒரு குழந்தை இசையைக் கேட்டு கைதட்டி ரசிப்பதுபோன்ற ஸ்கேனில் தெரியும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி நம்மில் பலரும் கண்டிருப்போம்.

என் மகளுக்கு இதைத் தவிர யாராவது சத்தமாகத் தும்மினாலோ, கொட்டாவி விட்டாலோ அல்லது  தொலைபேசியில் கோபமாகக் கத்திப் பேசிக் கொண்டிருந்தாலோ சிரிப்பை அடக்க முடியாது. கடகடவென சிரிக்கத் தொடங்கிவிடுவாள். இதுதவிர நான் அவளை குப்புறப் படுக்க வைத்து "டண்டனக்கட டனக்கனக்கட" என்று வாயால் சத்தம் கொடுக்கத் தொடங்கினால், தன்னை மறந்து கை கால்களை உதறியபடி உற்சாகம் பொங்க ஆடத் தொடங்கிவிடுவாள். இவள் போகும் வேகத்தைப் பார்த்தால் வெகு சீக்கிரம் பேசிவிடுவாளென்று  நாங்கள் பேசிக் கொண்டோம். கிட்டத்தட்ட ஓராண்டை  நெருங்கும் சமயத்தில் மொட்டைமாடியில் விமானம் எங்கே காட்டென்று கேட்டால் அது எவ்வளவு தொலைவில் சிறு புள்ளியாய் இருந்தாலும் அழகாக தனது பிஞ்சு விரல்களால் சுட்டிக் காட்டுவாள் (Pointing). நானும் எனது அண்ணனும் பிறந்தது முதல் எங்கள் தாயார் எங்களிடம் பேசிக் கொண்டே இருந்ததால் நாங்கள் ஒரு வயதை எட்டும்போதே பேசத் தொடங்கிவிட்டோம் என்பார்கள். அப்படி இருக்கும்போது என்மகளும் பேசமாட்டாளா என்ன?

இந்த நேரத்தில் நாங்கள் கவனித்த சில விஷயங்கள்:-

 அ).குழந்தை பவுடர் பால் மட்டுமே சாப்பிட்டு வந்த காலத்தில் மலச்சிக்கல் (constipation) அவ்வப்போது ஏற்படும். திட உணவு சாப்பிடத் தொடங்கியபோது அவளுக்கு செரிமானப் பிரச்சனை இருந்தது. பெரும்பாலும் கக்கி விடுவாள்.

ஆ).மேலும் அவள் பின்னந்தலையில் ஒரு கட்டி இருந்தது. இதை ஆங்கிலத்தில் hemangioma (தோலின் வெளியே தென்படும் "இரத்தக்குழல் கட்டி") என்பார்கள். 

இ).ரோட்டிற்குச் சென்றாலே பயப்படுவாள். ஆட்டோ, பைக், கார் எதுவானாலும் அவள் அச்சம் கொள்வாள். அவளை சமாதானப்படுத்திக் கூட்டிச் செல்வது மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஒவ்வொன்றுக்கும் அவளைப் பழக்குவதற்குள் நாங்கள் நொந்து நூடுல்ஸாகி விடுவோம்.அருகிலிருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் எங்களிடம் சவால்விட்டு  மீனாட்சியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி இறுதியில் தோற்பது வாடிக்கையே.

ஈ).இதுதவிர அவளுக்கு அதிகமாக மொபைலில் திரைப் பாடல்களை என் மனைவி காட்டி வந்துள்ளாள். அந்தக் காலத்துத் தாய்மார்கள் குழந்தைகளுக்கு கதை சொல்லிய காலம் மாறி இன்றைய இளம் தாய்மார்கள் மொபைலைக் காட்டி சமாதானப் படுத்துவது "விதியின் சதி" என்றே கூறவேண்டும்.‌ இன்று ஆறு வயதைத் தொட்ட என் மகள் மீனாட்சிக்கு மொபைல் இல்லாமல் வாழமுடியாது. பெரும்பாலான மருத்துவர்கள் குழந்தைகளுக்கு மொபைலைக் காட்ட வேண்டாம் என்றே சொல்வார்கள்.ஏனென்றால் ஒரு குழந்தை தொடுவது, நுகர்வது இப்படிதான் ஐம்புலன்களின் மூலம் புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர; மொபைல் திரையைப் பார்த்தால் அவர்களால் எதையும் உணர முடியாது என்று சொல்வார்கள். பொதுவாக மொபைலைப் பார்த்து வளரும் குழந்தைகள் பெரும்பாலும் பிறருடன் பேச விரும்புவதில்லை. பேசுவதற்கு தாமதமாகும் என்பதே முக்கிய காரணம். இந்த பாதிப்பு ஒற்றைக் குழந்தையாக வளரும் குழந்தைகளுக்கே அதிகம் ஏற்படுகிறது. 

உ). இதைவிட முக்கியமாக சில 'வளர்ச்சி நிலைகளை' (developmental stages) தொடாமலேயே  மீனாட்சி கடந்து வந்துவிட்டாள் என்றே கூற வேண்டும். குறிப்பாக அவள் உட்கார இயல்பை விட சற்றே தாமதமானது.மேலும் அவள் தரையில் நீஞ்சினாள் ஆனால் தவழவில்லை. நேரடியாக ஒரு வயது மூன்று மாதத்தில் நடக்கத் தொடங்கிவிட்டாள்.

இந்த நேரத்தில் எனது பெற்றோர் 5-6 மாதங்கள் வெளிநாடு சென்றுவிட குழந்தை முழுவதும் எங்கள் பராமரிப்பிற்கு வந்தாள். எனது பெற்றோர் கிளம்பிய நாளிலிருந்து தொடர்ந்து இரண்டு வாரங்கள் அவள் இடைவிடாது அழுது கொண்டே இருந்தாள். தாத்தா பாட்டி இல்லாத இடத்தில்  வெறுமையை உணர்ந்தாளோ?

எங்களால் அவளை சமாதானப்படுத்துவதென்பது மிகக் கடினமாகவே இருந்தது. என் மனைவி சமையலில் கவனம் செலுத்த, நான் எனது தொழில் சார்ந்து லாப் டாப்பில் மூழ்கிவிட, இந்த இடைப்பட்ட நேரத்தில் குழந்தை மீனாட்சி தனக்கென ஒரு உலகத்தையே உருவாக்கிக் கொண்டு ஒரு "பற்றற்ற  நிலையை" எய்தியதை  எங்களால் உணர முடிந்தது (இந்த சமயத்தில் அவளுக்குள் ஒரு பிரளயமே ஏற்பட்டதென்பதை நான் புரிந்துகொள்ள கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் ஆனது!).

"மீனாட்சி" என்று பெயர் சொல்லி அழைத்தால் திரும்ப மாட்டாள். ஆனால் தனக்குப் பிடித்த பாடல்களோ, விளம்பரமோ எங்கு கேட்டாலும் (எவ்வளவு ஒலி குறைவாகக் கேட்டாலும்!) தனது இடத்திலிருந்து புயலாக ஓடிவந்து விடுவாள். பலமுறை வரும் வேகத்தில் அடிபட்டதுண்டு (இவற்றிற்கு முக்கிய காரணம் தரையைப் பார்த்து நடப்பதே கிடையாது. அவள் செல்லும் வழியில் நாம் படுத்திருந்தால் நமக்கு மிதி விழுவது நிச்சயம்).பெரும்பாலும் வலி உணராது வேறு யாருக்கோ அடிபட்டதுபோல் (ரத்தம் வரும், வீக்கம் இருக்கும்) சென்று விடுவாள். தான் வந்த வேலை முடிந்ததும் தனது கடமையைச் செய்ய சென்றுவிடுவாள். அதென்ன கடமை? நாற்காலியோ சோஃபாவோ ஒருமுறையல்ல இருமுறையல்ல ஆயிரம் முறை ஏறி இறங்கிக் கொண்டிருப்பாள். நாம் நிறுத்தச் சொல்வது கேட்காது, பிடித்து நிறுத்திவைத்தாலும் சில நொடிகளில் மீண்டும் தனது வேலையைத் தொடங்கிவிடுவாள். கண்ணோடு கண் பார்ப்பது என்ற விஷயமே அவளுக்கு மறந்துவிட்டது. பிறகெப்படி பிறர் சொல்வதும், கற்பிப்பதும், விளையாட்டுக் காட்டுவதும் புரியும்? தொலைக் காட்சியில் வரும் தனக்குப் பிடித்த திரைப் பாடல்கள் சார்ந்த நிகழ்ச்சிகளை அதுவும் குறிப்பிட்ட சேனலில் மட்டுமே கேட்பாள். சேனலை நாங்கள் மாற்றினால் 'லோகோ'வை வைத்துக் கண்டுபிடித்து விட்டு சேனலை மாற்றச் சொல்லி டி.வியை அடித்தபடி அழுவாள்.சேதாரத்திற்கு பயந்து அவள் சொல்வதை கேட்டு சேனலை மாற்றி விடுவோம்.அதேபோல் அவளுடைய நேரக் கணக்கு (Biological clock) எங்களுக்கு மிகுந்த வியப்பை அளித்தது. தப்பித் தவறி நாங்கள் தொடரோ திரைப்படமோ பார்த்துவிட்டால் (அது அவளுக்கு பிடித்த சேனல் என்றால் மட்டுமே எங்களுக்குப் பார்க்கும் அனுமதியுண்டு!) சரியாக அது முடியும் நேரம் எங்கிருந்தாலும் வந்து கடைசியில் திரையில் ஓடும் பெயர்களை (End Credit) கைகளால் தொட்டுப் பார்ப்பாள். அது முடிந்ததும் தனக்குப் பிடித்த நிகழ்ச்சி என்பதால் ஆ...ஊ...என்ற சத்தத்துடன் துள்ளிக் குதித்து ரசித்தபடி பார்த்துவிட்டு மீண்டும் தனது வேலைக்குச் சென்று விடுவாள்(அதே ஏறி ஏறிக் குதிப்பதுதான்!).

இந்த சமயத்தில் அவள் "அம்மா" என்ற ஒரு வார்த்தையை மட்டுமே அரிதாகச்  சொல்லிவந்துள்ளாள். அதுவும் எங்களின் கடும் பிரயத்தனத்திற்குப் பிறகே. எந்த விளையாட்டையும் கற்றுக் கொள்ளவுமில்லை, யாருடனும்  உரையாடலைத் தொடர்வதில் விருப்பமும் இல்லை. ஒருமுறை அவள் திறந்து தரும்படி ஒரு மூடிய டப்பாவை என்னிடம் நீட்ட, அதை திறப்பது சிரமம் என்பதுபோல் நான் பாவனை செய்ய "முட்டாளே! என்னிடம் நடிக்காதே" என்பதுபோல் கோபமாக என்னைப் பார்த்துவிட்டு டப்பாவைப் பிடுங்கிக் கொண்டு அடுத்தவரிடம் திறந்து கொடுக்கும்படி உதவி கேட்கச் சென்றுவிட்டாள். இவளுக்கு எதுவும் புரியாததுபோல் இருந்தாலும் இவள் வயது குழந்தைகளுக்குக் காட்டும் விளையாட்டுக்கள் இவளுக்கு சிறுபிள்ளைத்தனமாகத் தெரிகிறதோ? ஓரிருமுறை நானும் என் மனைவியும் அவளை லேசாக நக்கலடித்துப் பார்த்ததுண்டு. அவள் கோபமாக எங்களை திரும்பி முறைத்துக் பார்த்ததில் நாங்கள் குலைநடுங்கிப்போனது‌ உண்மையே! "சிவனே" என்று இருப்பவளை சீண்டினால் இதுதான் கதியோ?!

நாங்கள் கவனித்த மேலும் சில குணாதிசயங்கள்:

அ).குழந்தைகள் மற்றும்  சற்றே வித்தியாசமான குரலைக் கொண்ட பெரிவர்களின் சத்ததைக் கேட்டால் மட்டுமே திரும்பிப் பார்த்து சிரிப்பதுண்டு.

ஆ). அவளுக்கு பட்டு உள்ளிட்ட சில துணிவகைகள் அறவே பிடிக்காது. நெற்றியில் பொட்டு வைத்தால் உடனே அழித்துவிடுவாள். எந்தப் பூவைக் கண்டாலும் பயந்து ஓடிவிடுவாள். கோவிலுக்குச் சென்றால் மேற்கண்ட விஷயங்கள் நடப்பது உறுதி. கோவில் வாசலில் பூ விற்கும் பெண்கள் குழந்தைக்கு பிரியமாகப் பூ கொடுப்பதும்; அதை உடனே இவள் பிடுங்கி எறிவதும் குழந்தையின் போக்கு மிகவும் வித்தியாசமாக இருப்பதையும் சுற்றுப்புறம் இவளை பார்க்கும் கண்ணோட்டம் மாறிவருவதையும் அப்பட்டமாக உணரத் தொடங்கினோம். சாமி கும்பிட்ச் சொன்னால் இரண்டு கைகளையும் கூப்புவது, கைகளை தலைக்குமேல் தூக்குவது ஆகியவற்றில் பிரச்சனை மற்றும் நன்றாக சுட்டிக் காட்டத் தெரிந்த குழந்தை தனக்கு பிரிட்ஜில் ஏதாவது வேண்டுமென்றால் சுட்டிக் காட்டாமல் எங்களின் கைகளை முரட்டுத்தனமாகப் பிடித்து பிரிட்ஜின் முன் இழுத்துச் சென்று நிறுத்துவது மற்றும் வேண்டியதை வாயால் கேளென்றால் பேசமுடியாத கோபத்தில் கேட்டவர்களை கடிப்பது பிராண்டுவதென்று ஆரம்பித்தாள். 

இ).அவளின் முதல் பிறந்த நாளில் காது குத்தியதும் எனது அப்பா பரிசளித்த வைரத் தோடை திருகோடு சேர்த்து ஆட்டி ஆட்டி  காது ஓட்டையைப் பெரிதாக்கி அப்படியே எடுத்து கழட்டிக் கொடுத்து விட்டாள். மீண்டும் அணிவிக்க முயன்ற எங்களை (மூன்று பெரியவர்கள்) ஒரே நேரத்தில் எட்டித் தள்ளியபோது அவளின் பலம் எங்களை பயம் கொள்ளச் செய்தது.

ஈ).அவள் தனது எடை போல் இரண்டு அல்லது மூன்று மடங்குள்ள பொருட்களை மிக இலகுவாகத் தூக்கிவிடுவாள்.இதில் பிரச்சனையாக நாங்கள் உணர்ந்தது மென்மையான பொருட்களுக்கு அதிக அழுத்தமும், அதிக அழுத்தத்துடன் பிடிக்க வேண்டியதை அவள் மிக லேசாகவும் பிடித்துவந்ததால் அவள் கைபட்டு பொருட்கள் விழுந்து நொறுங்குவதும் உடைவதும் வாடிக்கையாகிவிட்டது எங்கள் வீட்டில். 

உ).காலை எட்டு மணி வாக்கில் எழும் குழந்தை நடு இரவையும் தாண்டி விழித்துக் கொண்டு வழக்கமான அர்த்தமற்ற விளையாட்டையே மீண்டும் மீண்டும் விளையாடி வந்தது எங்களை கடும் சோர்வடையச் செய்தது. உணவு உட்கொள்ளவும் மிக அதிக நேரத்தை எடுத்துக் கொள்வாள்.அவளைக் கையாள்வதென்பது எங்களின் கைமீறிய விஷயமென்பதை உணரத் தொடங்கினோம். 

ஊ). இதைத் தவிர மீனாட்சியை கவனித்து வந்த குழந்தை நல மருத்துவர் அவளின் தலையின் சுற்றளவு அனுமதிக்கப்பட்ட அளவில் அதிகபட்ச அளவை நெருங்கி வருவதை கவலையுடன் கவனித்துவந்தார். 

எ). இந்த நேரத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய‌ எனது பெற்றோர் குழந்தையின் குணாதிசயம் தலைகீழாக மாறியதைக் கண்டு மனம் நொந்து போனார்கள்.அவர்கள் வாங்கிவந்த 'ஏ ஃபார் ஆப்பிள், பி ஃபார் பால்' என்று படத்துடன் வந்த புத்தகத்தை கோபமாக விசிறி  எறிந்துவிட்டாள்.தாங்கள் வெளிநாடு போகாதிருந்தால் இப்படி ஆகியிருக்காதோ என்று இன்றுவரை எனது அம்மா என்னிடம் கேட்பதுண்டு. பெங்களூரில் எனது மாமியார் தனது பங்கிற்கு குழந்தையின் நன்மைக்காக விரதமிருக்கத் தொடங்கினார்.

ஏ). இதுதவிர பிரபல துணி துவைக்கும் சலவை சோப்பு வில்லைகளை வரிசையாக அடுக்கி வைத்து பார்ப்பது மற்றும் அதன் விளம்பரம் செய்தித்தாளில் வந்தால் அந்தப் பக்கத்தை சோப்புக்கு அருகில் வைத்துப் பார்த்து மகிழ்வாள். வாசனையான பொருட்களை குறிப்பாக தரை துடைக்கும் திரவம், சோப்பு போன்ற பொருட்களை எங்கிருந்தாலும் எடுத்து  முகர்ந்து பார்ப்பாள்.‌ நாம் சற்று கவனிக்காமல் இருந்துவிட்டால் அவற்றை எடுத்து திங்கவும்,குடிக்கவும் கூட முற்படுவாள்.