Showing posts with label 31. நேரத்தைப் பற்றிய உண்மை தெரியுமா உங்களுக்கு?. Show all posts
Showing posts with label 31. நேரத்தைப் பற்றிய உண்மை தெரியுமா உங்களுக்கு?. Show all posts

Thursday, May 19, 2022

31. நேரத்தைப் பற்றிய உண்மை தெரியுமா உங்களுக்கு?

நேரம் என்பது நிலையானது (constant) என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நேரம் என்பது புவியீர்ப்பு விசையைப் பொறுத்தே அமையும் என்கிறார்கள். துல்லியமாக நேரத்தைக் காட்டும் ஒரு அணு கடிகாரம் தரைத் தளத்தில் உள்ள ஒரு வீட்டிலும், மற்றொன்று நூறாவது மாடியில் உள்ள வீட்டிலும் இருந்தால், சில ஆண்டுகள் கழித்துப் பார்க்கையில் மாடியில் இருக்கும் கடிகாரம் கீழ் வீட்டில் இருக்கும் கடிகாரத்தை விட சற்று வேகமாக ஓடிக் கொண்டிருக்குமாம். இதற்கு காரணம் கீழ் வீட்டு கடிகாரம் புவியீர்ப்பு விசையால் அதிகம் இழுக்கப்படுகிறது. ஆனால் 100வது மாடியில் புவியீர்ப்பு விசை சற்றுக் குறைவாக இருப்பதால் அது வேகமாக ஓடிக்கொண்டிருக்கும். 

இதை இப்படி விளக்குகிறேன்! இரட்டையர்களின் ஒருவரான ஸ்காட் கெல்லி என்ற அமெரிக்க விண்வெளி வீரர் பூமிக்கு 300 மைல்கள் வெளியே இருந்த பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் 11 மாதங்கள் பணியாற்றிவிட்டு பூமிக்குத் திரும்பினார். இவர் திரும்பியவுடன்  பூமியில் இருந்த தன்னுடைய சகோதரனை விட 13 மில்லி செகண்டுகள் இளையவராகிவிட்டாராம். இதற்கு முக்கிய காரணம் பூமி சுற்றுவதற்கும் இவர் இருந்த பன்னாட்டு விண்வெளிநிலையம் பூமியை சுற்றிவருவதற்கும் இருந்த ஈர்ப்பு விசையால் ஏற்பட்டக் காலமாறுபாடே! அங்கே அவர்கள் தினமும் கண்டது 16 சூரிய உதயங்கள் மற்றும் அஸ்தமனங்கள். இதற்கு காரணம் இந்த விண்வெளி நிலையம் பூமியை 24 மணி நேரத்தில் 16 முறை சுற்றி வருவதே. அப்படியானால் செவ்வாய் கிரகத்திற்குச் என்றாலோ இல்லை சூரிய குடும்பத்தில் இருந்து இன்னும் அதிகத் தொலைவில் இருக்கும் ஒரு கிரகத்திற்கு சென்று வந்தாலோ நமக்கும் பூமியில் இருப்பவர்களுக்கும் வயதில் இன்னும் அதிக வேறுபாடு ஏற்படும் தானே? 'இன்டர்ஸ்டெல்லார்' ஆங்கிலத் திரைப்படத்தில் விண்வெளிக்கு சென்றுவிட்டு பல ஆண்டுகள் கழித்து வரும் தந்தை மகளைவிட வயதில் இளையவராகி விடுவதாகக் காட்டியிருப்பது உண்மைதானோ? இப்படிப் பார்த்தால் நமது முன்னோர்கள் "நமக்கு நூறு ஆண்டுகள் என்பது வானத்து தேவர்களின் கணக்குப்படி ஒரு நாளுக்கு சமம்"என்று சொன்னது உண்மைதானோ? அப்படியானால் பூமியிலிருந்து நெடுந்தொலைவில் அப்படிப் பட்டவர்கள் வாழ்ந்து கொண்டு பூமியிலிருக்கும் ஒருசிலரிடம் டெலிபதி மூலம் தொடர்பில் இருக்கிறார்களோ? 

CERN  விஞ்ஞானி என்னிடம் கூறியது: மீனாட்சியின் நான்கு வயதில் எனது அண்ணன் அவளிடம்"பிரபஞ்சத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் அமைப்பின் பெயர் என்ன?" என்று கேட்டதற்கு, அவரது கையைப் பிடித்துக் கொண்டு தனது பிஞ்சு விரல்களால் "CERN"என்று குறிப்பிட்டு அவரை வியப்படையச் செய்ததை முதலிலேயே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? ஒரு பொறியியல் பட்டதாரியாக இருந்துகொண்டு "CERN" பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தது என்னுடைய தவறுதான். அதெப்படி 4 வயது குழந்தை தானாகவே தெரிந்திருந்த ஒரு விஷயம் நமக்கு  படித்திருந்தும் தெரியாமல் போய் விட்டதே! என்ற முனைப்பில் இன்று CERNன் ஆராய்ச்சி பற்றி (ஓரளவிற்கு) தெரிந்து கொண்டதோடு நில்லாமல், அங்கே பணிபுரியும் சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு  பெண் விஞ்ஞானியின் நட்பும்  ('ஹைப்பர்லெக்சியா' முகநூல் பக்கத்தின் மூலம்) கிடைக்கப் பெற்றேன். அந்த அம்மையாருக்கும் 'சவான்ட் சிண்ட்ரோம்' பாதிப்பு உள்ளது. அவர் மூலக்கூறு மருத்துவம் (molecular medicine) உட்பட நான்கு துறைகளில் PhD பட்டம் பெற்றவர். தனக்கு தினமும் ஏற்படும் 'குண்டலினி எழுச்சி' போன்ற அனுபவங்களை என்னுடன் மனம்விட்டுப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் என்னிடம் கூறியது"நான் ஒரே சமயத்தில் பல பரிமாணங்களில் வாழ்வதாக உணர்கிறேன். எனக்கான அறிவு என்பது நான் சிந்திக்காமலேயே உயர் பரிமாணங்களிலிருந்து தானாக எனக்குள் தரவிறக்கம் (download) செய்யப்படுகிறது" என்று குறிப்பிட்டார். அவரிடம் நமது பிளாக்கிற்காக ஒரு கட்டுரையை எழுதிக் தரும்படி கேட்டுக் கொண்டுள்ளேன்.அவரின் நேரமின்மையால் இது தாமதப்பட்டுக் கொண்டே செல்கிறது.பிரபஞ்சத்தைப் பற்றிய ரகசியங்களை நான் சொல்வதை விட ஒரு பெரிய விஞ்ஞானி சொன்னால் அதில் நம்பகத்தன்மை அதிகம் இருக்கும் தானே?!

 மேலும் அவர் உயர் பரிமாணங்களில் தான் உண்மை என்று உணர்ந்த விஷயங்கள் கீழ்நிலைப் பரிமாணங்களிலும் அதே உண்மையாகவே காட்சி தருவதாக என்னிடம் குறிப்பிட்டார் (எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில்  "பத்தாவது மாடியிலிருந்து பார்த்தால் நீல நிறத்தில் தெரியும் ஒரு கார் தரைத் தளத்தில் இருந்து பார்த்தாலும் அது நீல நிற காராகத் தான் தெரியும். ஆனால் அதை நாம் நெருங்க நெருங்க அதன் தோற்றத்தில் மாறுபாடுகளை  உணரலாம்" என்ற ரீதியில் நானாக  ஒரு கருத்தை கற்பனை செய்து கொண்டு தெளிவற்ற வகையில் அவர் கூறியதை புரிந்து கொள்கிறேன்!).ஆனால் எப்படி உயர்நிலைப் பரிமாணங்களிலிருந்து கீழ்நிலைப் பரிமாணங்களுக்கு வர முடியுமோ, அதேபோல் கீழ்நிலைப்  பரிமாணங்களிலிருந்தும் உயர்நிலைப் பரிமாணங்களை எட்டமுடியுமென்று உறுதியாக நம்புகிறேன்.