Showing posts with label 30. குண்டலினி சக்தி!. Show all posts
Showing posts with label 30. குண்டலினி சக்தி!. Show all posts

Wednesday, May 18, 2022

30. குண்டலினி சக்தி!

 குண்டலினி சக்தி தூண்டப் படுவதால் ஏற்படும் விளைவுகள்: யோகம் செய்பவர்கள் அனைவருக்கும் குண்டலினி வசப்படுகிறதா? நிச்சயம் இல்லை! செய்யும் தவம் சித்தி அடைவது வெகு சிலருக்குத் தான்! (இதற்கு 'கர்ம வினை'யே காரணம் என்று சொல்கிறார்கள். அதாவது முற்பிறவியில் 'விட்ட குறை தொட்ட குறை' என்று ஆன்மீகத்தைத் தொட்டவர்களையே இப்பிறவியில் ஆன்மீகம் தழுவிக் கொள்கிறது!).  இது ஒரு சிலருக்கு முதுகுத் தண்டின் அடியிலிருந்து உயிர் காற்றான 'தனஞ்ஜெயம்' கிளம்பிவிடும். ஆனால் அது நடுவில் உள்ள சக்கரங்களைத் (Endocrine System)தாண்டும்போது ஏதாவது ஒரு இடத்தோடு நின்றுவிடும். இது சிலருக்கு அந்த நேரத்தில் அச்சத்தையும், தீய சக்திகள் தன்னை விரட்டுவது போன்ற உணர்வையும், மன அழுத்தத்தையும்  கொடுக்கிறது. இதனால் பித்து நிலைகூட ஏற்படலாம் என்கிறார்கள்.

 அதனால்தான் 'முறையாக ஒரு குருவின் துணையின்றி யோகம் பழகக் கூடாது' என்று சொல்கிறார்கள். அப்படி முறையாகச் செய்பவர்களுக்கு உயிர்க் காற்று ஒவ்வொரு சக்கரமாக ஏற ஏற பேரானந்தத்தையும், அதீத கற்பனையையும், படைப்புத்திறனையும் கூடத் தூண்டலாம். இப்படிப் படிப்படியாக ‌முன்னேறி குறிப்பிட்ட நிலையை அடைபவர்களுக்கு குண்டலினி சக்தி உருவாகும் போது அவர்களே தங்களைப் பிரேதமாகப் பார்த்திருக்கிறார்கள். அதாவது அவர்களின் உயிர் உடலை விட்டுப் பிரிந்து தனித்து இயங்கத் துவங்குகிறது. இதே போன்ற உணர்வு மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்புபவர்களுக்கும் (near death experiences) ஏற்படுவதாகச் சொல்கிறார்கள். Netflix OTT தளத்தில் 'Surviving Death' என்ற டாகுமென்டரியில் இதைப் பற்றி மிக விரிவாக விளக்கியுள்ளார்கள்.

எழுத்தாளர் திரு.பாலகுமாரன்:குண்டலினி எழுச்சி பெற்றவர்களுக்கு பார்க்கும் உலகமே புதுப் பரிமாணங்களுடன் தெரிகிறதாம். 'வேந்தர்' தமிழ்த் தொலைக்காட்சியில் இடம்பெற்ற 'மூன்றாவது கண்' என்ற நிகழ்ச்சியில் எழுத்தாளர் திரு.பாலகுமாரன் 2015ல் கொடுத்துள்ள பேட்டியில் 1993ஆம் ஆண்டு தனது குரு திருவண்ணாமலை 'விசிறி சாமியார்' என்றழைக்கப்படும் யோகி ராம்சுரத்குமாரிடம் "இறைவன் எங்கே இருக்கிறான்? எனக்குக் காட்ட முடியுமா?'' என்று இவர் கேட்க, பாலகுமாரனின் முதுகுத் தண்டையும் உடலின் சில பகுதிகளையும் தொட்டு அவரின் குண்டலினியை விழிப்படையச் செய்து அவரை பரவச நிலைக்குக் கொண்டு சென்று இறைவனை காட்டியுள்ளார் யோகி. இதன் முழுக் காணொளியையும் இங்கே பார்க்கலாம். அப்போது தான் கண்ட இவ்வையகம் புதிதாக முற்றிலும் வேறுபட்டதாகத் தெரிந்ததாக சொல்கிறார் பாலகுமாரன். இவர் விளக்குவது உயர்நிலைப் பரிமாணங்களைப் பற்றி என்று புரிந்து கொள்கிறேன். அதாவது சாதாரண மனிதர்களாகிய நாம் காணும் உலகம் நீளம், அகலம், உயரம் என்ற முப்பரிமாணங்களை மட்டுமே கொண்டது. ஆனால் இதே உலகத்தில் குறைந்தது 11 பரிமாணங்களாவது இருக்கலாம் என்று இயற்பியலாளர்களும் விஞ்ஞானிகளும் கூறுகிறார்கள்.இதில்

நான்காவது பரிமாணம் என்பதில் 'நேரப் பிழர்வு' (time slip) ஏற்படுகிறது. அதாவது நீங்கள் பார்க்கின்ற உலகத்தில் எதிர் காலம் கடந்த காலம் நிகழ்காலம் எது வேண்டுமானாலும் தெரியலாம். இறந்தவர்கள் உங்கள் கண்களுக்குத் தெரியலாம்‌. இனி பிறக்கப் போகின்றவர்கள் உங்களுடன் உரையாடலாம். இந்த நான்காவது பரிமாணம் என்பதே ஐந்தாவது பரிமாணத்தின் 'பிம்பம்' தான் என்று சொல்வார்கள். அப்படியானால் மற்ற பரிமாணங்களில் என்னென்ன இருக்கும்? யார் கண்டது? எப்படி விளக்குவது? 

டேனியல் நெமிஸ்:எனக்கு தெரிந்து 'டேனியல் நெமிஸ்' என்ற கொலம்பியா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் மற்ற பரிமாணங்களைப் புகைப்படம் எடுக்க இன்ப்ரா ரெட் மற்றும் புற ஊதா (UV) தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு புதிய புகைப்படக் கருவியை தான் கண்டுபிடித்துள்ளதாகவும், அதனால் எடுக்கப்படும் படங்களை அவ்வப்போது முகநூலிலும் பகிர்ந்து வருகிறார்.

இவருடைய புகைப்படங்களில் மனித உருவத்தை ஒத்த உருவங்கள்(humanoid creatures)  பதிவாகின்றன.சில நேரங்களில் இடுகாடு இருக்கும் பகுதிகளில் இதுபோன்ற விசித்திரமான உருவங்கள் மிக அதிகமாகப் பதிவாவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவரது கண்டுபிடிப்பின் நம்பகத்தன்மைப் பற்றி எனக்குத் தெரியாவிட்டாலும், பிரிட்டிஷ் விண்வெளி வீராங்கனை ஹெலன் ஷர்மன்  "பூமிக்கு அப்பாற்பட்ட வேற்று கிரக உயிரினங்கள் நம்முடன் இதே பூமியில் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் அவை நம்மை போல் கார்பன், நைட்ரஜன் சேர்ந்த கலவையாக இல்லாமல் வேறு புதிய கலவையாகவும் நமது கண்களுக்கு புலப்படாததாகவும் இருக்கலாம்" என்று  சொன்னதை இங்கே ஒப்பிட்டுப் பார்த்தால் வேற்றுக்கிரகவாசிகளோ, ஆவி போன்ற சக்திகளோ, ஏன்! கடவுளே கூட நம்முடன் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு சக்தியும் தனித்தனி பரிமாணங்களில் இயங்குவதாக நினைக்கிறேன். முப்பரிமாண உலகத்தில் மனிதர்களும் மேலும் சில பரிமாணங்களில் ஆவி போன்ற சக்திகளும் அதற்கு மேற்பட்ட உயர் பரிமாணங்களில் கடவுள் போன்ற சக்திகளும் கூட இருக்கலாம். நமக்குள் ஏற்படும் சில உயிர் வேதியியல் (biochemical reactions) மாற்றங்கங்களால் சாதாரண மனிதக் கண்களுக்குப் புலப்படாத விஷயங்களுயும் ஒரு சிலருடைய கண்களுக்கு மட்டும் தென்படலாம். அதில் சிலருக்கு கடவுள் போன்ற உயர் பரிமாணங்களும், சிலருக்கு தீய சக்திகளும் கூட தெரியாதத் தொடங்கலாம். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்று நமக்குத் தெரியுமா? அவர் குணமான பின்பு 'நீ யாருடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாய்?' என்று கேட்டால், அவரால் பதில் சொல்ல முடியுமா? கடவுளைப் பார்த்ததாகச் சொல்பவருக்கும் இதே நிலை தானே? இவை எல்லாவற்றுக்குமே அடிப்படை 'குண்டலினி சக்தி' தனது நிலையிலிருந்து கிளம்புவதே என்று உறுதியாக நம்புகிறேன்.அப்போது நமது விழிப்புணர்வு  (consciousness) சமநிலையிலிருந்து  மாறுபடுகிறது.

 

பூமி அண்டத்தில் உள்ளது. அண்டத்தில் வேறு என்னென்ன உள்ளது?: உங்களது கையை 'வெற்றுக் கை' என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அதையே மைக்ரோஸ்கோப்பின் துணை கொண்டு பார்த்தால் அதில் எத்தனை நுண்ணுயிரிகள் தெரியும்? உங்களது உடலுக்குள் எத்தனை இலட்சம் நுண்ணுயிரிகள் உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம்? அவை இதுவே தான் வாழும் உலகம் என்று நினைத்துக் கொண்டிருப்பது உங்கள் உடலைத் தானே? அதேபோல் 'பூமி அண்டத்தில் உள்ளது. அண்டத்தில் வேறு என்னென்ன உள்ளது?' என்ற சந்தேகம் இருப்பதால் தானே பிற கோள்களை ஆராய விண்கலங்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம்? எனவே  நாம் இன்னும் பார்க்க முடியாத, உணர முடியாத விஷயங்களை முழுதாக ஆராயாது அதில் உண்மை இல்லையென நினைப்பது நிச்சயம் தவறு தானே?